தற்போது சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி கர்ப்பமாயிருக்கும் பெண்கள் கூட அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்கள் எழுகின்றன. விமானப் பயணம் செய்தால் ஏதாவது ஆகுமா? தனது கருவிற்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா? இரத்தப் பெருக்கு ஏற்படுமா? கருச்சிதைவு ஏற்பட்டு விடுமா? போன்ற பயங்கள் கர்ப்பிணிகளுக்கு இயற்கையாகவே ஏற்படுகின்றன.உண்மை என்னவென்றால் கரு வலுவாக, ஆரோக்கியம் உள்ளதாக இருந்தால், வீதியிலோ, வானத்திலோ எந்த விதமான பயணங்கள் செய்யும்போது தாய்க்கோ, வயிற்றில் வளரும் கருவிற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. எந்தப் பிரயாணத்தையும் தாக்குப் பிடிக்கக் கூடிய சக்தி சாதாரண கர்ப்பத்திற்குண்டு.ஆயினும் சில உடல் பலமில்லாத நோயுள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதே. உதாரணமாக கடுமையான இரத்தசோகை உள்ளவர்கள். குருதி உறையக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் சிக்கிள் செல் எனப்படும் அனீமியா நோயுள்ளவர்கள் இவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடனேயே விமானப் பயணம் செய்ய வேண்டும்.கர்ப்பகாலத்தில் முதல் 12 வாரங்களில் பலருக்கு வயிற்றும் புரட்டு, வாந்தி, களைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் இவற்றிற்காக அவசரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை. மருத்துவரின் ஆலோசனையுடன் வேண்டிய முன்னேற்பாடுகளுடன் பயணிக்கலாம்.
உங்களுக்கு விமானப் பயணம் பற்றிய சில தொழில்நுட்பத் தகவல்கள் தெரிந்திருந்தாலும் உங்களுக்கு விமானப் பயணம் மேலும் பயத்தை ஏற்படுத்தக் கூடும்.
கதிர்வீச்சுகளால் கருச்சிதைவு ஏற்படலாம். அங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். இதனால்தான் கருவுற்றிருக்கும்போது கர்ப்பிணிகளை எக்ஸ்ரே எடுப்பதைக் கூட இயலுமானவரை தவிர்க்கிறார்கள்.
விமானத்தில் உயரப் பறக்கும் போது சூரியனின் கதிர் வீச்சு கூடியளவில் வரும் என்பதால் குழந்தையைப் பாதிக்குமா என உங்களுக்கு சந்தேகம் ஏற்பட கூடும்.
தரையில் இருப்பதை விட வானத்தில் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கவே செய்யும். ஆயினும் அது கருச்சிதைவையோ அங்கக் குறைபாட்டையோ ஏற்படுத்தக் கூடியதாக இருக்காது.
எனவே தயக்கமின்றிப் பயணம் செய்யலாம். கர்ப்பத்தின் எந்தக் காலத்தில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பானது என்று கேட்டால் கர்ப்பத்தின் நடுப்பகுதி என்று தயக்கமின்றிச் சொல்லாம்.
அதாவது 18 முதல் 24 வாரம் வரையான காலம் என்று சொல்லலாம். ஏனெனில் பொதுவாகவே இக்காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.
36 வாரத்திற்கு பின்பு பயணம் செய்வது அவ்வளவு பாதுகாப்பல்ல. பிரசவம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளவர்கள், முக்கியமாக இக்காலகட்டத்தில் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது.