[ad_1]
மாதம் ஒரு கிலோ எடை குறைக்கலாம் ஈஸியா!
`எடையைக் குறைக்க
வேண்டுமா? இந்த பெல்ட் பயன்படுத்துங்க… இந்த மாத்திரையை சாப்பிட்டால்
ஸ்லிம் ஆகலாம்… இந்த கோர்ஸ் எடுத்தால், இரண்டே வாரங்களில் 10 கிலோ
குறைக்கலாம்’ என எங்கும் எடை குறைப்பு விளம்பரங்கள்தான்.இன்று, நிறைய வீடுகளில், டிரெட்மில்லோ, சைக்கிளிங் மெஷினோ இருக்கின்றன.
தினமும், ஒருவர் காலை ஒருவர் முட்டிக்கொண்டு, வாக்கிங்கோ ஜாகிங்கோ
சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி என்பதைத் தாண்டி,
எடை குறைக்க ஓடுகிறேன் என்பதுதான் பெரும்பாலானோரின் பதில். மக்கள்
தொகையில் பாதிப் பேரின் பிரச்னை, ஓவர் வெயிட்தானோ எனத் தோன்றும்.

உடலில் எடை ஏன் கூடுகிறது, அதிக எடையால் வரும் விளைவுகள் என்னென்ன,
வேகமான எடை குறைப்பு, பாதிப்புகளை ஏற்படுத்துமா, என்கிற சந்தேகங்களுக்குப்
பதில் சொல்கிறார், சென்னை அப்போலோ மருத்துவமனையின் உடல் எடை குறைப்பு
அறுவைசிகிச்சை நிபுணர் ராஜ்குமார் பழனியப்பன்.
யார் யாருக்கு எவ்வளவு உணவு தேவை, எடை குறைப்பவர்கள் எந்தெந்த உணவுகளை
எடுத்துக்கொள்ளலாம், உணவை ஒரேயடியாகக் குறைத்தால் வரும் விளைவுகள்
என்னென்ன, என்பது பற்றி விரிவாக விளக்குகிறார் டயட்டீஷியன் ஷீலா பால்.
உடல் எடையைக் குறைக்க, என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்,
உடற்பயிற்சி செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன, என
விளக்கமாகச் சொல்கிறார் உடற்பயிற்சியாளர் ஜேசு சவரிமுத்து. இயற்கை
முறையில் எடையைக் குறைக்க, இயற்கை மருத்துவர் எஸ்ரா வின்சென்ட் தரும்
டிப்ஸ்…
![]() |
![]() |
உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்:
நம் உணவில் புரதச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு
அதிகமாகவும் இருக்கின்றன. ஆனால், இவையால் கூடும் கலோரிகளை எரிக்கும்
அளவுக்கு, உடல் உழைப்பு இல்லை. இதனால், வயிற்றைச் சுற்றி எளிதில் கொழுப்பு
செல்கள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. தொப்பை வந்துவிடுகிறது.
பொழுதுபோக்கு என்றாலே ஹோட்டலுக்குச் செல்வது, சினிமாவுக்குச் செல்வது,
டி.வி பார்ப்பதுதான். இந்த மூன்றுமே உடல் எடைக்கு வழிவகுப்பவை.தவறான
நேரத்தில் சாப்பிடுவது, முறையற்ற தூக்கம் போன்ற மோசமான வாழ்வியல் முறையும்,
உடல் எடை அதிகரிக்க முக்கியமான ஒரு காரணம். சிலருக்கு, சிறு வயதிலேயே
தோன்றும் மன அழுத்தமும் உடல் எடை அதிகரிக்க ஒரு காரணம்.

கொழுப்புச் சத்து தேவையா?
நமது உடலில், நரம்புகள் மற்றும் எலும்புகளை மறைக்கும் அளவுக்குச்
சதைப்பகுதி இருக்க வேண்டும். இதற்குக் கொழுப்புச் சத்து அவசியம் தேவை.
மனிதர்களுக்கு உடலில் கொழுப்பு 18 சதவிகிதம் இருக்கலாம். நம்முடைய தவறான
உணவுப் பழக்கத்தால் சாதரணமாகவே 18 – 25 சதவிகிதம் அளவுக்கு, உடலில்
கொழுப்புச் சத்து இருக்கிறது. பருமனாக இருப்பவர்களுக்கு கொழுப்புச் சத்து
25-60 சதவிகிதம் உள்ளது.
கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு , கெட்ட கொழுப்பு என இரண்டு வகை
உண்டு. நல்ல கொழுப்பு, உடலின் பல்வேறு இயக்கங்களுக்கும், இதயம் சீராகச்
செயல்படவும் அவசியம். நல்ல கொழுப்பு அதிகமாகவும், கெட்ட கொழுப்பு
குறைவாகவும் இருக்க வேண்டும். நமது உணவு முறையில், கெட்ட கொழுப்பு அதிக
அளவில் இருப்பதால், உடல் எடை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம், மாரடைப்பு
போன்ற நோய்கள் வெகு சீக்கிரம் தாக்குகின்றன.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், கெட்ட கொழுப்பை மட்டுமே குறைக்க
வேண்டும். கொழுப்புச் சத்து அறவே நீக்கப்பட்ட டயட் முறைகளை கடைப்பிடிக்கக்
கூடாது.
பாடி மாஸ் அனலைசர் (Body Mass Analyzer) மூலம் ஒருவருடைய எடை, உயரம், அவரது
எலும்பின் அளவைப் பொறுத்து, எவ்வளவு சதை இருக்கவேண்டும், எவ்வளவு
கொழுப்புச் சத்து இருக்கவேண்டும் என்பதை அறிய முடியும். உயரத்துக்கு ஏற்ற
எடை என்பதைவிட, நல்ல தசைப்பகுதி, அளவான கொழுப்புச்சத்து, ஆரோக்கியமான
எலும்புகள்கொண்ட உடல் இருக்க வேண்டும்.
உடல்பருமன் யாருக்கு ஏற்படும்?
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி பழக்கம் இல்லாதவர்கள்.
அதிக அளவு நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்கள்.
மூன்று வேளையும் அதிக அளவு கார்போஹைட்ரேட்(அரிசி வகை உணவுகள்) உணவுகளைச் சாப்பிடுபவர்கள்.
மன அழுத்தம் உள்ளவர்கள்.
தைராய்டு, பி.சி.ஓ.டி பிரச்னை உள்ளவர்கள்.

தினமும் எவ்வளவு கலோரி தேவை ?
தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 2,500 கலோரிகள்.
உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களுக்கு 2,000 கலோரிகள்.
எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு 1,500 கலோரிகள்.
எந்தெந்த வயதில் உடல் எடை கூடும்?
குழந்தைப் பருவத்தில் அளவுக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகள்
சாப்பிடுவதாலும், குழந்தைகளை ஓடியாடி விளையாடவிடாமல், தடுப்பதாலும் இளம்
பருவத்திலேயே உடல்பருமன் ஏற்படுகிறது.
பெண்களுக்கு, திருமணம் ஆகும் வரை மட்டும், `உடல் எடையை கட்டுக்குள்
வைத்திருந்தால் போதும்’ என்ற மனநிலை உள்ளது. திருமணத்துக்குப் பின்னர்,
ஹார்மோன்கள் காரணமாக எடை கூடுவதைக் காட்டிலும், தவறான உணவு முறை மற்றும்
வாழ்வியல் முறை காரணமாகவே அதிக எடை கூடுகிறது.
ஆண்கள், திருமணம் ஆவதற்கு முன்பு வரை, பெரும்பாலும் காலை உணவைத்
தவிர்த்துவிடுகின்றனர். திருமணம் ஆன பின்னர், தினமும் மூன்று வேளையும்
சாப்பிடுவதாலும், விளையாட்டுகள், உடற்பயிற்சி போன்றவற்றில் இருந்து, அறவே
ஒதுங்குவதாலும் 30 வயதில் தொப்பைவர ஆரம்பித்துவிடுகிறது.
உடல் எடையைக் குறைக்க…
உடல் எடை ஒரே நாளில் அதிகரிப்பது கிடையாது. எனவே, உடல் எடை சீக்கிரமே
குறைந்துவிட வேண்டும் என எண்ணுவதும் தவறு. உடல் எடையை படிப்படியாகத்தான்
குறைக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ஒவ்வொரு மாதமும்
ஒன்று அல்லது இரண்டு கிலோ எடையை சீராகக் குறைத்துவருவது நல்லது. அதிக உடல்
பருமன் இருப்பவர்கள் மட்டும் மாதம் 2.5-4 கிலோ எடையை குறைக்கலாம்.

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளுதல் இந்த
மூன்றையும் ஒரே சமயத்தில் செய்தால் மட்டுமே உடல் எடை குறையும். டயட்
மூலமாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, முதல் இரண்டு, மூன்று
மாதங்கள் எடை குறையும். பிறகு, உடல் எடை குறையாது. கடுமையான உடற்பயிற்சி
செய்து, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், உணவைக் கட்டுக்குள் வைக்க
வேண்டும்.
ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடை குறைக்கும் சிகிச்சைகள்,
தற்காலிகமாக மட்டுமே எடையைக் குறைக்கும். இரண்டு, மூன்று மாதங்களுக்குப்
பிறகு, மீண்டும் உடல் எடை அதிகரிக்கும். திடீரென எடையைக் குறைப்பதைவிட,
வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலம், எடையைக் குறைப்பதுதான் சிறந்தது.
சினிமாவில், டி.வி ரியாலிட்டி ஷோக்களில் எடை குறைப்பவர்கள், எடை
குறைப்பதையே ஒரு வேலையாகச் செய்வார்கள். நிஜ வாழ்க்கையில் அது சாத்தியம்
இல்லை.
உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்:
ஹார்மோன்கள் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். இன்சுலின் செயல்திறன்
குறையும். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது.
ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கு உதவும் ஹார்மோன்கள் சீராகச் சுரக்காது.
இதன் காரணமாக, உயர் ரத்த அழுத்தம் வரும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இரண்டும் மிக விரைவில் இதய நோய்களை
உண்டாக்கும். எனவே, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, எளிதில் மாரடைப்பு
வரும்.

உடல் எடை அதிகரிப்பால் வரும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய
நோய்களுக்கான மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பிக்கும்போது, மாத்திரைகள் காரணமாக
உடலில் கொழுப்புகள் தங்கி, மீண்டும் உடல் எடை அதிகரிக்கும். இது ஒரு
சுழற்சியாக செயல்படும். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதாலும் உடல் எடை
அதிகரிக்க ஆரம்பிக்கும். பெண்களுக்கு தைராய்டு, பி.சி.ஓ.டி போன்ற
பிரச்சனைகள் வரும்.
புற்றுநோய் அபாயம்:
உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு
அதிகம். பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வருவதற்கான
வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
போதை மருந்துகள் வேண்டாமே:
உடல் எடை குறைப்பதற்கு மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. இந்த
மாத்திரைகளில் போதை மருந்துகள் கலப்பு இருக்கும். இவ்வகை மாத்திரைகளை
உண்ணுவதாலும், ஆல்கஹால் அதிகமாக அருந்துவதாலும் ஹார்மோன் கோளாறுகள்
ஏற்பட்டு, அதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உண்டு.

தண்ணீர் – புரிதல் தேவை:
அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது, மிகக் குறைவாகத் தண்ணீர்
அருந்துவது இரண்டுமே தவறு. மனித உடலுக்கு, தினமும் 1.5 லிட்டர் தண்ணீர்
மட்டுமே அத்தியாவசியத் தேவை. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்க 2 -3 லிட்டர்
தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் அருந்துபவர்களுக்கு, கொழுப்பு
செல்கள் விரிந்து உடல் பருமன் அதிகமாகும். தேவைக்குக் குறைவாகத் தண்ணீர்
குடிப்பவர்கள், சிறுநீரகக் கற்கள், செரிமானக் கோளாறு போன்றவற்றால்
அவதிப்படுவார்கள். இதனால், மறைமுகமாக உடல் எடை அதிகரிக்கும்.
கார்பனேட்டட் குளிர்பானம் தவிர்க்கலாமே:
குறைந்த கலோரி உணவு என்ற பெயரில் கார்பனேட்டட் கோலா குளிர் பானங்கள்,
உணவுகளை பலரும் எடுத்துக்கொள்கின்றனர். சத்துக்கள் இல்லாத, சுவைகூட்டப்பட்ட
இந்த கோலா பானங்களைக் குடிப்பதால், புற்றுநோய் செல்கள் எளிதில் வளர
வாய்ப்புகள் உள்ளன. குறைந்த கலோரி உணவுகள் என்பதால், இயல்பாகவே அதிகம்
எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால், உடல் எடை அதிகரிக்கும். எனவே,
குறைந்த கலோரி உணவுகள், குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
புரதச்சத்து அவசியம்:
ஆரோக்கியமான தசைகளுக்குப் புரதச்சத்து அவசியம். தினமும் 60 கிராம்
அளவுக்குப் புரதச்சத்து அனைவருக்கும் தேவை. தானிய வகைகள், பருப்பு வகைகள்,
கடலை வகை உணவுகள், கீரை, பால், முட்டை, கோழி இறைச்சியில் புரத்தச்சத்து
நிறைந்திருக்கிறது. புரதச்சத்து நிறைந்த உணவுகள் கிடைக்கப் பெறாதவர்கள்.
புரோட்டீன் ஷேக் போன்ற பானங்களை டயட்டீஷியன் அறிவுரைப்படி அருந்தலாம்.
தினமும் சத்தான உணவுகளை சாப்பிட்டுவந்தாலே, உடலுக்குத் தேவையான புரதச்சத்து
கிடைத்துவிடும். புரோட்டீன் ஷேக் முதலான புரதச்சத்து நிறைந்த உணவுகளை,
அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், சிறுநீரகக் கற்கள் உண்டாகலாம். அளவான
புரதச்சத்தே ஆரோக்கியமானது.
தினம் ஒரு முட்டை:
வளர் இளம் பருவத்தில் தினமும் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவது
நல்லது. முட்டையில் இருக்கும் முக்கியமான புரதச் சத்துக்கள் உடலுக்குத்
தேவை. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில், ஒரு நாளுக்குத் தேவையான அளவு,
கொழுப்புச் சத்து இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள்,
முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட வேண்டாம்.

இளைஞர்கள் இரவு நேரத்தில் ஆஃப்பாயில், ஆம்லேட் என முட்டை
சாப்பிடுகின்றனர் இது தவறு. முட்டை செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். எனவே,
வேகவைத்த முட்டைகளை, காலை அல்லது மதிய வேளைகளில் சாப்பிடுவது சிறந்தது.
நார்ச்சத்து தேவை:
கீரையில் நார்ச்சத்து மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான சில நுண்
ஊட்டச்சத்துக்கள் அதிக அளவு இருக்கின்றன. தினமும் மதிய உணவில் கீரை
சேர்ப்பது அவசியம். கீரையில் வளர்சிதை மாற்றங்களைச் சீராக்கும்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு இருக்கின்றன. கீரை சாப்பிட்டால், மலச்சிக்கல்
பிரச்னை வராது. உடல் பருமன் அதிகம் உடையவர்களுக்கு, கீரை மிகவும் ஏற்றது.
கீரை சாப்பிடுவதால், எளிதில் உடலுக்குச் சத்து கிடைக்கும். வயிறு நிறைந்த
உணர்வு சீக்கிரம் வந்துவிடும்.
உடல் எடையைக் குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.
அயல்நாடுகளில் இருந்து கிடைக்கும் ஓட்ஸ் உணவுகளைவிட, முழு கோதுமை போன்ற
உணவுகளை உண்ணுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள், வயிறு நிரம்பிய
உணர்வையும், உடலுக்குத் தேவையான நார்ச்சத்தையும் மட்டுமே தரும். கோதுமையை
வாங்கி, மாவாக அரைத்து, மைதா சேர்க்காமல், எண்ணெய் குறைவாகச் சேர்த்து,
சப்பாத்தி சாப்பிடுவது பலன் தரும்.
கார்போஹைட்ரேட் ஃப்ரீ டயட் வேண்டாம்:
உடல் எடையைக் குறைக்க, சிலர் கார்போஹைட்ரேட் அறவே தவிர்த்த டயட்
கடைப்பிடிக்கிறார்கள். இது தவறு. நாம் சாப்பிடும் உணவில் 50 சதவிகிதம்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் அவசியம் தேவை. உடல் எடையை குறைக்க, 40
சதவிகிதம் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்.
கார்போஹைட்ரேட் உணவுகளை ஒதுக்குவது, உடலில் பல்வேறு பக்க விளைவுகளை
ஏற்படுத்தும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் காலை, மதியம், இரவு என
மூன்று வேளையும் அரிசி உணவு சாப்பிடுவதை, கண்டிப்பாகக் குறைத்துக்கொள்ள
வேண்டும்.

மாத்திரைகள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?
மாத்திரைகள் உட்கொள்வதால் மறைமுகமாக உடல் எடை அதிகரிக்கும். அலர்ஜி,
ஹார்மோன் பிரச்னைக்காக சில வகை ஸ்டீராய்டு மாத்திரைகளை சாப்பிடும்போது,
உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிக
அளவு எடுத்துக்கொள்வது அவசியம். இதனாலும், மருந்துகளின் பக்க விளைவாலும்
எடை அதிகரிக்கும். மருந்து, மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு
மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவை.

உடல் எடை குறைக்க அறுவைசிகிச்சை செய்யலாமா?
பி.எம்.ஐ அளவு 37.5 ஐ தாண்டியவர்களுக்கு, பல்வேறு நோய்கள் ஒரு சேரத்
தாக்கும். வாழ்நாள் அளவு குறைந்துபோகும். எனவே, இவர்கள் உடல் எடையைக்
குறைக்க, அறுவைசிகிச்சை செய்து
கொள்ளலாம்.

உடற்பயிற்சி, டயட், வாழ்க்கை முறை மாற்றம் போன்ற எதையுமே கடைப்பிடிக்க
முடியாத அளவு, பருமன் உடையவர்கள் 32.5 என்ற பி.எம்.ஐ அளவைத்
தாண்டியிருந்தால், பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, மருத்துவர்கள் ஆலோசனையின்
பேரில், அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம்.
அழகுக்காக உடல் எடைக் குறைப்பு அறுவைசிகிச்சை செய்துகொள்வது தவறு.
உடல் எடை குறைக்க அறுவைசிகிச்சை:
இரைப்பை,சிறுகுடல் பகுதிகளில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும்.உடல்
பருமனைக் குறைப்பதற்கும், வளர் சிதை மாற்றங்கள் சீராக நடப்பதற்கும் அறுவை
சிகிச்சை செய்யப்படுகிறது. குறைந்த உடல் பருமன் உடையவர்களுக்கு, வளர்சிதை
மாற்றம் சீராக இருந்தால், அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுவது இல்லை.

அறுவைசிகிச்சை செய்துகொண்டால், ஓரிரண்டு வருடங்களில் அளவாகச்
சாப்பிடுவதன் மூலமே, பெரிய அளவில் எடை குறைக்க முடியும். அறுவைசிகிச்சை
செய்த பிறகு, எளிதில் வயிறு நிரம்பிய உணர்வு வந்துவிடும். ஆனால், சிலர்
உடல் எடை குறைந்தாலும் உடலில் தெம்பு இல்லை என நினைத்து வருந்துவார்கள்.
இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். எனவே, உயிர்வாழ அறுவைசிகிச்சை செய்தே
ஆகவேண்டும், என்னும் அளவில் இருப்பவர்கள் மட்டும் அறுவைசிகிச்சை
செய்துகொண்டால் போதுமானது.
எடை குறைக்கும் மாத்திரைகள் சாப்பிடலாமா?
உடல் எடையைக் குறைக்க இரண்டு வகையான மாத்திரைகள் சந்தையில்
கிடைக்கின்றன. ஒன்று, வளர்சிதை மாற்றங்களைத் துரிதப்படுத்தும் மாத்திரை.
மற்றொன்று, பசி உணர்வைக் குறைக்கும் மாத்திரை. இதில், பசி உணர்வைக்
குறைக்கும் மாத்திரைகளை எடுக்கலாம். ஓரிரண்டு மாதங்களுக்கு மட்டுமே, உடல்
எடையைக் குறைக்க நினைப்பவர்கள், உடல் எடை குறைக்க ஊக்குவிக்கும்
கருவியாகக் கருதி, இந்தப் பசி குறைக்கும் மாத்திரைகளை பயன்படுத்தலாம்.
தொடர்ந்து, பசி குறைக்கும் மாத்திரைகளைப் பயன்படுத்திவந்தால், பல்வேறு
பக்கவிளைவுகள் ஏற்படும். தொடர்ந்து பயன்படுத்தினால், உடல் எடை கட்டுக்குள்
அடங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.
கர்ப்பகால எடை அதிகரிப்பு
கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக் கூடாது’ என்றும், அவர்கள்
ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது தவறு.
குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6
முதல் 10 கிலோ மட்டும் எடை கூடினால் போதுமானது. தற்போது, பல கர்ப்பிணிகள்
10 மாத காலத்துக்குள் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை
அதிகரித்துவிடுகின்றனர். சிலர் பி.எம்.ஐ அளவு 32 ஐ தாண்டிவிடுகிறார்கள்.
இதற்கு, உடற்பயிற்சி இன்மை மற்றும் உணவுக்கட்டுப்பாடு இன்மையே காரணம்.
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதிக அளவு
உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிக அளவு
எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்.
கர்ப்ப காலத்தில் அதிக அளவில் உடல் எடை கூடவில்லை என்றால், நார்மல்
டெலிவரிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், அறுவைசிகிச்சை செய்வதாலும்,
ஹார்மோன்கள் கோளாறு காரணமாகவும் குழந்தை பெற்ற பிறகு, அதிக அளவு உடல் எடை
அதிகரித்துவிடுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு,
உடற்பயிற்சி அவசியம் தேவை.

தூக்கம் தொலைத்தால்?
உடலில் இரவு நேரத்தில் வளர்சிதை மாற்றங்கள் குறைவாக நடக்கும். இரவு
நேரத்தில் தூங்கவில்லை எனில், வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது. பகல்
நேரத்தில் தூங்குவதால், பகலில் வளர்சிதை மாற்றம் குறைந்துவிடும். இதனால்,
உடல் எடை அதிகரிக்கும். இரவு, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, காலையில்
குறிப்பிட்ட நேரத்தில் எழுவதுதான் சிறந்தது. அடிக்கடி உறங்கும் நேரத்தை
மாற்றிக்கொண்டே இருந்தால், உடல் எடை உயரும். இரவு நேர வேலை
செய்பவர்களுக்கு, உடல் எடை அதிகரிப்பது இதனால்தான்.

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்:
உடற்பயிற்சி செய்வதன் மூலம், தினமும் 500 கலோரி எரித்தால் போதுமானது.
தினமும் 20 நிமிடங்கள் சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவற்றில்
ஈடுபடலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சீராக உடற்பயிற்சி செய்ய
வேண்டும். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, வேறுவிதமான பாதிப்புகளை
ஏற்படுத்திவிடும். எனவே, அளவான உடற்பயிற்சி ஆரோக்கியமானது.


பி.எம்.ஐ அளவு கண்டுபிடிக்கும் முறை:
பி.எம்.ஐ அளவு
18.5க்கு கீழ் – மிகக் குறைவான எடை
18.5 – 24.9 – சரியான எடை
25 – 29.9 – அதிக எடை
30 க்கு மேல் – மிக அதிக உடல் பருமன் (Obesity)
பொதுவாக பி.எம்.ஐ அளவு 21 -23 என்ற அளவில் இருப்பது நல்லது.
உங்களது உயரத்தின் அளவைவைத்தது, நீங்கள் எவ்வளவு எடை இருந்தால் நல்லது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
ஃபார்முலா – (உயரம்(செ.மீ) – 100) X 0.9
உதாரணம் உங்கள் உயரம் 165 செ.மீ எனில்
165 – 100 = 65
65 X 0.9 = 58.5
165 செ.மீ உயரம் உடையவர் 58.5 கிலோ எடை இருந்தால் நல்லது. அதிகபட்சமாக அவர் 65 கிலோ வரை இருக்கலாம்.
ஆண்கள்:
வளர் இளம் பருவத்தினர் கட்டாயம் உயரத்துக்கு ஏற்ற எடையைக்கொண்டிருப்பதே
நல்லது. திருமணம் ஆன ஆண்கள், அவர்களது உயரத்துக்கு ஏற்ற எடையைவிட மூன்று
கிலோ அளவுக்குக் கூடுதலாக இருக்கலாம். வயதான ஆண்கள், ஹார்மோன்
மாற்றங்களினால் ஐந்து கிலோ அளவுக்கு எடை அதிகரிப்பதில் தவறு இல்லை.
பெண்கள்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் 8 -13 கிலோ வரை எடை கூடலாம். குழந்தை பெற்ற
பின்னர், உயரத்துக்கு ஏற்ற எடையைவிட, ஐந்து கிலோ அளவுக்கு எடை கூடுதலாக
இருப்பதில் பிரச்னை இல்லை.


எடை குறைய என்ன உணவுகள் ?
குறிப்பிட்ட உணவை உட்கொண்டால், உடல் எடை குறைகிறது என்பதற்காக, அந்த
உணவை உட்கொள்ளுவது நல்லது அல்ல. ஆரோக்கியமான டயட் மூலம்தான், உடல் எடையைக்
குறைக்க வேண்டும். உடல் எடை குறைய, தனியாக உணவுகள் சாப்பிடுவதைவிட, எடை
அதிகரிக்கச் செய்யும் சில உணவு வகைகளை, தவிர்ப்பதன் மூலமும்
குறைத்துக்கொள்வதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும்.
உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் 50 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும்.
கீரைகள், நட்ஸ், பழங்கள், காய்கறிகள், ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான
உணவுகள் என, சமச்சீரான உணவு உட்கொள்வது அவசியம்.
காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை இரண்டு – மூன்று இட்லி, நிறைய
சாம்பார் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. காலையில் அதிக அளவு உண்ணுவதோ,
அறவே உணவைத் தவிர்ப்பதோ கூடாது. காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை
உட்கொள்வது அவசியம். காலையில் பால், முளைகட்டிய பயறு வகைகள், பழங்கள்,
எளிதில் செரிமானமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது அவசியம்.

மதிய உணவுக்கு ஒரு கப் சாதம் (200 கி), ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம்,
அரை கப் தயிர், இரண்டு கப் காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஊறுகாய்,அப்பளம்
போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
இரவு வேளையில் பரோட்டா, நூடுல்ஸ் முதலான மைதா உணவுகளைத் தவிர்க்க
வேண்டும். எண்ணெய் குறைவாகச் சேர்க்கப்பட்ட சப்பாத்தி இரண்டு, காய்கறிக்
கூட்டு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவை மூன்று வேளைகளாகச்
சாப்பிடுவதற்குப் பதிலாக, ஆறு வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடவும்.
அரிசி சாதத்தைப் பார்த்தால், அதிக அளவு சாப்பிட்டுவிடுகிறேன் என
வருந்துபவர்கள், சப்பாத்தி சாப்பிடலாம். அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட்
அதிகமாக இருப்பதால், அதிகம் சாப்பிடத் தோன்றும். இடித்த கோதுமையில் இரண்டு
சப்பாத்தி சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் மற்றும்
நார்ச்சத்து கிடைத்துவிடும். சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையாது, பசி
சீக்கிரம் அடங்கும் என்பதை உணர வேண்டும். சிலர், சப்பாத்தி சாப்பிட்டால்
எடை குறையும் என நினைத்துக்கொண்டு 5-6 சப்பாத்தி சாப்பிடுவார்கள். இது
தவறானது.
பொங்கல், பூரி, பரோட்டா, மசால் தோசை, பிரியாணி, எண்ணெயில் வறுத்த
உணவுகள், அதிக அளவு மசால் சேர்க்கப்பட்ட அசைவ உணவுகள் போன்றவற்றை அடிக்கடி
சாப்பிடக் கூடாது. 10- 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் அளவாகச்
சாப்பிடுவது நல்லது.

ஒவ்வொரு வேளையும் சாப்பிடுவதற்குக் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள்
எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும்போது பேசிக்கொண்டோ, டி.வி
பார்த்துக்கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ சாப்பிடக் கூடாது.
குடும்பத்தோடோ, நண்பர்களோடோ அமர்ந்து, பொறுமையாக உணவை ரசித்துச்
சாப்பிடவேண்டும். சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
இடையிடையில் தண்ணீர், கோலா பானங்கள், ஜூஸ் போன்றவற்றை அருந்தக் கூடாது.
உணவு சாப்பிட்ட பின்னர், அரை மணி நேரம் கழித்துத் தண்ணீர் அருந்தவும்.
சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால், செரிமானம் தாமதமாகும். இதனால், இரைப்பை சற்றே பெரிதாகும் என்பதை நினைவில் வையுங்கள்.
டயட் என்பது ஆரோக்கியம் நிறைந்த சமச்சீரான உணவுகளை உட்கொள்வதே ஆகும்.
டயட் என்ற பெயரில் உணவை தவிர்க்கவோ, கூடுதலாக ஏதேனும் உணவை
எடுத்துக்கொள்ளவோ கூடாது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்றால் என்ன?
கால்சியம் முதலான தாது உப்புக்கள், வைட்டமின்கள், புரதச்சத்து,
அத்தியாவசிய அமினோ அமிலங்கள் முதலான சத்துக்கள் நிறைந்த உணவுகளை
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்கிறோம். கீரை, காய்கறிகள், பழங்கள்
இவற்றில்தான் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

எந்தெந்த சத்தில் எவ்வளவு கலோரி?
ஒரு கிராம் புரதச்சத்து = 4 கலோரிகள்
ஒரு கிராம் கார்போஹைட்ரேட் = 4 கலோரிகள்
ஒரு கிராம் கொழுப்பு = 9 கலோரிகள்
கார்போஹைட்ரேட் அதிகமானால் என்ன பிரச்னை?
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை அதிக அளவு சாப்பிட்டுவந்தால்,
உடலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாக இருக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்பாக
மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கப்படும். எனவேதான், கார்போஹைட்ரேட் நிறைந்த
உணவுகளை கூடுதலாகவோ, குறைவாகவோ சாப்பிடாமல் அளவாக சாப்பிட வேண்டும்.

மெனு கார்டு தயார் செய்யுங்கள்:
ஒரு வாரத்துக்கு என்னென்ன வகை உணவுகள் சாப்பிடப்போகிறோம் என்பதை,
அட்டவணை போட்டு சுவரில் மாட்டிவிடுங்கள். ஒரே வகையான உணவுகள் இல்லாமல்
இருக்குமாறு அட்டவணையைத் தயாரியுங்கள். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ
இந்த அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். எப்போதும், ஒரே வகை உணவுகளை
தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிடக் கூடாது.
நொறுக்குத்தீனி வேண்டாமே:
முறுக்கு, அதிரசம், ஸ்வீட், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், சாஸ், மயோன்னைஸ், வறுத்த
சிக்கன், போண்டா, வடை, பஜ்ஜி, கேக், ஐஸ்க்ரீம், உருளைக்கிழங்கு சிப்ஸ்
போன்றவற்றை தினமும் சாப்பிடக் கூடாது. வாரத்தில் ஒரு நாள், குறைந்த அளவு
மட்டுமே சாப்பிலாம். ஒரே நாளில் வெவ்வேறு விதமான நொறுக்குத்தீனிகளை
சாப்பிடக் கூடாது.

நம்பிக்கை வையுங்கள்:
உடல் எடையைக் குறைக்க மிகவும் முக்கியம் நம்பிக்கை. உடனடி பலன்
எதிர்பாராமல், இரண்டு மாதங்களாவது நம்பிக்கையோடு டயட்,உடற்பயிற்சி செய்ய
ஆரம்பியுங்கள். உங்கள் எடை குறைவதை நீங்கள் உணர முடியும்.
உடற்பயிற்சியாளர் ஜேசு சவரிமுத்து டிப்ஸ்:
உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.உடல் பருமன் உடையவர்கள்
முதலில் மருத்துவர்களிடம் சென்று சர்க்கரை பரிசோதனை,ரத்த அழுத்தப்
பரிசோதனை மற்றும் இதயப் பரிசோதனை ஆகியவற்றைச் செய்துகொள்ள
வேண்டும்.ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப்
பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல
ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது
வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு
வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில்
ஐந்து கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும். ஆனால், குறிப்பிட்ட
காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை கட்டுக்குள் இருக்க,
நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில்
நடப்பவர்கள், அந்தக் கருவியில் உள்ள ஒவ்வோர் இலக்கையும் படிப்படியாக
முடிக்க முயற்சிக்க வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே.
நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால்
மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும்.
கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும்
தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும்
பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.

அதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். ஆனால்,
சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள்
முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500
கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதுமானது.
வெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது. டிராக் ஸூட் , ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும்.
எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில்
உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின்
என்னும் அமிலம் சுரக்கும். இது மகிழ்வான உணர்வைத் தரும். எனவே, அன்றைய
தினம் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய முடியும்.
ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை
உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது. குடும்பத்தினருடன் ஒன்றாக
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும்.
ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா
கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி
மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு
தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

வீட்டில் எடை பார்க்கும் இயந்திரம் ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
தினமும் காலை வெறும் வயிற்றில் எடை பார்த்துக் குறித்துக்கொள்ளுங்கள். ஒரு
கிலோ அல்லது அதற்கு மேல் ஒரே நாளில் அதிகரித்து இருந்தால், அன்றைய தினம்
உணவில் சிக்கனத்தையும் உடற்பயிற்சியில் கூடுதல் அக்கறையும் எடுத்துக்கொள்ள
வேண்டும்.
நடைப்பயிற்சி முடிந்த உடனே காபி,டீ குடிக்கக் கூடாது. 20 நிமிடங்கள்
கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த
பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம்.
சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு மணி நேரம்
கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது,
திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால்
போதுமானது. உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது.
டி.வியில் வரும் விளம்பரங்களை நம்பி வயிற்றில் அதிர்வுகளை ஏற்படுத்தும்
கருவிகள், இடுப்புத் தசைகளைக் குறைக்கும் கருவிகள் போன்றவற்றை வீட்டில்
வாங்கி வைத்து பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.செயற்கை முறையில் குறுக்கு
வழியில் எடை குறைப்பது பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும்.இயற்கையான முறையில்,
திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட
ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.
இயற்கை முறையில் எடையைக் குறைக்க, இயற்கை மருத்துவர் எஸ்ரா வின்சென்ட் தரும் டிப்ஸ்:
சாப்பாடு சாப்பிடும்போது, நன்றாக மென்று கூழாக்கி விழுங்க வேண்டும்.
கோபம், கவலை இருக்கும் சமயங்களில் மனதைக் கட்டுப்படுத்தி, அளவாகச் சாப்பிட வேண்டும். அல்லது கோபம் தணிந்த பிறகு சாப்பிடவும்.
கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம்.. கைக்குத்தல் அரிசியில் உடலை
வலுவாக்கும் சத்துக்கள் இருக்கின்றன. வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய்
ஆகியவற்றை உண்பது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது.

நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், தர்பூசணி,வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம்.
மைதா, கிழங்கு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மா, பலா, வாழைப்பழம், இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
காலை வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டுவர, உடல் எடை குறையும்.
முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்
கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் போன்றவற்றைத்
தவிர்க்கவேண்டும்.
அதிகமாக மோர் குடிக்கவும். தயிர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. பால் அளவாக அருந்த வேண்டும். சீஸ் தவிர்க்க வேண்டும்.
பழச்சாறு, காய்கறிகள், முளைகட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கொள்ளு சூப், கொள்ளு துவையல், வறுத்த கொள்ளு, வேகைவைத்த கொள்ளு
போன்றவற்றை வாரம் மூன்று முறை எடுத்துக்கொள்ளவும். கொள்ளு சாப்பிட்டால்
உடலில் தேவையற்ற கொழுப்பு சீக்கிரம் கரைந்துவிடும். கொள்ளு ரசத்தைக்
குளிர்காலங்களில் பயன்படுத்தவும். சூடான உடல்வாகு கொண்டவர்கள் கொள்ளைத்
தவிர்ப்பது நல்லது.
உணவுக்கட்டுப்பாடுடன் யோகா, நீராவிக் குளியல் ஆகியவை செய்வது உடல் எடை குறைய வழி வகுக்கும்.
நோன்பு தெரப்பி
உடல் எடை சீக்கிரம் குறைய நோன்பு தெரப்பி (Fasting therapy)
எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தொடர்ந்து கடைப்பிடிக்காவிட்டால், உடல் எடை
மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. எனவே, திருமணம் முதலான சில
காரணங்களுக்காக சீக்கிரம் எடை குறைக்க விரும்புபவர்கள் மட்டும் இந்த
தெரப்பியை எடுத்துக்கொள்ளலாம்.
நோன்பு தெரப்பி எடுப்பது எப்படி?
மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் என இந்த தெரப்பி எடுத்துக்கொண்டால் நல்ல
பலன் கிடைக்கும். இந்த நாட்களில் அரிசி, எண்ணெய், கொழுப்பு உணவுகளை அறவே
தவிர்த்து, தண்ணீர், பச்சைக்காய்கறிகள், பழங்கள் மட்டுமே சாப்பிடவேண்டும்.
மருத்துவர் பரிந்துரையின் பேரில் இந்த தெரப்பியை எடுத்துகொள்ளலாம். பொதுவாக
15 நாட்களுக்கு ஒருமுறை, காலை முதல் இரவு வரை, ஒரு நாள் நோன்பு தெரப்பி
எடுப்பது நல்லது.