ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பவர்களின் எலும்புகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் சிறிய விபத்து நேர்ந்தால் கூட உடனே எலும்பு முறிவு நேரலாம்.
இந்த எலும்பு முறிவு என்பது தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு வலியை தரக்கூடியது. இத்தகைய எலும்பு முறிவை சரி செய்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல, சிறிய அளவிலான முறிவாக இருந்தால் வாரக் கணக்கிலும், பெரியதாக இருந்தால் மாதக்கணக்கிலும் அதனை சரி செய்வதற்கான கால அவகாசம் கூடும்.
அத்தகைய தருணத்தில் பிறரின் உதவியின்றி எந்த ஒரு சிறிய செயலையும் செய்ய முடியாமல் அவதிப்படுவது மிகவும் கடினமான ஒன்று. அப்படி ஏதேனும் எலும்பு முறிவு ஏற்பட்டால் நாம் உண்ணும் உணவின் உதவியுடன் சீக்கிரம் அதனை சரிசெய்து விடலாம். வாருங்கள் அவற்றைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்…
கால்சியம் நிறைந்த உணவுகள்
எலும்புகளுக்கு சத்து என்றாலே அது கால்சியம் என்று அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அத்தகைய கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. எனவே, யாருக்கேனும் எலும்பு முறிவு ஏற்பட்டால் அவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். கால்சியத்தை தவிர, வைட்டமின் பி6, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே ஆகியவை கூட முக்கியமானவை. மேலும், தாதுக்களாக காப்பர், பாஸ்பரஸ், மங்னீசியம் மற்றும் சிலிகான் போன்றவை கூட எலும்புகள் இணைவதற்கு உதவக்கூடியவை. எனவே, எலும்பு முறிவு ஏற்பட்டால் ப்ராக்கோலி,காலிஃப்ளவர், முட்டைகோஸ், பச்சை காய்கறிகள், சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி டயட்
வைட்டமின் சி எலும்புகளுக்கு மிகவும் முக்கியமான சத்து. எனவே, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது, எலும்பு முறிவால் ஏற்பட்ட உட்காயங்கள் குணமாகி, எலும்புகள் சீக்கிரம் இணைந்துவிடும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் என்றால், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, கிவி, முட்டைகோஸ் போன்றவை.
ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவுகள்
உடலினுள் உட்காயங்களை அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால் பிரச்சனை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சாதாரணமாக எலும்பு முறிவு சரியாவதற்கான காலஅவகாசம், மேலும் அதிகரிக்க கூட வாய்ப்புள்ளது என்பதால் அது போன்ற உணவுகளை தவிர்ப்பதே சிறந்தது. ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் என்றால், சர்க்கரை, இறைச்சி, பால் பொருட்கள், பதப்படுப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் ஆகும். இவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழம் நிறைய சாப்பிட வேண்டும். ஏனென்றால், காயங்களை விரைந்த குணப்படுத்தவும், வீக்கங்களை சரிசெய்யவும் அன்னாசிப்பழம் மிகவும் உதவும். அன்னாசியில் சிறப்பு சத்தான ப்ரோமெலைன் உள்ளது. இது வீக்கத்தை போக்குகிறது. அதோடு மட்டுமல்லாமல், அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. ஆனால் நீங்கள் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ப்ரஷ் அன்னாசிப்பழத்தை தான் சாப்பிட வேண்டுமே தவிர, பதப்படுத்தப்பட்ட, சில நாட்களுக்கு முன்பு நறுக்கி வைத்த பழங்களை சாப்பிடக்கூடாது.
டீ, காபி அதிகமாக வேண்டாம்
டீ, காபி அதிகமாக குடித்தால் காயம் குணமாவது தாமதப்படும். எலும்பு முறிவு சரியாக வேண்டுமென்றால், காபி, டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். இதுமட்டுமல்லாது கார்போனேற்றப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதை தவிர்த்திடவும். காஃபெயின் மற்றும் கார்போனேற்றப்பட்ட தண்ணீர் பல்வேறு எனர்ஜி பானங்களில் பயன்படுத்தப்படுவதால் அவற்றை குடிப்பதை குறைத்து கொண்டால் எலும்பு முறிவு விரைவில் குணமாகும்.