29.2 C
Chennai
Wednesday, Jan 15, 2025
maladdu thanmai
ஆண்களுக்குஅழகு குறிப்புகள்ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்மருத்துவ குறிப்பு

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்.

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?மகப்பேறு மருத்துவரான ஜெயந்தியிடம் கேட்டோம்…

திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம்.

இந்த குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்… பெண்ணும் காரணமாக இருக்கலாம்.

சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் என பொது காரணிகளும் இருக்கலாம்.

மன அழுத்தம் குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரிஸ், ஃபைப்ராய்ட் கட்டிகள், குழந்தைப் பருவத்தில் பருவம் அடைந்துவிடுவதைப் போலவே 30, 35 வயதிலெல்லாம் மெனோபாஸ் ஏற்படச் செய்கிற ஹார்மோன் கோளாறுகள், காசநோய் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படலாம்.

maladdu thanmai

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பழக்கம், மது, பருமன், விந்தணுக்களின் உற்பத்தி போதுமான அளவு இல்லாமல் போவது, உயிரணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும் வேகம் குறைந்திருப்பது, ஹார்மோன் குறைபாடுகள், மற்ற பாலியல் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

விதைகளில் உற்பத்தியாகிற அணுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் சேர்ந்திருக்கும். இந்த இடத்தில் இருக்கும் ஒரு வால்வு தாம்பத்தியம் கொள்கிறபோது விலகி, விந்தணுக்களை வெளியேற்றும்.

மற்ற நேரங்களில் விந்தணுக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மூடிக்கொள்ளும். இதனால்தான் சிறுநீர் கழிக்கும்போது விந்தணுக்கள் வெளியேறுவதில்லை.

விந்தணுக்கள் பாதுகாக்கப்படும் இந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும்.

இந்த அடைப்பு, வெரிக்கோசிஸ் போன்ற அறுவைசிகிச்சைகள் செய்துகொண்டதின் பக்கவிளைவாகவும் நோய்த்தொற்றுகளின் காரணமாகவும் உண்டாகலாம்.

இக்குறைபாடுகளில் பெரும்பாலானவை விதைப்பையை நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளாததாலேயே ஏற்படுகிறது.

விதைப்பைக்கு ரத்த ஓட்டமும் நாம் சுவாசிக்கிற உயிர்க்காற்றும் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.

அப்போதுதான் அதன் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும் (இது பெண்களின் கருப்பைக்கும் பொருந்தும்).

ஆனால், கொழுப்பு உணவுகள், இறுக்கமான உடைகள், நீண்ட நேரம் பணிபுரிவது, போதுமான தண்ணீர் அருந்தாதது, உடல் சூடு போன்ற காரணங்களால் விதைப்பைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விந்தணுக்களின் தரம் குறைந்து விடுகிறது.

ஹார்மோன் குறைபாடுகளால் விதையில் போதுமான வளர்ச்சி இல்லாததும் காரணமாக இருக்கிறது.

ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையாக, ‘முறையான உணவுமுறையைப் பின்பற்றுங்கள், சுகாதாரமாக இருங்கள், தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அடிப்படை மாற்றங்களைத்தான் முதலில் மருத்துவர்கள் சொல்வார்கள்.

இரண்டாவது கட்டமாக உடல் பரிசோதனை செய்தால், என்ன பிரச்னை என்பதை அறிந்து கொள்ளலாம். பெரும்பாலான மலட்டுத்தன்மையை இந்த இரு கட்டங்களிலேயே சரி செய்துவிடலாம். சரி செய்ய முடியாவிட்டாலும், பல சிகிச்சைகள் அடுத்தடுத்து இருக்கின்றன.

மருத்துவம் பல்வேறு வழிகளிலும் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் குழந்தையின்மை என்பதை பெரிய கவலையாகவோ பிரச்னையாகவோ நினைக்க வேண்டியதில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம்… ஒரே நாளில் பிரச்னையைத் தீர்க்க மருத்துவர் கடவுள் அல்ல என்பதைத் தம்பதியர் புரிந்துகொள்ள வேண்டும்.

கணவன், மனைவி இருவருக்கும் என்ன பிரச்னை என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ற சிகிச்சைகளை செய்ய மருத்துவருக்கு அவகாசம் தேவை.

மருத்துவர் மேல் மொத்த அழுத்தத்தையும் திணித்துவிட்டு, இந்த சோதனை, அடுத்து இன்னொரு சோதனை, இன்னொரு மருத்துவமனை என்று ஓடிக் கொண்டே இருப்பதாலோ, பதற்றப்படுவதாலோ, நாம் எதிர்பார்க்கிற பலன் கிடைக்கப் போவதில்லை.

குழந்தை என்பது மிகவும் சந்தோஷமான, நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தப்போகும் அழகான விஷயம். அந்த நல்ல விஷயத்துக்காகக் கொஞ்சம் காத்திருந்தால் எந்தத் தவறும் இல்லை.

இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், சிகிச்சை பெற்றுக்கொள்ளப் போகும் மருத்துவமனை தரமானதுதானா, சிகிச்சையளிக்கப் போகிறவர் தகுதி பெற்ற மருத்துவரா என்பதை கவனமாகப் பரிசீலனை செய்துகொள்ளுங்கள்.
ஆல் தி பெஸ்ட்!

சில வழிமுறைகள்

* இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது.

அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது.

* ஆண்கள் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

சாதாரண ரத்தப்பரிசோதனை நிலையத்திலேயே இதை செய்துகொள்ளலாம்.

* இன்று ஜீன்ஸ் அணிவது கலாசாரமாகிவிட்டது. குறைந்தபட்சம், அணிகிற ஜீன்ஸ் தளர்வானதாகவாவது இருக்க வேண்டும்.

நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கிறவர்களாக இருந்தால், உடையால் ஏற்படும் அழுத்தமும் இதனால் கூடுதலாகிவிடும்.

ஜீன்ஸ் அணிகிற நேரத்தையும் முடிந்த வரை குறைத்து, மற்ற நேரங்களில் தளர்வான காட்டன் உடைகள் அணிவது நல்லது.

* சிலர் தூங்குகிற நேரங்களில் கூட இறுக்கமான ஆடைகள் அணிந்துகொள்வார்கள். இதனால் விதைப்பைக்குப் போதுமான ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும்.

* லேப்டாப், மொபைல் என்ற எலெக்ட்ரானிக் பொருட்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் நேரடியாக நிரூபிக்கப்படாவிட்டாலும், கவனமாகப் பயன்படுத்துவது நல்லது.

குறிப்பாக, லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது, மொபைல் போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

* உடன்பிறந்தவர்களில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்னை இருந்தால், மற்றவர்கள் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம்.

* சில ஆண்களுக்கு விதைப்பையே இருக்காது. இவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

ஆணுறுப்பில் வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

* புகை, மது ஆகியவை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதால், அப்பாவாக ஆசை உள்ளவர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

*பெண்களில் முறையான மாதவிலக்கு இல்லாதவர்கள், மாதவிலக்கு ஏற்படுவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைவிட பாலிசிஸ்டிக் ஓவரி குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது முக்கியம்!

* முக்கியமாக இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், உங்கள் மருத்துவரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.

Related posts

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

nathan

தூக்கமின்மையால் ஏற்படும் நோய் பாதிப்புகள் : அவதானம்…!!

nathan

இடமகல் கருப்பை அகப்படலம் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

nathan

சில பேர் எவ்வளோ புகைப் பிடிச்சாலும் புற்றுநோய் வராது? அது ஏன்’னு தெரியுமா??

nathan

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!

nathan

வெளியான பட்டியல் ! உலகிலே சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு இது தான்!

nathan

ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கலாம்.

nathan

தொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி

nathan

உங்களுக்கு தெரியுமா தாய்ப்பால் அதிகம் சுரக்க வைக்க அம்மாக்கள் என்ன சாப்பிடலாம் !!

nathan