ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய காதலன் அல்லது கணவனிடம் பெறும் மிகப்பெரிய சலுகைகளில் ஒன்று,
அவர்களுடைய ஆடைகளைத் திருடுவது. தங்களுக்கு சொந்தமானவரின் ஆடை ஒன்றை அணிந்துகொள்வது, நாம் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதைப் போலவே உணரவைக்கிறது. உங்கள் காதலனின் ஆடைகளைக் குறிப்பாக அவரது சட்டை அல்லது ஹூடிஸை அணிவதை நீங்கள் விரும்பும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. உண்மையில், இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகிறது ஆய்வு ஒன்று.
தனிமை மற்றும் பதட்டத்தையும் குறைக்கிறது
பெண்களே நீங்கள் தனிமையில் இருப்பதை போன்று உணர்கிறீர்களா? அல்லது தனிமையால் பாதிக்கப்படுகிறீர்களா? அப்படியென்றால் உங்கள் காதலனின் ஆடையை அணிய நீங்கள் முயற்சி செய்யலாம். அதேபோல நீங்கள் கவலையாக இருந்தாலும் இவ்வாறு செய்யலாம்.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, உங்கள் துணையின் வாசனையை சுமக்கும் அடையை அணிவது மன அழுத்தம், தனிமை மற்றும் பதட்டம் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. சில நேரங்களில் அதீத அன்பின்போதோ அல்லது உடலுறவின்போதோ கூட காதலனின் ஆடையை எடுத்து அணியும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது.
ஆய்வுகள் கூறுவது
ஆராய்ச்சியாளர்கள் 96 பெண்களை தேர்ந்தெடுத்து, மூன்று நறுமணங்கள் கொண்ட ஆடைகளை ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றனர். அதில் வேறொருவரின் ஆடை, தங்கள் துணையில் ஆடை மற்றும் புதிய ஆடை ஆகியவற்றைக் கொடுத்து அணிய சொல்கின்றனர்.
பெண்களுக்கு தங்கள் துணையின் ஆடைகளை வழங்குவதற்கு முன், அவர்களது துணை 24 மணிநேரமும் அதே ஆடைகளை அணியும்படி செய்யப்பட்டனர். இதனால் அந்த ஆடையில் அவர்களின் வாசனை முழுவதும் நிரம்பியிருந்தது. மன அழுத்தத்துடன் இருக்கும்போது, அந்த ஆடையை அணியும்படி அப்பெண்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
குறைந்த அளவிலான மன அழுத்தம்
பெண்கள் தங்களுடைய துணையின் ஆடைகளை அணிந்த பிறகு, ஒரு போலியான வேலையினால் அவர்களுடைய மன அழுத்தம் உயருமாறு செய்யப்பட்டது. அப்போது, ஆராய்ச்சியாளர்கள் மன அழுத்தம் மற்றும் கார்டிசோல் அளவை பதிவு செய்தனர்.
சுவாரஸ்யமாக, தங்கள் துணையின் நறுமணத்தைத் தாங்கிய ஆடைகள் அணிந்த பெண்கள் குறைந்த மன அழுத்த அளவையே கொண்டிருந்தனர். அதேசமயம், புதிய ஆடையையும்,வேறொருவருடைய ஆடையை அணிந்திருந்த பெண்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தனர்.
தங்கள் துணையின் படுக்கையில் ஏன் தூங்குகிறார்கள்
பல பெண்கள் தங்களுடைய காதலன் அல்லது கணவனைப் பிரிந்து இருக்கும்போது அவர்களின் சட்டையை அணிந்துகொள்கிறார்கள் அல்லது அவர்களின் படுக்கையில் தூங்குகிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் இந்த நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உணரமுடியாது.
தங்கள் துணை உடன் இல்லாவிட்டாலும், அவர்களின் வாசனையை மட்டும் எப்போதும் பெண்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்
ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, இந்த கண்டுபிடிப்பு மக்களின் மன அழுத்தச் சூழ்நிலைகளைச் சமாளிக்க பெரிதும் உதவுகிறது. உலகமயமாதலினால், ஆண், பெண் இருவரும் வேலைக்காக வெகுதூரம் பயணம் மேற்கொள்கின்றனர். புதிய நகரங்களுக்குச் செல்கிறார்கள். அப்படி வெகுநாட்களாக உங்கள் துணையை பிரிந்திருக்க வேண்டிய போது, அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் எடுத்துக்கொண்டு செல்லலாம்.
இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். பெண்களே, உங்கள் காதலனின் ஆடையை ஆசையுடன் அணிவதால், உங்களுக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்துகொண்டதால், இனி தாராளமாக நீங்கள் அவர்களுடைய ஆடையை அடிக்கடி அணியலாம்.