கால் மீது கால் போட்டு அமர்வது, குதிகாலைத் தரையில் அழுத்திச் சுழற்றி முட்டியில் சுளுக்கு எடுப்பது, நிற்கும் நிலை, அமரும் நிலை தவறாக இருப்பது, ஒரே நிலையில் நீண்ட நேரம் இருப்பது ஆகியவற்றால் மூட்டு பாதிப்படையலாம்.
உடல் எடைக்கும், மூட்டு வலிக்கும் நேரடித் தொடர்பு உண்டு. உடல் பருமன் காரணமாக முழங்கால் மூட்டுக்கு அழுத்தம் உண்டாவதால், வலி ஏற்படுகிறது. சில எளிய பயிற்சி மூலம் தொடைப் பகுதி தசைகளுக்கு வலுகூட்டினால், அவை மேல் முழங்கால் மூட்டினை இழுத்துப் பிடித்து கீழ் மூட்டுடன் உரசுவதைத் தவிர்த்துவிடும்.
இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தால், 1 மாதத்தில் வித்தியாசத்தைக் காணலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். வலது காலை சற்று முன்னே நிறுத்தி, (படத்தில் உள்ளபடி) குதிகாலால் ஊன்றவும்.
உடலின் மேல் பகுதியை முன் நோக்கி வளைக்க வேண்டும். 10 முதல் 30 நொடிகள் அதே நிலையில் இருந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியை இடது மற்றும் வலது பக்கத்துக்கு முறையே 5 முதல் 7 தடவை வரை செய்ய வேண்டும்.