உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் தருவதில் பெரும் பங்கு வகிப்பது சிறு தானியங்கள். நம்மிடம் பெரும் பொருட்செலவில்லாமல் இயற்கையாக கிடைக்கும் சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவற்றை முறையாக உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவை அனைத்தும் உடலுக்கு ஆற்றலை தரக்குடியவை. புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது. இவற்றை உண்பதால் நீரிழிவு, பி.பி. உடல் பருமன் போன்ற நோய்களில் இருந்து காத்துக்கொள்ளலாம். வரகு: வரகு தானியம் அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம்.
வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள், தாதுப்பொருட்களும் நிரம்பியுள்ளது. விரைவில் செரிமானமாகி தேவையான சக்தியை கொடுக்கிறது. இது உடல் எடையை குறைக்கும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகை சமைத்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். வரகு, சர்க்கரை அளவு, மூட்டுவலியை குறைக்கிறது.
சாமை: சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிப்பது நார்சத்து. அரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரிழிவு நோய் கட்டுப்படுத்தவும், வராமலும் தடுக்கும். இதில், இரும்புச்சத்து அதிகம். ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பு குறைவு. இளம்பெண்களின் முக்கிய உணவு. முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் மலச்சிக்கல் ஒரு பெரும் பிரச்னையாக இருக்கும். மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை. வயிற்று கோளாறுக்கு சாமை நல்ல பலன் தரும். கம்பு: இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. கம்பை கஞ்சியாக்கியும் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்தும் சாப்பிடலாம். இரவு நேரங்களில் தூங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள், அதிக வெப்பமான பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிகளவு உஷ்ணத்தை கம்பு போக்குகிறது. மனச்சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பு உதவுகிறது.
அஜீரணக் கோளாறு நீங்கும். வயிறு, வாய்ப்புண்னை குணமாக்கும். அரிசியை விட சுமார் 8மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பு தானியத்தில் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை தரலாம். வேறு எந்த தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம். உடல் வலுவடைய கம்பு மிக சிறந்த உணவு. கண் பார்வையை தெளிவாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும். இளநரையை போக்கும்.
குதிரைவாலி: குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் அடங்கியுள்ளது. ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. கோதுமையை விட 6 மடங்கு நார்ச்சத்து உள்ளது. இதனை உண்பதால் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது. உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும்.
திணை: தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது இதயத்தை பலப்படுத்தும். பசியை உண்டாக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிந்தனை தெளிவாக இருக்கும். சிந்தனை தெளிவாக இருந்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே ஆரோக்கியமான உணவை உண்டு ஆரோக்கியத்தை காத்து மகிழ்ச்சியுடன் இருப்போம்.