>எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது.
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.
100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு அன்னாசியில் கால்சியம், பொட்டாஷியம்,மாங்கனீஸ் அதிகளவில் இருக்கிறது. ஒரு கப் பைன் ஆப்பிள் சாப்பிட்டால், நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் மாங்கனீஸில் 73%இதிலிருந்து பெற்று விடலாம். இச்சத்து நம் எலும்பை பலப்படுத்த உதவுகிறது.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த அன்னாசியை அப்படியேயும் சாப்பிடலாம்,பழச்சாறாகவும்,பதப்படுத்தியும் சாப்பிடலாம்.எப்பொழுதுமே எந்தப்பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிட்டால் தான் அதில் இருக்கும் சத்துக்களின் முழுப்பயனையும் அடைய முடியும்.
நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை, மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது.