27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
women home decoration
அலங்காரம்ஆரோக்கியம்வீட்டுக்குறிப்புக்கள்

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.

* வீட்டின் வரவேற்பறையைக் கண்டு உங்கள் உறவினர், தோழிகள் வியக்கிறார்களா? அல்லது முகம் சுழிக்கிறார்களா?

* மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கைத்தேட உங்களுக்கு எத்தனை நிமிடம் பிடிக்கிறது?

* தேவையான பொருளை உடனே தேடி எடுக்க முடியவில்லையா? வைத்த இடம் தெரியவில்லையா?

* வீட்டில் நிம்மதியும், செல்வமும் நிரம்பவில்லை என்று வருத்தம் அடைகிறீர்களா?

எல்லாவற்றுக்கும் ஒரே வழி அழகாக அடுக்கிவைப்பதுதான். ஆம்… வீட்டில் உள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதன் மூலம் ஆனந்தம் அடையலாம். செல்வம் செழிக்க வைக்கலாம். நிம்மதியைக் கொண்டு வரலாம். நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.

women home decoration

வீட்டை அழகுற வடிவமைத்து கட்டுவது பொறியாளரின் வேலையாக இருக்கலாம். ஆனால் அழகுடன் வைத்துக் கொள்வது நாம்தான். வரவேற்பறை அலமாரி முதல் படுக்கை அறை பரண் வரை எல்லாவற்றையும் தேவைக்கேற்ப அழகுபடுத்தி பயன்படுத்துவது ஒரு கலை.

வரவேற்பறை அலமாரியை அழகிய பொம்மைகள் கொண்டுதான் அலங்கரிக்க வேண்டும் என்பதில்லை. புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தாலே போதும். இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் வீடு நிச்சயம் சுபிட்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் வீடுகளில் பொருட்கள், அங்குமிங்குமாக சிதறிக்கிடப்பது, மூலை முடுக்குகளில் எல்லாம் அழுக்கும், வேண்டாத பொருட்களும் அடைந்து கிடப்பது, பிள்ளைகள் ஓடி விளையாடும் இடத்தில் பூச்சிகள் ஓடி விளையாடுவது, ஆங்காங்கே ஒட்டடை தோன்றுவது போன்ற வீடுகளில் நிம்மதிக்கு பஞ்சம் ஏற்படும். செல்வமும் தங்காது என்ற கருத்து உண்டு.

அடுக்கிவைக்கும் கலைக்கு ஜப்பானில் மதிப்பு அதிகம். அதை அவர்கள் ‘5 -எஸ் ஒழுங்குமுறை’ என்கிறார்கள். அங்கே பள்ளிகள், வீடுகள், அலுவலகங்கள் எல்லாவற்றிலும் இந்த 5-எஸ் ஒழுங்குமுறையை கட்டாய மாக கடைப்பிடிக்கிறார்கள். அதுதான் அந்த நாட்டின் பெயருக்கும், புகழுக்கும் காரணம். அதன் வளர்ச்சியும் வியக்கும் விதத்தில் இருக்கிறது.

‘5-எஸ்’ என்பது, பொருட்களுக்கு ஏற்ற இடம் ஒதுக்குதல்- தேவையற்றதை களைதல்- குறைகளை நிவர்த்திசெய்தல்- உற்பத்தியை பெருக்குதல்- வளர்ச்சியை அதிகரித்தல் என்பதாகும். இதை வீடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம். செல்போனில் இருந்து அதை தொடங்குவோம். நமது அடிப்படைத் தேவையான செல்போனை எங்கே வைக்கிறோம்? உங்கள் சட்டைப்பையிலா, பேண்ட் பையிலா? அல்லது கைப்பையிலா எங்கே இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். கைப்பையில்கூட செல் போனுக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்த ரெயின்கோட், மப்ளர் குல்லா அடுத்த குளிர்காலம் வரும்போது எங்கே கிடக்கிறதென்று தெரியாது அல்லது பத்திரப்படுத்தாததால் பாசாணம் பிடித்தும், நைந்தும் போயிருக்கும். அதுபோலவே எமெர்ஜென்சி விளக்கு, டார்ச் விளக்கு, கொசுமட்டை எல்லாம் தேவையான நேரத்தில் எடுக்கும்போது (சார்ஜ் ஏற்றாமல் வைத்திருப்பதால்) வீணாகிப் போயிருக்கும். இதுபோல அவசரத் தேவைக்கு, எப்போதோ தேவைப்படும் என்று வாங்கி வைத்த பொருட்கள் பல பராமரிப்பின்றி வீணாகப் போகவும், காணாமல்போகவும் கூடும். இவையெல்லாம் உங்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

முதலில் எதை எங்கே வைக்க வேண்டும், எதை முன்னே வைக்க வேண்டும், எதைப் பின்னே வைக்க வேண்டும், எதை உயரத்தில் வைக்க வேண்டும், எதை கீழே வைக்க வேண்டும். மூலையில் எதை வைக்க வேண்டும், மூட்டைக்குள் எதை வைக்க வேண்டும் என்று முடிவு செய் வதுதான் இந்த அடுக்கி வைத்தல் முறையின் முதல் படி.

அதன்படி பொருட்களின் நீளம், உயரம், அகலத்திற்கு ஏற்பவும், பயன்பாட்டைப் பொருத்தும் அதை அடுக்கத் தீர்மானிக்க வேண்டும். தினசரி பயன்படுத்தும் பொருட்களை கைவாக்கிலும், குறைவாக பயன் படுத்தும் பொருட்களை அருகிலும், எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களை உயரத்திலும் அல்லது அடியிலும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்தும் பொருட்களை சேமிப்பு அறையில் அல்லது பரணிலும் பத்திரப்படுத்த வேண்டும்.

உடையாத பொருட்களை மட்டுமே ஒன்றின் மீது ஒன்றாக அடுக்க வேண்டும்.

ஊசி, பாசி, நூல், பசை, டேப் என்று ஒவ்வொரு சின்னப் பொருட்களும் நமக்கு அவசியமானவைதான். ஆனால் அவற்றை தேவைக்கேற்ப பிரித்து தனித்தனி பெட்டியில் போட்டு அடைத்து வைத்து, அடுக்கி யும் வைத்துவிட வேண்டும். இவற்றைத் தேடித் தீர்ப்பதில்தான் உங்கள் நேரம் வீணாவதுடன், எரிச்சலும் தொற்றிக் கொள்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

கத்தரிக்கோல், கத்தி, சுத்தி போன்ற கருவிகளையும் தனியே பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அவற்றை மூட்டைகட்டி மூலையில் போடுவதைவிட ஒரு ஆணி அடித்த ஸ்டாண்டில் வைத்துப் பராமரித்தால், அவை தொலைந்துபோவதைத் தடுக்கலாம். அவசியமான நேரத்தில் உடனடியாக எடுத்து பயன் படுத்தவும் செய்யலாம்.

எடை அதிகமான பொருட்களை உயரத்தில் வைக்கக்கூடாது. அது கையாளுவதற்கு சிரமத்தைத் தருவதுடன், கவனக்குறைவாக செயல்பட்டால் உடையவும், காயம் ஏற்படுத்தவும் கூடும்.

மருந்துப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றையும் பத்திரமாக வைக்க வேண்டும். அவற்றை கண்பார்வையில் வைத்து கெட்டுப்போகும் முன் பயன்படுத்தவும், குழந்தைகளுக்கும் அதன் ஆபத்தை உணர்த்தவும் வேண்டும்.

பொருட்களை அடுக்கி வைக்கும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்து காகிதம் அல்லது பிளாஸ்டிக் விரிப்பு விரித்துவிட்டு அடுக்கி வைக்கலாம். இது எளிதில் தூசுபடிவதைத் தடுக்கும்.

பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது மட்டுமல்லாமல், மற்ற இடத்தில் வைக்காமல் இருப்பதையும் வழக்கமாக்கவேண்டும். காணாமல்போன பல பொருட்களை நிறைய வீடுகளில் மேஜை டிராயர் எனும் புதையல் கிடங்கில் இருந்துதான் தோண்டி எடுக்கிறார்கள். அல்லது அலமாரியை அலசி ஆராய்கிறார்கள். அடுக்கி வைத்தால் இதற்கு அவசியமில்லை.

இப்படி பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பதால் வீடே அழகாக மாறிவிடும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு பொருளைத் தேடுவதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் போதுமென்றால் உங்களுக்கு வீணான எரிச்சல் வரப்போவதில்லை. அதுவே பெரிய நிம்மதியைக் கொண்டு வரும். ஒருபொருளை எடுக்கும்போது அது அடுத்த பொருளை தள்ளிவிடத் தேவையில்லை என்றால் உங்களுக்கு பணம் மிச்சமாகும், சேதம் குறையும். பயன் படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்தினால் இடம் மிச்சமாகும், குப்பையால் உண்டாகும் சீரழிவும், ஆரோக்கிய குறைபாடும், அதனால் ஏற்படும் வீண் பணச் செலவும் தடுக்கப்படும்.

எல்லாம் சரிதான், “அடுக்கி வைப்பது என் ஒருத்தியால் ஆகுமா?” என்று இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் கேட்கலாம். உங்களுக்கு சில வார்த்தை. சிறு குழந்தைகள்தான் சில நேரங்களில் சேட்டை செய்வார்கள். மற்றபடி அவர்கள் உங்கள் வார்ப்பு போலவே வளர்ந்து வருவார்கள். சிறு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், வளர்ந்த பிள்ளைகள் எளிதில் உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.

Related posts

இந்த முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்கும்….

sangika

உடல் பருமனைக் குறைக்கும் சோளம்!

nathan

தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடலை ஃபிட்டாக்க உடற்பயிற்சி!…

nathan

ஒப்பனை தூரிகை வழிகாட்டி

nathan

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

nathan

பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துகளில் கால்சியம் முக்கியமானது

nathan

கண்களின் அழகுக்கு…..

nathan

இதை சாப்பிட்டு தொபையைப்க் குறைக்கலாம்!…

sangika

டெங்குக் காய்ச்சலிலிருந்து நம்மை எளிதாகப் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் இத படிங்க!…

sangika