25 C
Chennai
Wednesday, Dec 25, 2024
kudampuli
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்உடல் பயிற்சி

எடையைக் கட்டுக்குள் வைக்க, குடம்புளி!…

இயற்கையின் அழகு களி நடனமிடும் சேர நாட்டுக்கென (கேரள மாநிலத்துக்கு) பல பெருமைகள் உண்டு. அந்த வரிசையில் `குடம்புளி’யும் ஒன்று. அஞ்சறைப் பெட்டிக்குத் துணையான மண்பானையில் இடமளிப்பதோடு, சமையலில் கட்டாயம் சேர்க்கவேண்டிய நறுமணமூட்டி குடம்புளி. இன்றைய தலைமுறைக்கு குடம்புளி அதிகம் பரிச்சயம் இல்லாமலிருந்தாலும், அது கொடுக்கும் பலன்களுக்காகப் பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

மலபார் புளி, பழம்புளி, மீன்புளி, பானைப்புளி போன்ற பல பெயர்களில் குடம்புளி அழைக்கப்படுகிறது. மலபார் பகுதி மற்றும் கொங்கன் (மலபார் முதல் மகாராஷ்டிரா வரையிலான மேற்குக்கடற்கரைப் பகுதி) பகுதியில்தான் குடம்புளியின் பயன்பாடு அதிகம் இருக்கிறது. குடம்புளி குடும்பத்தைச் சேர்ந்த உலர்ந்தபழங்கள்கூட, கொங்கன் பகுதியில் புளியாகப் பயன்பாட்டில் இருக்கின்றன.

kudampuli

கருஞ்சிவப்பு நிறமுள்ள குடம்புளி, குளிர்ச்சித் தன்மை கொண்டது. மகாராஷ்டிரா பகுதியின் வேனிற்காலத்தை குளிர்ச்சியூட்ட உதவும் இயற்கைப் பானங்களில் மங்குஸ்தான் பழத்துடன் குடம்புளியும் சேர்க்கப்படுகிறது. மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் பி, சி போன்ற அத்தியாவசியச் சத்துகள் இதில் அதிகம் இருக்கின்றன. பருப்பு வகைகளை வேகவைத்து, அதில் குடம்புளியைக் கலந்து சாப்பிடும் வழக்கம் வடமாநிலங்களில் உண்டு.

எடையைக் கட்டுக்குள் வைக்க, குடம்புளி அற்புதமான தேர்வு. இதிலிருக்கும் `ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம்’ ரத்த கொழுப்பைக் குறைப்பதாகவும், எடையைக் கட்டுக்குள் வைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் குடிகொண்டிருக்கும் `கார்சினால்’ எனும் வேதிப்பொருள், குடம்புளியின் மருத்துவத் தன்மையை மேம்படுத்துகிறது. புற்றுசெல்களை நிலைகுலையச் செய்யும் வீரியம் கார்சினாலுக்கு இருப்பதாகவும், புற்றுக்கட்டிகளின் அளவைக் குறைப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. வயிற்றுப்புண்ணை உண்டாக்கும் `ஹெலிகோபாக்டர் – பைலோரை’ எனும் பாக்டீரியாவை அழித்து வயிறு, குடல்பகுதிகளின் பாதுகாவலரான குடம்புளி செயல்படுகிறது.

பல்வேறு காரணிகளால் நியூரான்களுக்கு (மூளையின் நரம்பு செல்கள்) உண்டாகும் பாதிப்புகளைத் தடுத்து, அவற்றை விவேகமாகச் செயல்படவைக்கும் வல்லமை குடம்புளிக்கு இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருளைத் தேடி எங்கெங்கோ அலைய வேண்டாம். சமையலில் தவறாமல் குடம்புளியைக் கரைத்தால் போதும். உணவின் மூலம் அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையை நமது செல்கள் ஈர்த்துக்கொள்ளும். இதய நோய் முதல் புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது இந்த கரும்புளி!

இப்போது புழக்கத்தில் இருக்கும் புளிக்கு, `புதுப்புளி’ எனப் பெயர் சூட்டுவதே பொருத்தமாக இருக்கும். புதுப்புளியின் வருகைக்கு முன், பழம்புளியின் மெலிதான புளிப்புச் சுவையைத்தான் நாவின் மொட்டுகள் ருசித்துக்கொண்டிருந்தன. சித்த மருத்துவம் குறிப்பிடும் பழம்புளி, `குடம்புளி’ அல்லது `கொடம்புளி’ எனும் கேரளத்துப் புளியைத்தான்.

`பழம்புளியைச் சேர்க்கத் திரிதோடம்… கண்ணோய்போம் பித்தமென்ற பேரொழியும்…’ – என்று அகத்தியர் குணவாகடப் பாடலில் கூறப்பட்டுள்ளது. பழம்புளியைப் பயன்படுத்துவதால் வாத, கப நோய்கள், வாந்தி, கண்நோய் போன்றவை நீங்கும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குடம்புளியைப் பயன்படுத்துவதால் நரை, திரை, மூப்பு நீங்கி வாழ்நாள் அதிகரிக்கும் என்கிறது மருத்துவக் குறிப்பு. இப்போது நாம் பயன்படுத்தும் புளியை அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால், உடலில் பித்தம் அதிகரிக்கும். பழம்புளியைப் பயன்படுத்தினால் பித்தம் குறையும். `செரிமானத்தைத் தூண்ட, மலத்தை இளக்க, மூட்டு வலியைக் குணமாக்க…’ என இதன் பெருமைகளை மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி மக்கள் அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.

பழமாக இருக்கும்போது, பார்வைக்குப் பசுமையாகத் தெரியும் குடம்புளி, உலர்ந்ததும் கரும்பழுப்பு நிறத்துடன் கைகளில் ஒட்டக்கூடிய நறுமணமூட்டியாக மாற்றம் பெறும். ஆனால், மற்ற நறுமணமூட்டிகளைப் போல, அதிகளவில் வாசனையை வெளிப்படுத்தாது. சட்னி வகைகள் மற்றும் ஊறுகாய் வகைகளில் புளிப்புத் தன்மையுடைய குடம்புளியைச் சேர்த்தால், அவை அவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகாது.

குடம்புளியை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை… பிசுபிசுப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். கடினமாக இருக்கக் கூடாது. பழம்புளியை பானையில் சேமித்துவைப்பது நல்லது. ஓராண்டு வரை பழம்புளியின் வீரியம் நிலைத்திருக்கும் என்பதால், குளிர் சாதனப் பெட்டியின் ஆதரவு இதற்குத் தேவையில்லை. ஆண்டுக்கணக்கில் வைத்திருந்தால், அதன் வாசனையை குடம்புளி இழந்துவிடும். நீரில் குடம்புளியை ஊறவைக்கும்போது, நீரானது வெளிர்சிவப்பு / கறுப்பு நிறத்துக்கு அதிகளவில் மாறினால் அந்தக் குடம்புளி தரமானது. நம்மிடம் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ஒரு பொருள், சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழும்போது, சந்தையில் அதன் விலை அதிகமாக முன்னிறுத்தப்படும்; உதாரணமாகச் சிறுதானியங்கள். அந்த வகையில் பழம்புளியின் விலையும் சற்று அதிகமே.

குடம்புளியை உலரவைத்து மாதுளை, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களின்மீது தூவிச் சாப்பிட் டால் புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். செரிமானத் தொந்தரவுகளுக்கு குடம்புளி ஊறிய நீரில் மிளகும் சீரகமும் சேர்த்துப் பருகலாம். குடம்புளியுடன் கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் கலந்து செரிமானத்தைத் தூண்டும் மருந்தாகச் சாப்பிடலாம். குடம்புளியைச் சமையலில் சேர்த்துவந்தால், முதுமையில் ஏற்படும் மூட்டுவலி பிரச்னைகளைத் தள்ளிப்போட முடியும்.

மீன் துண்டுகளை குடம்புளி கரைத்த நீரில் ஊறவைத்துச் சமைக்கும் வழக்கம் மலபார் பகுதி கடற்கரைக் குடும்பங்களில் இப்போதும் பின்பற்றப்படுகிறது. இதன் பொடியை மஞ்சளுக்கு மாற்றாகக்கூடப் பயன்படுத்தலாம். அசைவ உணவுகளைச் சமைக்கும்போது, இதன் பொடியைத் தேவையான அளவு பயன்படுத்தினால், வயிறு மந்தம் ஏற்படாது.

பாத வெடிப்புகளால் அவதிப்படுபவர்கள், குடம்புளியுடன் வெண்ணெய் சேர்த்துக் குழப்பி, வெடிப்புள்ள பகுதிகளில் பூசிவந்தால், பளிங்குப் பாதத்தை விரைவில் பார்க்கலாம். சருமச் சுருக்கங்களைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதால், கற்றாழையுடன் சேர்த்து முகத்தில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை தடவி வந்தால் முகப்பொலிவு கிடைக்கும். தேக எரிச்சல், புண், அரிப்பு போன்ற சரும நோய்களுக்கு குடம்புளி வெளிப்பிரயோகமாக பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அழகுசாதனப் பொருள்களில் இதன் சத்துகள் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உப்பிய கொய்யாப்பழ வடிவில் கோள வடிவில் காய்க்கும் குடம்புளி, நமது வாழ்நாளை நீட்டிக்கும் மாமருந்து. குடம்புளி, நமது மரபணுக்களுக்குப் பரிச்சயமான பழம்(மை)புளி!

சோல் காதி (Sol kadhi):

சிறிதளவு குடம்புளியை எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து, இரண்டு டம்ளர் நீர் விட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதற்கிடையே தேங்காய்த் துண்டுகள் மற்றும் வெள்ளைப்பூண்டை ஒன்றிரண்டாக இடித்து அதில் நீர் ஊற்றி அரைத்து, அதிலிருந்து பால் வெளிவரும் அளவுக்கு நன்றாகப் பிழிய வேண்டும். இப்படி இரண்டு மூன்று முறை செய்தால், முழு அளவில் பால் வெளியேறும். மேற்சொன்ன ஊறல் நீரிலிருந்து குடம்புளியை வடிகட்டிவிட வேண்டும். கிடைத்த தேங்காய்ப் பாலை, அந்த நீரில் சேர்த்து நன்றாகக் கலந்தால், கருஞ்சிவப்பு நிறத்தில் மருத்துவக் குணமிக்க பானம் கிடைக்கும். இதைப் பரிமாறும்போது, கொத்தமல்லி அல்லது புதினா இலைகளைத் தூவிக் கொடுக்கலாம். பிரசித்திபெற்ற இந்த பானம், வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்த சிறந்த மருந்தாகும். உணவின் கடைசியில் நாம் மோர் பருகுவதைப் போல, இந்த `குடம்புளி-தேங்காய்ப் பால்’ பானத்தைப் பருகியும், செரிமான உறுப்புகளை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். `கொங்கன்’ பகுதி மக்கள் குடம்புளி குடும்பத்தைச் சேர்ந்த மங்குஸ்தான் பழத்தைக் கொண்டும் `சோல்-காதி’ பானத்தைத் தயாரிக்கின்றனர்.

மலபார் புளி – உருளை புரட்டல்:

உருளைக்கிழங்கைத் துண்டுகளாக நறுக்கி நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் சீரகம், நான்கு பூண்டுப் பற்கள், கொஞ்சம் குடம்புளி, பனைவெல்லம் என எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்த நறுமண மூட்டிகளை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சில நிமிடங்களில் அதிலிருந்து மணம் வெளியாகும்போது, உருளைக்கிழங்குத் துண்டுகளை அதில் போட்டுப் பிரட்டினால் சுவையான ரெசிப்பி தயார். உருளைக்கிழங்குக்குப் பதிலாக காளான், காலிஃபிளவரையும் பயன்படுத்தலாம்.

குடம்புளி லஸ்ஸி:

தயிருடன் குடம்புளிப் பொடியைக் கலந்து, பாரம்பர்ய முறைப்படி மத்தைக் கொண்டு நன்றாகச் சிலுப்பினால் நுரை பொங்கி வரும். இந்த பானத்தின்மீது சிறிது குடம்புளிப் பொடியைத் தூவிப் பருகலாம். அடுத்துவரும் வேனிற்காலத்தில், சுவையும் குளிர்ச்சியும் நிறைந்த இந்த ‘குடம்புளி லஸ்ஸி’யை முயற்சி செய்து பாருங்கள்.

`மசோர் டெங்கா’ (Masor tenga):

அசாம் பகுதியின் புளித்த மீன்குழம்பு தயாரிப்பில் குடம்புளி பயன்படுத்தப்படுகிறது. வெயில்காலத்தில் வயிற்று உபாதைகளை உண்டாக்காத குழம்பு வகை இந்த `மசோர் டெங்கா.’

Related posts

இடுப்புப் பகுதி கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க… உடலில் நீர்ச்சத்து குறைந்தால்…?

nathan

தினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்

nathan

தெரிந்துகொள்வோமா? ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா?

nathan

கணித அறிவு அதிகரிக்க குழந்தைகளுக்கு எதை தரக் கூடாது தெரியுமா?

nathan

இந்த 6 ராசி ஆண்கள் அற்புதமான கணவர்களாக இருப்பாங்களாம்…அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

காபியை பற்றிய சில சுவாரஸ்ய ருசீகரமான தகவல்கள்!!!

nathan

நீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா?

nathan

மாதவிடாய் நேர வலியை குறைப்பதற்கு எளிய முறை.!!

nathan