அழகு குறிப்புகள்

நம் பாதங்களை எவ்வாறு காத்துக்கொள்வது?

paatham

முகத்திற்கும் தலை முடிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்கள் மற்றும் பாதங்களுக்கு நாம் அவ்வளவாக கொடுப்பதில்லை, இதனால் கால்களில் வறண்ட சருமம், சொரசொரப்பான பாதம், பித்த வெடிப்பு, கால் ஆணி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பித்த வெடிப்பு என்பது அழகுப் பிரச்னையாக மட்டுமின்றி ஆரோக்யம் சார்ந்த பிரச்னையாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த பாத வெடிப்புகள் ஏன் ஏற்படுகிறது? இந்த பிரச்னை ஏற்படாமல் நம் பாதங்களை எவ்வாறு காத்துக்கொள்வது? என கால்களையும் பாதங்களையும் பாதுகாக்க சில ஆலோசனைகளை சொல்கிறார் சரும நல மருத்துவர் மணிமேகலை.

”பொதுவாக, சருமம் வறண்டு போகும்போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும்.

அதனால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகும். இதனை பொதுவாக நாம் ‘பித்த வெடிப்பு’ என்று நடைமுறையில் சொல்வோம்.

இது மட்டுமின்றி வேறு சில பிரச்னைகளாலும் பாதங்களில் வெடிப்புகள் ஏற்படலாம். அவைகள் என்னென்னவென்று பார்ப்போம்.

paatham

Ichthyosis

ஒரு சிலருக்கு இயல்பாகவே பாதங்களும், உள்ளங்கைகளும் தடித்துக் காணப்படும். காலின் வெளிப்புறத்தோல் மீன் செதில்கள் போல் இருக்கும்.

இதனை Ichthyosis இக்தியோஸிஸ் அதாவது Fish Scale appearance என்போம். இது மரபியல் ரீதியாக ஏற்படும். பெற்றோருக்கு இந்த பிரச்னை இருந்தால், குழந்தைகளுக்கு Ichthyosis வர வாய்ப்புண்டு.

இவர்களுக்கு சரும வறட்சியும் அதிகமாக இருக்கும். தோல் தடித்தும் வறண்டும் இருப்பதால் எளிதாக குளிர்காலங்களில் இவர்களுக்கு பாதவெடிப்புகள் ஏற்படும்.

சோரியாஸிஸ்

சோரியாஸிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு பனிக்காலம் அதிக தொல்லைத் தரக்கூடிய ஒன்றாக அமைந்துவிடும். அந்த சமயத்தில் அவர்களுக்கு சோரியாஸிஸ் நோயின் தீவிரம் அதிகரிக்கும்.

அதுவும் பனிக்காலத்தில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தான் இந்த பிரச்னை அதிகமாகும். இதன் காரணமாக பாதங்களில் வெடிப்புகள் ஏற்படும். உள்ளங்கால் மற்றும் பாதங்களின் ஓரங்களிலும் வெடிப்புகள் உண்டாகும்.

சோரியாஸிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களை விடவும் அதிகளவில் வெடிப்புகள் ஏற்படும். பாதங்களின் உள் சதையே வெளியே தெரியும் அளவிற்கு ஆழமான வெடிப்புகள் ஏற்படும்.

அதனால் அங்கே பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். எனவே, அவர்கள் மருத்துவ ஆலோசனையின்படி வெளிப்புறத்திற்கு ஆன்டிபயாட்டிக் கிரீம்களை பயன்படுத்த வேண்டும், அத்துடன் ஆன்டிபயாடிக் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய்

பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். பாதங்களை முறையாக பராமரிக்காத பட்சத்தில் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு, பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்படும்.

விரல்களுக்கு நடுவில் கூட சிலருக்கு வெடிப்பு ஏற்படலாம். இதனால் அந்த இடம் சிவந்து போகும். வீக்கம் ஏற்படும். வலியும் அதிகமாக இருக்கும்.

இதனை செல்லுலைட்டீஸ் (Cellulitis) என்போம். இதனை ஆரம்பத்திலே கவனிக்காமல் விட்டால் அவை கணுக்காலை தாண்டி கால்களுக்கும் பரவும் வாய்ப்புகள் அதிகமாகும். எனவே, பாதங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பாத வெடிப்புகள் நீங்க என்ன செய்யலாம்?

வரும்முன் தடுப்போம் நடவடிக்கையாக, பாதங்கள் வறண்டு போகாமல் முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும். முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும்.

கால்களில் தோல்பகுதி வறண்டு காணப்பட்டால் இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால் மிருதுவாக மாறுவதோடு வெடிப்பு ஏற்படாமல் இருக்கும்.

கால்களை அவ்வப்போது மசாஜ் செய்து வந்தால் எந்த பிரச்னைகளும் ஏற்படாது. இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கால்களை சில நிமிடங்களுக்கு வைத்திருந்து கால்கள் சுத்தமான பின் எடுத்து துடைக்க வேண்டும்.

இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மற்றும் விரலிடுக்கில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் பாதங்கள் மென்மையாகும்.

மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை படிக்கல்லால் (Pumice stone) பாதங்களின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் சீராவதோடு வெடிப்புகளும் நீங்கும்.

மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும். வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

தினமும் பாதங்களில் மாய்ச்சரைசிங் க்ரீம்களை தடவிக் கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படுவதால் வெடிப்புகள் உண்டாகாது.

மாய்ச்சரைசர்கள் பயன்படுத்தும்போது சருமம் சற்று ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். குளித்த உடன் ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ச்சரைசரை தடவ வேண்டும். அப்போது தான் இது தோலின் அடி ஆழம் வரை சென்று நல்ல பலனைக் கொடுக்கும்.

ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ ஆயிலும் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் தடவி வரலாம் அல்லது இவற்றை மாற்றி மாற்றி ஒரு நாள் க்ரீம், ஒரு நாள் ஆயில் என்றும் தடவி வரலாம்.

தினசரி உபயோகத்திற்கு காலணிகள் வாங்கும்போது அதி உயரமான காலணிகள் ஹீல்ஸ் வைத்த காலணிகள் வாங்கக்கூடாது.

மென்மையான காலணிகளையே அணிய வேண்டும். வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் கண்ட மருந்துகளை எல்லாம் தடவுவது சரியான தீர்வு அல்ல.

நீரிழிவு நோயாளிகளை பொறுத்தமட்டில் பாதங்களில் வெடிப்புகள் வராமல் இருக்க, முதலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அத்தோடு பாதங்களின் பராமரிப்பும் மிக அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் சரியான காலணிகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது மட்டுமல்லாமல் வீட்டிற்கு உள்ளேயும் காலணிகள் கட்டாயம் அணிய வேண்டும்.

அதற்கென பிரத்யேகமாக காலணிகள் உபயோகிக்க வேண்டும். பொதுவாக, அனைவருக்குமே பாதத்தில் வெடிப்புகள் சிறிய அளவில் இருக்கும். இது இயல்பானதுதான்.

இத்தகையவர்கள் வெந்நீரில் உப்பு போட்டு கால்களை சுத்தப்படுத்துவது, க்ரீம்கள் தடவுவது போன்றவற்றை செய்யலாம். பாத வெடிப்பு அதிகமாக இருக்கும்போது ஒயிட் பீல்ட் க்ரீமை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம்.

யூரியா சேர்த்த மாய்ச்சரைசிங் க்ரீம்கள் போன்றவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், வெடிப்பு அதிகமாகும் பட்சத்தில் கட்டாயம் மருத்துவரை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் எடுப்பது நல்லது. அவரின் பிரச்னையின் அளவைப் பொறுத்து மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.

ஆரோக்கியமான கால்களே அழகான கால்கள். கால்களை நன்கு பராமரித்தால்தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, கால் பாதங்களை சுத்தமாகவும், சரியான முறையிலும் பராமரிப்பது அவசியம்” என்கிறார்.

பாத வெடிப்பை சரி செய்ய சில எளிய வழிமுறைகளை செய்தாலே போதும் என்று அதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார் சித்த மருத்துவர் அபிராமி.”உடலில் பித்தம் அதிகமாகும் போது உடல் சூடு அதிகரிக்கும்.

அதனால் பாதங்கள் ஈரப்பதம் குறைந்து வறண்டுபோய் அந்த இடத்தில் வெடிப்பு உண்டாகும். அதனை பித்த வெடிப்பு என்கிறோம்.

பொதுவாக, எல்லாருக்கும் இந்த பிரச்னை ஏற்படலாம். ஆனால், ஆண்களை விட பெண்களுக்கு தோல் மென்மையாக இருப்பதால் பெண்களுக்கு இந்த தொல்லை அதிகமாக இருக்கும்.

நாம் நிற்கும்போதும் நடக்கும்போதும் நம் உடல் எடையை தாங்குவது நம் பாதங்கள்தான். அதனால் உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், கால்களில் அழுத்தம் அதிகரித்து பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.

அதிகமான நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டிய வேலை செய்பவர்கள், சதா அலைந்து திரியும் அதாவது நிறைய நேரம் நடக்க வேண்டி இருக்கும் வேலைபார்ப்பவர்கள் (மார்க்கெட்டிங் பெண்கள்) போன்றவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படும்.

கரடுமுரடான இடங்களில் வேலை செய்பவர்கள் அதாவது கட்டிடம் கட்டும் இடங்களில் வேலை பார்ப்பவர்கள் போன்றோருக்கு இந்த தொல்லை ஏற்படும்.

செருப்பே அணியாமல் இருப்பவர்களுக்கும், சரியான செருப்பை அணியாமல் இருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.

பொதுவாக, இளம் வயதினரைக் காட்டிலும் முப்பது வயது தாண்டியவர்களை இது அதிகம் பாதிக்கும். 30 வயதிற்குப் பின் சருமம் ஈரப்பதம் குறைந்துபோகும். அதனால் வறட்சியின் காரணமாக வெடிப்புகள் ஏற்படலாம்.

வெடிப்பு ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள் இவை, மேலும் சில ஆரோக்ய பிரச்னைகளாலும் பாத வெடிப்பு ஏற்படலாம். பித்த வெடிப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்க, நம் உடல் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு, தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.’சிலர் டயட் இருக்கிறேன் பேர்வழி’ என்று போன்ற பால் பொருட்களையும் எண்ணெய் பொருட்களையும் தவிர்த்து விடுவார்கள்.

அவ்வாறு அவற்றை முழுமையாக தவிர்த்து விடாமல் கொஞ்சமாவது பால்பொருட்கள் மற்றும் எண்ணெய்ப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவு (பேலன்ஸ்ட் ஃபுட்) உணவு சாப்பிடுவது அவசியம்.

வெடிப்பு அதிகமாக இருக்கும்போது உணவில் காரம் மற்றும் புளியின் அளவை குறைத்து சாப்பிட வேண்டும். பொதுவாகவே, காபி, டீ அதிகம் குடிக்க வேண்டாம். பதிலாக மோர் குடிக்கலாம். மோர் குடித்தால் பித்தம் குறையும்.

உணவில் கவனம் செலுத்துவது ஒரு பக்கம் என்றால், உடலின் வெளிப்புறத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம். முகத்திற்குக் காட்டும் அக்கறையை கால்களுக்கும் பாதங்களுக்கும் நாம் காட்டுவதில்லை.

பித்த வெடிப்பு ஏற்படாமல் இருக்க பாதங்களை பராமரிப்பதிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குளிக்கும்போது கால் பாதங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

ஃபுட் பிரஷ் அல்லது ஸ்க்ரப்பர் கொண்டு பாதங்களை தேய்க்கும் போது உலர்ந்த செல்கள் உதிர்ந்து அங்கே புது செல்கள் உருவாகும். ப்யூமிக் கற்கள்கொண்டும் தேய்க்கலாம்.

வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வர வெடிப்பு மறையும். ஆழ்ந்த வெடிப்பு இருப்பவர்கள் ரொம்ப ஸ்க்ரப் பண்ணக் கூடாது.

இரவில் வெந்நீரில் கல் உப்பு, எலுமிச்சைச்சாறு, தேன் போன்றவற்றை சேர்த்து அந்த நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.

எலுமிச்சை சுத்தப்படுத்தும் இயல்புடையது என்பதால் பாதங்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்றிவிடும்.

உப்பு நோய்த்தொற்றுகளை தடுக்கும். கிருமிகளைக் கொல்லும். தேன் காயங்களை குணப்படுத்தும் தன்மை உடையது. எனவே, பாத வெடிப்புகள் குறையும்.

பாதங்களின் சருமம் வறண்டு விடாமல் இருக்க, சுத்தப்படுத்திய பாதங்களை துடைத்துவிட்டு பாதங்களில் சோற்றுக்கற்றாழையின் ஜெல் எடுத்து தடவ வேண்டும்.

வீட்டிலே சோற்றுக்கற்றாழை இருந்தால் அதன் சோற்றினை எடுத்து நன்கு தண்ணீரில் அலசிய பின் அதனையும் தேய்க்கலாம்.

இதுபோன்று பாதங்களில் ஈரப்பதத்தைப் பாதுகாக்க மேலும் சில வழிமுறைகளையும் பின்பற்றலாம்.

பாதங்களின் ஈரப்பதத்தை பாதுகாக்க வாசலைன், ஃபுட் கிரீம், மாய்ச்சரைசர்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை விடவும் வீட்டில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெய்களில் எதாவது ஒன்றை ஒரு கிண்ணத்தில் சிறிதளவு ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

சிறிது நேரத்தில் அது கெட்டியாக மாறி விடும். அதனை க்ரீம் போல தினமும் இரவில் படுக்க போகும் முன் பாதங்களில் தடவிக்கொள்ளலாம்.

கிளிஞ்சல் மெழுகு என்றொரு மருந்து நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதனை விளக்கெண்ணெயுடன் கலந்து தடவலாம்.

நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு நாம் அனைவரும் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பது உடல் சூட்டினை குறைக்கும்.

அத்தோடு உடலின் ஈரப்பதமும் பாதுகாக்கப்படும். பாதங்களின் ஈரப்பதத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பான காலணிகளை அணிவதும் மிக அவசியம்.”

Related posts

மூக்கிட்கான அழகு குறிப்புகள்

nathan

வெளியான உண்மை- தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

முகத்தின் அழகை இயற்கையான முறையில் மெருகூட்டுவது எப்படி.!!

nathan

மஹத் மகனா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டார்

nathan

பட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

அக்குள் கருமையைப் போக்க ப்ளீச்சிங்

nathan

பெண்களே தினமும் மேக்கப் போடாதீங்க

nathan

தெரிஞ்சிக்கங்க…இல்லத்தரசிகளுக்கு கை கொடுக்கும் சிறுதொழில்கள்

nathan

அழகு ,கன்னத்தின் அழகு அதிகரிக்க..,BEAUTY INTAMIL

nathan