செதில் செதிலான தோலும் முரட்டு இலைகளுமாக கரடு – முரடாக காட்சியளிக்கும் அன்னாசிப் பழத்தில் அள்ள அள்ளக் குறையாத நல்ல பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன. `வைட்டமின் – சி’ நிறைந்த இந்தப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப் பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.
* சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும்.
* சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
* உதடுகள் அடிக்கடி வறண்டு போய் விடுகிறதா? அன்னாசிப்பழச் சாறு, பீட்ரூட் சாறு இரண்டையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து ஒரு சின்ன பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இந்தச் சாறை பஞ்சில் லேசாகத் தொட்டு உதடுகளில் தடவினால், வெடிப்பு, எரிச்சல் மறைவதுடன் இதழ்களும் ஈரப்பதத்துடன் பளபளக்கும்.
* சிலருக்கு முகத்தில் நீர் கோத்து, வீங்கிப்போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு அருமருந்து. அன்னாசிப்பழச் சாறுடன் தேங்காய்ப் பாலை சம அளவு எடுத்து, இவை கலக்கும் அளவுக்கு பயத்தமாவு சேர்த்து முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவினால் வீக்கம் குறையும். இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான சிகிச்சை எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.
* சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கும்.
வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு. இரண்டு அன்னாசிப்பழத் துண்டுகளுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாகப் பூசி 10 முதல் 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். சுருக்கங்கள் மறைந்து, சங்குபோல் மின்னும் கழுத்து.
* முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிந்து அழகைக் குறைத்துக் காட்டுகிறதா? கவலை வேண்டாம். ஒரு டிஸ்பூன் அன்னாசிப்பழச் சாறுடன் ஒரு டீஸ்பூன் கடலைமாவை கலந்து முகத்தில் பூசி, 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசை நீங்கி, பளிங்கு போல் பளிச்சிடும் உங்கள் முகம், தலைமுடியை பாதுகாப்பதுடன் கண்டிஷனராகவும் செயல்படுகிறது அன்னாசிப்பழம். அரை கப் தேங்காய் துருவலுடன், 2 டீஸ்பூன் வெந்தயப் பவுடர், 2 டீஸ்பூன் அன்னாசிப்பழச் சாறு கலந்து தலையில் தேய்த்துவந்தால், பளபளப்புக் கூடுவதுடன் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* கூந்தல் வெடிப்பைப் போக்கும் சக்தி, அன்னாசிக்கு இருக்கிறது. 2 டிஸ்பூன் பயத்தமாவு, தயிர் எடுத்து இவை கலக்கும் அளவுக்கு தேங்காய்ப்பால், அன்னாசிப்பழச் சாறு சேர்த்து ஷாம்புபோல தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால், வெடிப்பு நீங்கி கூந்தல் பளபளக்கும். தலையில் அதிக எண்ணெயப் பசை இருந்தால் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.