சீனாவிலிருந்து பல நாடுகளுக்கும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் தொற்றைத் தடுத்துக் கொள்ளும் உபாயங்களை இந்திய மருந்துவ முறை மூலம் எவ்வாறு பெறலாம்? பல உயிர்களை ஒரு சேர பலி கொள்ளும் இந்த வைரûஸ நினைத்து உலக நாடுகள் நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இதற்தான தடுப்பு உத்திகள் எவை?
-விஷ்வேஸ்வரன், புதுடில்லி.
ஆபஸ்தம்ப தர்ம ஸூத்திரம் கூறும் ஒரு விஷயம் இங்கு நன்கு பொருந்தும் – “சக்தி விஷயே நமுஹீர்த்தமபி அப்ரயத: ஸ்யாத்” என்கிறது- அதாவது உடலில் சக்தி இருக்கும் நிலையில் ஒரு க்ஷணம் கூட அசுத்தனாக இராதே. கூடிய வரையில் உன்னருகில் அழுக்கு ஒட்டாமலேயே இருக்க முயற்சியுடனிரு.
அழுக்குச் சேர்ந்து விடின் அதை சுத்தம் செய்வதில் தாமதியாதே. உடனுக்குடன் செய் என்று அதற்கு அர்த்தம் கூறலாம். இதையே இன்றைய நவீன ஆராய்ச்சியாளர்களும் 3 அடி பிறரிடமிருந்து தள்ளி நிற்கவும், முகத்திரை அணியவும், பிறரிடம் கை குலுக்கிய பிறகு, கைகளை நன்கு கழுவுவதையும், மிக அருகில் சென்று பேசுவதையும், அணைப்பதையும் தவிர்க்கவும் செய்யச் சொல்கிறார்கள்.
நாம் குடியிருக்குமிடத்தின் உள்ளும் புறமும் சுத்தமாக இருப்பதற்கு காலை, மாலை, சந்தி நேரங்களில் வீட்டினுள் தூபப்புகை காட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டால், வைரஸ் தொற்றைத் தவிர்க்கலாம். சாம்பிராணி, காரகில்கட்டை, சந்தனசிராய், வெள்ளைக் குங்கிலியம், குக்கில், கோரைக்கிழங்கு, விலாமிச்சை வேர், வெல்லம், தேவதாரு, மட்டிப்பால், இவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை காரகில், சந்தனம், கோரைக்கிழங்கு, விலாமிச்சை வேர், தேவதாரு ஆகியவற்றை தனியே இடித்துப் பெருந்தூளாக்கிக் கொள்ளவும். வெள்ளைக் குங்குலியம், சாம்பிராணி, இரண்டையும் தனியே தூளாக்கிக் சேர்க்கவும். மட்டிப்பால், குக்கில் இரண்டையும் 50 கிராம் நெய்யுடன் பிசறிச் சிறிது அனலில் வாட்டி மற்றவற்றுடன் சேர்த்து வெல்லத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடைசியில் தேன் 50 கிராம் சேர்த்துப் பிசறிக் கொள்ளலாம். மட்டிப்பாலையும் சாம்பிராணியையும் இரண்டு மடங்கு சேர்க்க நன்கு மணம் ஏற்படும். இதில் பசுவின் நெய் சேர்ப்பது மிகவும் நல்லது. இது சிறந்த தசாங்க தூபசூர்ணம்.
இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படக் கூடிய காய்ச்சல், இருமல், மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், தும்மல், ஜலதோஷம், தொண்டை வலி, தலைவலி போன்ற நிலைகளில் தன் மூக்கையும் , வாயையும் துணியால் மறைத்து பிறருக்கு பரவச் செய்யாமல் செய்து கொள்வது நலம்.
ராஸ்னாதி சூரணம் எனும் மருந்து தயாரித்து விற்கப்படுகிறது. இந்த சூரணத்திற்குச் சம அளவு ஓமத்தூளும் சேர்த்து துணியில் முடிந்து கொண்டு முகர்வதால் சளி, இருமல் குறையும், வராமலும் தடுக்கும். குழந்தைகளுக்கு உச்சந் தலையில் தேய்த்தால் மட்டும் போதுமானது.
தாளீசபத்ராதி சூரணத்தை 2 – 3 சிட்டிகை அளவு தினம் 2 -3 வேளை தேனில் குழைத்துச் சாப்பிடலாம். சளியும் இருமலும் குறைந்து தெளிவு ஏற்படும்.
துளசியும் மிளகும் வைரஸ் தாக்குதலை நன்கு குறைக்கக் கூடியவை. பத்து துளசி இலையையும் ஐந்து மிளகையும் வாயிலிட்டு மென்று சாப்பிட ஆரம்ப நிலையிலேயே காய்ச்சல் தவிர்க்கப்பட்டு விடும். உடல் கனம் குறைந்து வேதனைகள் நீங்கிவிடும். காய்ச்சல் வந்தபின் மிளகையும் துளசியையும் கஷாயமாக்கி தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். மிளகை துளசிச் சாற்றில் ஏழு அல்லது இருபத்தியோரு நாட்கள் ஊற வைத்து, பிறகு நிழலில் உலர்த்தி அதில் 5 – 10 மிளகுகள் சாப்பிட, குளிர்காய்ச்சல், காணாக்கடி முறைக் காய்ச்சல் முதலியவை நீங்கும். கிராம்பையும் சுக்கையும் துளசிச் சாற்றுடன் அரைத்து நெற்றியில் பூசத் தலைவலி நீங்கும்.
நுரையீரலுக்கு நல்ல பாதுகாப்பும் பலமும் கொடுத்து தாதுவைப் பலப்படுத்தும் தூதுவளையை அன்றாட உணவுடன் சேர்த்து வரலாம். தூதுவளை இலையை (கீரையை) கூட்டு, பச்சடி, துவையல் என்ற விதத்தில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நெஞ்சுச்சளி, இருமல், நீர்க்கோர்வை, உடல்வலி, புளியேப்பம் போன்ற உபாதைகளில் தூதுவளையில் ஒரு பிடியை நன்கு அரிந்து சிறிது பசு நெய்விட்டு வதக்கிச் சாப்பிடலாம். இம் மூலிகையின் முக்கிய குணம் க்ஷயம், காசம், சுவாசம் (ஆஸ்த்மா), நமைச்சல், மதமதப்பு, சீதளநாடி முதலியவற்றை நீக்குவதே.
வியாக்ரயாதி கஷாயம், தசமூலகடுத்ரயம் கஷாயம், வில்வாதி குளிகை, அக்னிகுமாரம் ரஸம் எனும் மாத்திரை, ஆசால்யாதி மாத்திரை, கோரோசனாதி குளிகை, ஹரித்ராகண்டம், வியோசாதி வடகம் போன்ற மருந்துகளால் வைரஸ் தாக்கத்தைக் குணமாக்க முடியுமா என்ற ஆராய்ச்சியை செய்ய வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். இந்த வைரûஸ அழிப்பதற்கான முயற்சிகளை பல நாடுகள் தற்சமயம் செய்து வருகின்றன.