கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை. ஏனெனில் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சத்துக்களை வாரி வழங்கக் கூடிய உணவு வகைகளை உட்கொள்ளுதல் அவசியம் ஆகும்.
தாய் மற்றும் சேய் திடகாத்திரமாக இருக்க வேண்டுமாயின் முதலாவது தாயின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். தாயின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான் சேயின் உடலில் உள்ள இரத்த ஓட்டமும் சீராக காணப்படும்.
அதே போல் ஊட்டச்சத்துக்களும் அவசியமாகின்றது. அந்த வகையில் தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் இரத்த ஓட்டத்தை சீர்செய்ய மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற மாதுளம்பழம் உதவி புரிகின்றது.
பொதுவாக கர்ப்பிணி ஒருவர் நாளொன்றுக்கு 300 மேலதிக கலோரிகளை உள்ளெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாதுளம் பழத்தை வைத்தே ஈடு செய்யலாம் என்கிறது நவீன வைத்தியம்.
கர்ப்பகாலத்தில் குடல் சார்ந்த பிரச்சினைகள் எழுவது சாதாரண விடயமாகும். இதற்கு பைபர் அதிகளவில் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் தீர்வு காண முடியும். மாதுளம்பழத்தில் போதியளவு பைபர் காணப்படுவதால் அரைக் கோப்பை அளவேனும் மாதுளம்பழத்தை உட்கொண்டால் கூட இந்தப் பிரச்சினை தீர்ந்து விடும். இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவது தடுக்கப்படும்.
பொதுவாக கர்ப்பிணித் தாய்மார்கள் பலருக்கு தூக்கமின்மை ஏற்படும். ஹீமோகுளோபின் அளவில் ஏற்படும் மாற்றமும் இந்த தூக்கமின்மைக்கு காரணமாக அமைகின்றது. இரும்புச் சத்து அதிகளவில் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். மாதுனம்பழத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளமையால் இதற்கு மாதுளம்பழத்தை உட்கொள்வது சிறந்தது.
அத்துடன் இரும்புச் சத்தை உறிஞ்செடுக்க போதியளவு விட்டமின்சி காணப்படுதல் அவசியம். மாதுளம்பழத்தில் உள்ள விட்டமின்சியானது இரும்புச்சத்தை உறிஞ்செடுக்கவும் உதவி புரிகின்றது.
மாதுளம்பழத்தின் மூலம் நன்மைகள் ஏற்படுவதைப் போலவே அதில் சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
01. மாதுளம்பழத்தை அதிகளவில் உண்பதால் குறைமாதப் பிரசவம் ஏற்படவும் வாய்ப்புக்கள் உண்டு.
02. மாதுளம்பழத்தை சாறாக பிழிந்து பருகும் போது வரையறை இன்றி அருந்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் கலோரிகள் அதிகளவில் உண்டு.
03. கர்ப்பகாலத்தில் விட்டமின்கள் தவிரிந்த ஏதேனும் மருந்து வகைகளை உட்கொள்ளும் பட்சத்தில் மாதுளம் பழத்தை உண்பதை தவிர்க்க வேண்டும்.