மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கை, கால்களை அசைத்து இடுப்பை வளைத்து வாசல் தெளித்து கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.
நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன்பு, சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கமாக உள்ளது. கோலம் போடுவதற்கும், நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை ஆகும்.
கோலம் போடும் போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின்பு எப்படிக் கோலாகலமாக அழகுடன் இருக்கிறதோ அதுபோல தான் கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதீகம்.
கோலம் எப்போது, எப்படிப் போட வேண்டும்?
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும்.
நம் வீட்டு வாசலில் லட்சுமி வாசம் செய்வதால், புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.
கோலம் போட்டு முடித்ததும் காவியை இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும்.
கோலத்தில், சாணத்தின் பசுமையானது விஷ்ணு பெருமானையும், மாவின் வெண்மையானது பிரம்மாவையும், காவியின் செம்மையானது பரமேஸ்வரரையும் குறிக்கின்றன.
கோலமிட்ட பின்னர் பூசணி, செம்பருத்தி போன்ற மலர்களை அதன் நடுவே வைக்க வேண்டும். இது நமக்கு செல்வச்செழிப்பை தரும்.
பௌர்ணமி நாளன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
கோலத்தின் அனைத்து பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
கோலமிடுபவர்களுக்கு அவர்களையும் அறியாமலேயே சீரான மூச்சுப்பயிற்சி கிடைக்கிறது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிட வேண்டும்.
கோலம் போட்டு முடித்த பிறகே அடுப்பு பற்ற வைக்க வேண்டும்.
ஆள்காட்டி விரலை தவிர்த்து பிற விரல்களை வைத்துதான் கோலமிட வேண்டும்.
தெய்வீக யந்திரங்களை குறிக்கும் கோலங்களை பூஜை அறைகளில் மட்டும்தான் போட வேண்டும். அரிசி மாவிலோ அல்லது மஞ்சளிலோ மட்டும்தான் போடவேண்டும்.
சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளை தடுக்கும் வல்லமைகொண்டது.
மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு இறைவனை தொழுவது, உடலிற்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்திற்கு எண்ணற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
கோலம் போடுவதால் துர்சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாது.
அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.