ஒரு மனிதனுக்கு சாப்பாடு, வேலை, பணம் இவையெல்லாம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நிம்மதியான தூக்கமும் முக்கியம். இன்றைய காலக்கட்டத்தில் பிற அத்தியாவசியங்கள் அனைத்தையும் பணத்தால் பெற முடிந்த ஒருவரால் நிம்மதியான தூக்கத்தை மட்டும் பெற முடியவில்லை. நிம்மதியான தூக்கம் ஒன்றே, ஒருவரை நீடித்த ஆயுளுடனும், ஆரோக்கியமான உடலுடனும் வைத்திருக்கும். என்ன மருந்து சாப்பிட்டாலும் தூக்கம் மட்டும் வரவில்லை என புலம்புவோர் ஏராளம். அப்படிப்பட்டவர்களுக்காக தான் இப்போது ஒரு ரகசியம் சொல்ல போகிறேன். செலவே இல்லாமல், நிம்மதியான தூக்கத்தை பெறுவதற்கான வழி தான் அது வாருங்கள் சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்…
ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அதற்கு நித்திரை யோகா உதவும். யோகாசனங்களிலேயே, ஒரு நிதானமான நிலையை கொண்டது தான் நித்திரை யோகா. ஆனால், இதில் கிடைக்கும் பலன்களோ ஏராளம். ஒவ்வொரு முறை நித்திரை யோகாவை செய்யும் போதும், உங்களது மனமானது அமைதியான நிலைக்கு சென்று ஆழ்ந்த தூக்கத்திற்குள் அழைத்து சென்றுவிடும். சாதாரண தூங்கும் நிலையில், மனதை ஆழ்ந்த நிலைக்கு அழைத்து செல்லும் ஒரு சக்தி வாய்ந்த முறை தான் இந்த நித்திரை யோகா. ஒருவர் சுயநினைவில் இருக்கும் போது, ஆழ்ந்த தூக்கத்தின் பலனை எளிதாக பெற்றிடலாம். மிகவும் சுலபமான யோகாவான இதனை செய்வதன் மூலம் மனதிற்கும், உடலிற்கும் நல்ல பலனை பெற்றிட முடியும்.
நித்திரை யோகாவானது, ஒருவர் எழுந்திருக்கும் போதே, அவரது ஆழ் மனது மற்றும் மயக்க நிலை வழியாக வழிநடத்தக்கூடியது. இங்கே, நித்திரை யோகாவினால் கிடைக்கக்கூடிய பிற நன்மைகள் என்று வல்லுநர்களே கூறியவை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்…
தூக்கத்தை தூண்டும்
தூக்கமின்மை தான் உடலின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைகிறது. பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் முதல் மனஅழுத்தம் வரை அனைத்து பிரச்சனைகளுக்கு தூக்கமின்மை தான் காரணம். ஒவ்வொரு நாளும் போதுமான தூக்கம் என்பது ஆரோக்கியமான உடல் நலனுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று. தினசரி தூங்குவதற்கு முன்பு நித்திரை யோகா செய்து விட்டு, தூங்கினால் நல்ல தூக்கத்தை பெற்றிடலாம். இதனை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், இடது மற்றும் வலது மூளைகளுக்கிடையே சமநிலையை உருவாக்கி அலைநீளங்களை மெல்ல மெல்ல குறைத்திடும்.
இன்றைய பரபரப்பான உலகில் மனஅழுத்தம் என்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அதனால் தான் நித்திரை யோகாவை செய்வது மிகவும் தேவையான ஒன்று என்று கூறுகிறோம். இதன்மூலம், உடலின் உணர்வுகளை தெரியப்படுத்தி, மனஅழுத்தத்தை குறைத்திட உதவும். சர்வதேச யோகா இதழில் வெளியான ஆய்வின் அடிப்படையில், தொடர்ந்து நித்திரை யோகாவை பயிற்சி செய்வதன் மூலம், மனஅழுத்தம் குறைந்து, பதற்றம் மற்றும் மனசோர்வு நீங்குவது தெரிய வந்துள்ளது.
நாள்பட்ட வலிகளை குறைக்கும்
நாள்பட்ட வலிகளை குறைக்கும்
நாள்பட்ட வலியால் அவதிப்படுபவர்கள் நித்திரை யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் வலி குறைவதை உணர்ந்திடலாம். வல்லுநர்களின் கூற்றின் படி, நித்திரை யோகாவானது, உடலுக்கு ஓய்வெடுக்கவும், மீட்டெடுக்கவும் நேரம் அளிக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, வீக்கத்தை குறைத்திடும். வலி இருக்கும் பாதையில், நோய்எதிர்ப்பு செல்களை செலுத்தி அழற்சி எதிர்ப்பு திறன் மூலம் காயத்தை விரைந்து குணப்படுத்திட உதவும்.
டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகளை குறைத்திடும்
டைப் 2 நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்நாள் நோயாகும். இது உங்கள் உடலை இன்சுலின் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கிறது. டைப் -2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள நித்திரை யோகா நிச்சயம் உதவும். ஏனென்றால், இந்தியன் ஜர்னல் ஆஃப் சைக்காலஜி அண்ட் பார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், நித்திரை யோகா நீரிழிவு நோயின் அறிகுறிகளை போக்குவதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதும் தெரிய வந்துள்ளது.
உள் மனதுடன் இணைக்கும்
நித்திரை யோகா செய்வதன் மூலம், மனதில் ஒரு அமைதியை நிலைநிறுத்தி, ஆன்மாவுடன் கலந்து, உள் மனத்துடன் இணைய செய்திடும். தீய எண்ணங்களிடம் இருந்து மனதை காத்து, சாந்தப்படுத்துவதற்கான ஒரே வழி தான் நித்திரை யோகா. இந்த யோகா பயிற்சி செய்ய தொடங்கிய பின்பு, தேவையற்ற செயல்களை புறக்கணிக்க தொடங்குவதை நீங்களே உணரலாம்.
அதிர்ச்சியில் இருந்து மீள உதவும்
வாழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவங்களில் இருந்து மீள முடியாமல் தினந்தோறும் அவதிக்குள்ளாகுபவர்களை நிறைய பார்த்திருப்போம். சில அறிக்கைகளின் அடிப்படையில், நித்திரை யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் மனமானது, ஆழ்ந்த மற்றும் அமைதியான ஓய்வை பெறுகிறது. ஒரு ஆய்வறிக்கையின்படி, அதிர்ச்சி சம்பவங்களால் மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள், அதிலிருந்து வெளிவர நித்திரை யோகா உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது.
நித்திரை யோகா செய்வது எப்படி?
* ஒரு தெளிவான நோக்கத்தைத் தேர்ந்தெடுத்து, முதுகு கீழே படும் படி நேராக படுத்துக் கொள்ளவும்.
* இருபுறமும் கைகளை பக்கவாட்டில் நீட்டிக் கொள்ளவும்.
* கண்களை மூடி ஆழ்ந்த சுவாசங்களை எடுத்துக் கொள்ளவும்.
* இப்போது, வலது காலை கவனிக்கத் தொடங்கவும்.
* முதலில், வலது காலின் கீழிலிருந்து படிப்படியாக, முழங்கால், தொடை, இடுப்பு மற்றும் முழு காலிலும் கவனத்தை செலுத்துங்கள்.
* மனம் ஒருநிலைப்படுவதை நீங்கள் உணருவீர்கள். மனம் தானாக ஓய்வு நிலைக்கு செல்லும்.
* மனதை ஓய்வெடுக்க கட்டாயப்படுத்தக் கூடாது. அது நித்திரை யோகாவிற்கு எதிரானது.
* இப்போது, வலது காலை போலவே இடது காலிலும் செய்யவும்.
* முழு ஓய்வு நிலைக்கு செல்லும் வரை, உங்களுக்கு போதுமான நேரம் வரை இதனை தொடர்ந்து செய்யவும்.