காலை உணவாக பழங்ளை சாப்பிடுவது மிகவும் நல்லது. பழங்களில் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் அந்த சமயத்தில் செரிமான செயல்பாடு சீராக இயங்கும். பழங்களில் உள்ள அனைத்து சத்துக்களையும் உறிஞ்சு எடுத்துக்கொள்ள உடல் ஒத்துழைக்கும்.
காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பாக அன்னாசி, முலாம் பழம், வாழை, திராட்சை, பெர்ரி, பேரிக்காய், மாங்காய், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம்.
காலை வேளையில் பழங்களை சாப்பிடும் போது, உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருக்கும். குறிப்பாக செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும்.
மதிய உணவு சாப்பிடுவதற்கு முன்பாக பழங்களை சாப்பிடுவது எடை குறைப்புக்கு வழிவகுக்கும். எளிதாக செரிமானம் நடைபெறவும் உதவி புரியும். முலாம் பழம், அன்னாசி பழம், மாதுளை பழம், ஆப்பிள், மாம்பழம், பெர்ரி வகை பழங்களை அப்போது சாப்பிடலாம்.
பழங்களை காலை உணவாக உண்பதால், உடலுக்கு வேண்டிய ஆண்டி-ஆக்ஸிடன்ட் ஆதரவு முழுமையாக கிடைக்கும். காலை உணவாக ஜூஸ் குடிக்க நினைத்தால், பெர்ரி பழங்கள் மற்றும் திராட்சையுடன் தயிர் சேர்த்து அரைத்து, இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்து குடியுங்கள்.
எடையைக் குறைக்க டயட்டில் உள்ளவர்கள், காலையில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் பெர்ரி பழங்கள் மற்றும் வாழைப்பழங்களை சாப்பிடுவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
வேலைக்கு செல்வதற்கு முன்பும், வேலை முடிந்த பின்பும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அது சோர்வின்றி உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு பக்கபலமாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். உணவுடன் சேர்த்து பழங்களை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அப்படி செய்வது செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.
