பிரியாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்று நாம் பார்க்க இருப்பது பிரியாணி சுவை கொண்ட குஸ்காவின் செய்முறையை தான். இதனை குறைவான பொருட்களை கொண்டு மிகவும் எளிதாக செய்து விடலாம். ஆனால் சுவையில் குறை இருக்கவே இருக்காது. அதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க….
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம்- 2
சிறிய வெங்காயம்- 6
தக்காளி- 1
இஞ்சி- ஒரு துண்டு
பூண்டு- 7 பல்
பச்சை மிளகாய்- 4
பிரியாணி இலை- 2
பட்டை- 2
கிராம்பு- 4
ஏலக்காய்- 2
ஜாதிக்காய்- சிறிதளவு
கல்பாசி- சிறிதளவு
அன்னாசிப்பூ- 2
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
மல்லி தூள்- 1 தேக்கரண்டி
நெய்- 3 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- சிறிதளவு
புதினா- ஒரு கையளவு
தயிர்- 1/4 கப்
பாஸ்மதி அரசி- 1 கப்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
குஸ்கா செய்ய முதலில் ஃபிரஷான மசாலாவை அரைத்து கொள்ளலாம். அதற்கு ஒரு வானலை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு 6 சின்ன வெங்காயம், ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு அன்னாசிப்பூ, சிறிதளவு துருவிய ஜாதிக்காய், 4 பச்சை மிளகாய், நறுக்கிய சிறிய துண்டு இஞ்சி, 7 பல் பூண்டு, சிறிதளவு கொத்தமல்லி தழை, ஒரு கையளவு புதினா இலை ஆகியவற்றை போட்டு வதக்கி ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.
ஆற வைத்த இந்த கலவையை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு அன்னாசிப்பூ, சிறிதளவு கல்பாசி, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய ஒரு தக்காளி, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லி தூள், 1/4 கப் தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த ஃபிரஷான மசாலா சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி 30 நிமிடங்களுக்கு முன் ஊற வைத்து அதனையும் சேர்த்து கிளறவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஆவி வந்த பிறகு விசில் போட்டு மிதமான சூட்டில் இரண்டு விசில் வரவிட்டு அடுப்பை அணைத்து விடலாம். கடைசியில் சிறிதளவு மல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.