எனக்கும் என் கணவருக்கும் இடையில் சின்னச் சின்ன பிரச்னைகள் வந்தாலும், உடனே என் அம்மா, `நாங்கள் பார்த்த மாப்பிள்ளையை மணந்திருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா’
என்கிறார். அவருடைய பெற்றோரோ, `வாடகை வீட்ல வாழணும்னு உனக்கு தலையெழுத்தா, உன் மாமா பொண்ணை கல்யாணம் செஞ்சிருந்தா நிறைய சொத்து சுகத்தோடு ஓஹோன்னு வாழ்ந்திருப்பே…’ என்கிறார்கள். நானும் கணவரும் தனியாக இருந்த காலத்தில் சின்னச் சின்ன செல்ல சண்டைகளுடன் நிம்மதியாக இருந்தோம். ஆனால், எங்களுடைய பெற்றோர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்ததிலிருந்து சீரியஸாக சண்டை போட ஆரம்பித்திருக்கிறோம். இது எங்குபோய் முடியுமோ என்று பயமாக இருக்கிறது.
– பெயர் சொல்ல விரும்பாத சென்னை வாசகி
couple
பதில் சொல்கிறார் உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்:
“பிள்ளைகள் மீதான பெற்றோரின் அடிப்படை உளவியலை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். `என் பிள்ளை நல்லபிள்ளைதான். வந்ததுதான் சரியில்லை’ என்பதுதான் பொதுவாக பெற்றோர்களின் நினைப்பு. பெண்ணைப் பெற்றவர்கள், மகனைப் பெற்றவர்கள் என இருவருக்குமே இது பொருந்தும். எங்கேயோ ஒரு சில நியாய, அநியாயம் தெரிந்த பெற்றோர்கள் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். இது ஒருவகையில் பாசம் கண்ணை மறைக்கிற விஷயம்தான். அதனால், நீங்கள் திருமண வாழ்க்கையில் வருகிற சின்னச் சின்ன பிரச்னைகளை பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்வதை தவிர்க்கலாம்.
நீங்கள் இருவரும் பெற்றோர்களின் சம்மதமில்லாமல் திருமணம் செய்திருக்கிறீர்கள். உங்களுடைய பிரச்னைகளைப் பற்றி அவர்களிடம் சொன்னதால், அது அவர்களுக்கு, உங்களைக் குத்திக்காட்டுவதற்கான வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதற்கு பதில், கணவருக்கும் உங்களுக்குமிடையே பிரச்னை வருகிறது என்றால், அதை நீங்களிருவரும் கலந்து பேசி தீர்வுக் கண்டு விடுங்களேன்.
கணவனோ, மனைவியோ தன் இணையைப் பற்றி பெற்றோரிடம் பேசும்போது, அவர்களைப்பற்றிய பாசிட்டிவ் விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவதுதான் புத்திசாலித்தனம். அப்போதுதான் அவர்களால், மருமகளைப் பற்றியோ, மருமகனைப் பற்றியோ குறை சொல்ல முடியாது. உங்களுக்கு மட்டுமல்ல, திருமணம் முடித்த அத்தனை இளம் தம்பதியருக்குமே இந்த ரகசியத்தை நான் சொல்ல விரும்புகிறேன்.
‘என் பிள்ளை நல்லபிள்ளைதான். வந்ததுதான் சரியில்லை’ என்பதுதான் பொதுவாக பெற்றோர்களின் நினைப்பு. பெண்ணைப் பெற்றவர்கள், மகனைப் பெற்றவர்கள் என இருவருக்குமே இது பொருந்தும்.
உங்கள் கேள்வியிலிருந்து நான் புரிந்துகொண்டது, உங்கள் கணவர் வீட்டைப் பொறுத்தவரை பணத்தைப் பெரிதாக நினைக்கிறார்கள். உங்கள் வீட்டைப் பொறுத்தவரை ‘என் பேச்சைக் கேட்கலை’ என்கிற வருத்தம் இருக்கிறது. இதற்குத் தீர்வு, நீங்களே கேள்வியில் குறிப்பிட்டதுபோல உங்கள் கணவருடனான சின்னச் சின்ன பிரச்னைகளை பிறந்த வீட்டில் சொல்வதைத் தவிர்த்துவிடுங்கள். உங்கள் கணவர், ‘பணத்தைவிட என்னை நேசித்தவளின் அன்புதான் பெரிது’ என்பதை அவருடைய பெற்றோரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும்.”