28.1 C
Chennai
Tuesday, Jan 21, 2025
unnamed
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

அப்ப உடனே இத படிங்க… பேலன்ஸ்டு டயட்

நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைச் சமஅளவில் பெற உதவுகிறது. இந்த வகை டயட்டில் குறைந்த காலத்தில் உடல் எடை குறைப்பது போன்ற முறைகள் பின்பற்றப் படுவதில்லை. பேலன்ஸ்டு டயட்டில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கும். இது முறையான ஊட்டச்சத்து உணவுப்பட்டியலைக் கொண்டது. டாக்டர்களால் பெரிதும் பரிந்துரைக்கக்கூடியது. சில டயட்டுகளைப் பின்பற்றினால் மற்ற உணவுகளின் மேல் கிரேவிங் என்கிற தேடல் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால், பேலன்ஸ்டு டயட்டைச் சாப்பிட்டால் அந்த உணர்வு இருக்காது. ஏனெனில், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் அளவோடு சாப்பிடுகிறோம்.

unnamed
பேலன்ஸ்டு டயட் ஏன் முக்கியம்?

* உடல் சீராக இயங்கத் தேவையான ஆற்றலைத் தரும்.

* இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ், உடலில் உள்ள செல்கள், திசுக்கள் மற்றும் உள்ளுறுப்புகளின் இயக்கத்துக்கு உதவும்.

* சீரான உடல் எடையைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.

* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

* நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க உதவும்.

* நிம்மதியான தூக்கம் பெற உதவும்.

* உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்ற உணர்வை அறிய உதவும்.

பேலன்ஸ்டு டயட்டின் பலன்கள்

* தொற்றா நோய்களான உடல்பருமன், சர்க்கரைநோய், இதயநோய், எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் பல வகைப் புற்றுநோய்களிலிருந்து நம்மைக் காக்க உதவுகிறது.

* பேலன்ஸ்டு டயட்டில் எடுத்துக்கொள்ளப்படும், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

* பேலன்ஸ்டு டயட்டின் மிக முக்கியமான பலன்களில் ஒன்று எனர்ஜி. இந்த டயட்டில் பின்பற்றப்படும் உணவுப்பட்டியலில் புரோட்டீன், மினரல்ஸ் மற்றும் ஊட்டச்சத்துகள் சமஅளவில் உள்ளன. அவை, நாள் முழுவதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வழிவகுக்கின்றன.

உணவுப் பட்டியலின் பிரமிட்

முதல் அடுக்கு: கொழுப்பு, எண்ணெய் மற்றும் இனிப்பு வகை உணவுகள்

இரண்டாம் அடுக்கு முதல் பகுதி: பால், யோகர்ட், சீஸ்

இரண்டாம் அடுக்கு இரண்டாம் பகுதி: இறைச்சி, மீன், பீன்ஸ், முட்டை மற்றும் நட்ஸ்

மூன்றாம் அடுக்கு முதல் பகுதி: பச்சைக் காய்கறிகள், சாலட் மற்றும் சூப்

மூன்றாம் அடுக்கு இரண்டாம் பகுதி: பழங்கள் மற்றும் பழச்சாறுகள்

நான்காம் அடுக்கு: சிறுதானியங்கள், தீட்டப்படாத அரிசி மற்றும் தானியங்கள்

குறிப்பு: தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருநாளைக்கு 40 நிமிடங்களென வாரத்துக்கு ஐந்துமுறை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பின்பற்ற வேண்டிய உணவுப் பட்டியல் அதிகாலை (6 மணி அளவில்)

* பெருஞ்சீரகத் தண்ணீர் 200 மி.லி. மற்றும் 5 பாதாம்காலை உணவாக (7 முதல் 9 மணிக்குள்)

* முழுதானியங்கள்

* அரை கப் கேழ்வரகு கஞ்சி மற்றும் பழத்துண்டுகள் (ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பப்பாளி)

* இட்லி அல்லது தோசை, சாம்பார், சட்னி. (புதினா, தக்காளி, வெங்காயம், தேங்காய் சட்னி போன்றவற்றில் ஏதேனும் ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.)

* அவித்த முட்டை மற்றும் பால் சேர்க்காத டீ.

முன்பகல் உணவு (காலை 11.00 முதல் 11.30 மணிக்குள்)

* 1 ஆப்பிள் அல்லது ஆரஞ்சுப் பழம்

* 1 கப் யோகர்ட்/தயிருடன் பழத்துண்டுகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

* காய்கறி சாலட்

* 2 கப் தர்பூசணி அல்லது நட்ஸ் மதிய உணவு (12.30 – 1.30 மணிக்குள்)

* 2 ரொட்டி/புல்கா (நெய் மற்றும் எண்ணெய் இல்லாதது), 1 கப் காய்கறி, 1/2 கப் பருப்பு, 1 கப் கீரைகள்

* 1 கப் சாதம், 1/2 காய்கறி கூட்டு, 1/2 கப் ரசம்

* வாரத்தில் இரண்டு நாள்கள் சிக்கன்/மட்டன்/முட்டை/மீன் (1/2 கப் எண்ணெய் சேர்த்துச் செய்யலாம்)

ஸ்நாக்ஸ்… (மாலை 3.30 – 4.30 மணி வரை)

* முளைகட்டிய தானியங்கள், சுண்டல் அல்லது பிரெட் சாண்ட்விச், 1 கப் கிரீன் டீ.

இரவு உணவு… (இரவு 7 முதல் 8 மணிக்குள்)

* இட்லி, இடியாப்பம், புட்டு, தோசை இவற்றில் ஏதாவது ஒன்று. சாம்பார், சட்னி. (புதினா அல்லது வெங்காயச் சட்னியுடன் சாப்பிடலாம். தக்காளி, தேங்காய்ச் சட்னியைத் தவிர்க்கலாம்.)

* சப்பாத்தி, பட்டாணிக் குருமா.

* அரிசி உணவுகளைத் தவிர்க்கலாம்

தூங்கும் முன் (இரவு 9.00)

* ஒரு டம்ளர் பால்.

* இளஞ்சூடான நீருடன் உப்பு கலந்த எலுமிச்சைச் சாறு

* பழங்கள் 1/2 கப் (சளி பிடிக்கும் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கவும்)

டிப்ஸ்

* கறி, கிரேவி செய்யும்போது எண்ணெயுடன் சிறிது தண்ணீரையும் பயன்படுத்துங்கள்.

* நீண்டநேரம் சமைப்பதைத் தவிர்த்து, குறைவான நேரத்தில் சமைத்துச் சாப்பிடுங்கள்.

* வேகவைத்த முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* ஃப்ரெஷ்ஷான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* சீரகத் தண்ணீர், இளநீர், சூப், பழச்சாறுகள், பால் போன்ற திரவ உணவுகளை அதிகம் பருகுங்கள்.

 

 

அளவான உணவே ஆரோக்கியம்

* வயதுக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது ஆரோக்கியத்தைத் தரும். கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை அளவாகச் சாப்பிடுவது நல்லது.

* பழச்சாறுகள், இனிப்புகள், பொரித்த உணவுகள் மற்றும் வெள்ளை ரவையை அளவாகச் சாப்பிடலாம்.

* வாரத்துக்கு இரண்டுமுறை, அசைவ உணவுகளைச் சாப்பிடலாம்.

* உருளை, கருணை போன்ற கிழங்கு வகைகளை அளவாகச் சாப்பிடலாம்.

* மூன்று வேளையும் மாவுச்சத்து உணவுகளைச் சாப்பிடாமல் இருவேளை மட்டும் சாப்பிடுவது நல்லது.

* சிறுதானியங்களைத் தினமும் ஒரு நேரம் சாப்பிடுவது நல்லது.

(மருத்துவரின் ஆலோசனை பெற்றபிறகே இந்த டயட்டைப் பின்பற்றுவும்.)

பெண்களுக்கான பேலன்ஸ்டு டயட் உணவுகள்

சங்குப்பூ டீ

தேவையானவை: வயலட் கலர் சங்குப்பூ – 5, தண்ணீர் – 200 மி.லி., தேன் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – கால் டீஸ்பூன்.

செய்முறை: சங்குப்பூவை அலசி வைத்துக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கவும். கொதித்த நீரில் சங்குப்பூவை போட்டு 10 நிமிடம் வாணலியை மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்துத் திறந்து பார்த்தால் பூவில் உள்ள எசென்ஸ் நீரில் கலந்திருக்கும். பிறகு அந்த நீரை வடிகட்டி டம்ளரில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.

பலன்கள்: சங்குப்பூ ரத்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்யும். குடற்புழுக்களைக் கொல்லும்; செரிமானத்துக்கு உதவும். தலைவலியைச் சரிசெய்யும். சோர்வைப் போக்கிப் புத்துணர்வு பெற உதவும்.

ஸ்வீட் பச்சைப் பயறு 

தேவையானவை: பச்சைப் பயறு – 1 கப், பொடித்த வெல்லத்தூள் – கால் கப், தேங்காய்த் துருவல் – கால் கப், நெய் – 1 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை, சுக்குத்தூள் – 2 சிட்டிகை.

செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை மிதமான தீயில் வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். ஊறிய பச்சைப் பயறை குக்கரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். வெந்த பச்சைப் பயறை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, வெந்த பச்சைப் பயறு, வெல்லக்கரைசலைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியாக வந்ததும் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

பலன்கள்: பச்சைப்பயறு கொழுப்பைக் குறைக்கும். ரத்தச்சோகையைச் சரிசெய்யும். சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் வெல்லம், இரும்புச்சத்து நிறைந்தது. சுக்கு, அலுப்பை நீக்கிப் புத்துணர்வு பெற உதவும்.

ராகி ஸ்வீட் சேமியா 

தேவையானவை: ராகி சேமியா – 1 கப், தேங்காய்த் துருவல் – கால் கப், நாட்டுச் சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், முந்திரி – 10, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: முந்திரிப்பருப்பை சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். ராகி சேமியாவுடன் அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து வடித்துவிடவும். பின்னர் அதை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வெந்த ராகி சேமியா சூடாக இருக்கும்போது மீதமுள்ள நெய், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நாட்டுச் சர்க்கரை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்: ராகி, எலும்புகளை பலமாக்கும். பற்கள் வலுவாகும். உடலில் உள்ள தேவையற்ற சதையைக் குறைக்க உதவும். நாட்டுச் சர்க்கரை அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்தது. ஏலக்காய், செரிமானத்துக்கு உதவும். முந்திரியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுவடையச்செய்வதோடு புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கும்.

முருங்கைக்கீரை முட்டைப் பொரியல்

தேவையானவை: முருங்கைக்கீரை – 1 கப் (உருவியது), முட்டை – 1, சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்கீரையை அலசி வைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். முட்டையை உடைத்து, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு அலசிய முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து வேகும்வரை வதக்கவும். வெந்ததும், முட்டைக் கலவையை ஊற்றிக் கிளறவும். முட்டை, முருங்கைக்கீரையுடன் சேர்ந்து வெந்ததும் இறக்கவும்.

பலன்கள்: வைட்டமின் – ஏ சத்து அதிகம் இருப்பதால், பார்வைத் திறனை அதிகரிக்கும். நீண்ட நேரத்துக்குப் பசி தாங்கும். உடல் சூட்டைத் தணிக்க உதவும். பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் இதை உட்கொள்வது நல்லது. முடி உதிர்தல் பிரச்னை குறையும்.

வாழைப்பூ பொரியல்

தேவையானவை: சிறிய வாழைப்பூ – ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு – 1 கப், சின்ன வெங்காயம் – 5, தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை மேல்தோல் உரித்து, நரம்பு நீக்கி ஆய்ந்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த வாழைப்பூ, வேகவைத்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

பலன்கள்: வாழைப்பூ, குடலை சுத்தம் செய்து, செரிமானக் கோளாறை சரிசெய்யும். உளுந்து உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். துவரம்பருப்பு, குடல் புண்களைக் குணப்படுத்தும். சின்ன வெங்காயம் வயிற்றுக்கோளாறைச் சரிசெய்யும்.

டேட்ஸ் பர்ஃபி

தேவையானவை: பேரீச்சம்பழம் – 100 கிராம், தேங்காயில் எடுக்கப்பட்ட சர்க்கரை (Coconut Sugar) – 100 கிராம், பால் – 50 மி.லி, நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பாதாம் பருப்பு – 5.

செய்முறை: பாதாம்பருப்பைத் துருவிக் கொள்ளவும். பாலை இளஞ்சூடாகக் காய்ச்சிக்கொள்ளவும். பேரீச்சம்பழத்தைக் கொட்டை நீக்கி, அரை மணி நேரம் பாலில் ஊற வைக்கவும். ஊறவைத்த பேரீச்சம்பழம், தேங்காய் சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்கி, அரைத்த பேரீச்சை விழுதைச் சேர்த்து கொஞ்சம், கொஞ்சமாக நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும், ஏலக்காய்த்தூள், பாதாம் துருவல் சேர்த்து, நெய் தடவிய தட்டில் போட்டு சமப்படுத்தவும். ஆறியவுடன் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

பலன்கள்: பாதாமில் உள்ள புரதம், முகப்பொலிவு மற்றும் சருமப் பொலிவுக்கு உதவும். கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் கொண்ட பேரீச்சை, எலும்புகளை வலுப்படுத்தும். ரத்தச்சோகை நீங்கும். மலச்சிக்கல் தீரும். தேங்காய்ச் சர்க்கரை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

உளுந்தங்களி 

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 1 கப், வெல்லம் – 1 1/4 கப், தண்ணீர் – 3 கப், நெய் – எண்ணெய் கலவை – அரை கப்.

செய்முறை: வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் – நெய் கலவையை விட்டுச் சூடாக்கி, உளுத்தம் மாவைச் சேர்த்து, நுரைத்து வரும்வரை கிளறவும். பிறகு, வெல்லக் கரைசலை ஊற்றி, அல்வா போல் சுருண்டு வரும் வரை கிளறவும். அவ்வப்போது மீதமுள்ள எண்ணெய் – நெய் கலவையைச் சேர்த்துக்கொள்ளவும்.

பலன்கள்: மாதவிடாயின்போது ஏற்படக்கூடிய முதுகு வலி, இடுப்புவலியைக் குறைக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு இது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். வாந்தி மற்றும் பித்தத்தைப் போக்கும்.

ஏ பி சி ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் – பாதி அளவு, பீட்ரூட் – பாதி அளவு, கேரட் – பாதி அளவு, நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன், தண்ணீர் – 1 கப், ஐஸ்கட்டிகள் (விருப்பப்பட்டால்) – தேவையான அளவு

செய்முறை: ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள், பீட்ரூட், கேரட் துண்டுகள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்தக் கலவையை வடிகட்டி, தேவையான தண்ணீர் சேர்த்து, ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: இதயம் மற்றும் நுரையீரலைப் பலப்படுத்தும். இதயநோய்கள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பார்வைத் திறன் மேம்படும். கண் எரிச்சலைப் போக்கும். பல வகைப் புற்றுநோய்களைத் தடுக்கும்.

எள்ளுருண்டை

தேவையானவை: எள் – 1 கப், வெல்லத்தூள் – அரை கப், நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை: எள்ளை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும்வரை வறுக்கவும். எள் ஆறியதும், வெல்லத்தூளையும் எள்ளையும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, கலவையை எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பலன்கள்: தாமிரம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் சத்துகள் இதில் நிறைந்துள்ளன. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். எலும்புகள் வலுவடைய உதவும். எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும்.

சுண்டைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: சுண்டைக்காய் – 1 கப், வேகவைத்த கடலைப்பருப்பு – அரை கப், சின்ன வெங்காயம் – 10, பூண்டுப் பல் – 5, தக்காளி – 1, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: சுண்டைக்காயை காம்பு நீக்கிப் பாதியாக நறுக்கி, தண்ணீரில் அலசி எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, சுண்டைக்காயையும் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். சுண்டைக்காய் வெந்ததும், வேகவைத்த கடலைப்பருப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

பலன்கள்: வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும். குடல் புண்களை ஆற்றும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

கவுனி அரிசி இனிப்பு பொங்கல்

தேவையானவை: கவுனி அரிசி – 1 கப், தண்ணீர் – 4 கப், நாட்டுச் சர்க்கரை – 1 கப், தேங்காய்த் துருவல் – அரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன் .

செய்முறை: கவுனி அரிசியைக் கழுவி பாத்திரத்தில் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன், மீதமுள்ள 2 கப் தண்ணீரையும் சேர்த்துக் குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்துக் குக்கரைத் திறக்கவும். வெந்த கலவையில் நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வற்றியதும் இறக்கிப் பரிமாறவும்.

பலன்கள்: உணவுக்குழாய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்தது. சரும ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது.

அத்திப்பழ கீர்

தேவையானவை: உலர் அத்திப்பழம் – 4, பால் – 200 மி.லி, சாரைப்பருப்பு – 1 டீஸ்பூன், பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை: உலர் அத்திப்பழத்தை சிறிதளவு தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த கலவையைப் பாத்திரத்தில் போட்டு, பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பனங்கற்கண்டு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பனங்கற்கண்டு கரைந்ததும் இறுதியாக சுக்குதூள், சாரைப்பருப்பு சேர்த்து இறக்கவும்.

பலன்கள்: ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்க உதவும். மலச்சிக்கலை சரிசெய்யும். கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள்கூட அளவாகச் சாப்பிடலாம்.

கொய்யா இலை டீ

தேவையானவை: கொய்யா இலை – 6, தண்ணீர் – 200 மி.லி., பனங்கற்கண்டு அல்லது தேன் – 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்.

செய்முறை: கொய்யா இலையை அலசி வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு அடுப்பை அணைத்து பாத்திரத்தை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் மூடியைத் திறந்தால், இலைகளின் எசென்ஸ் கலந்திருக்கும். பிறகு வடிகட்டி, நீரை டம்ளரில் எடுத்துக்கொள்ளவும். பனங்கற்கண்டு அல்லது தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.

பலன்கள்: ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். வயிற்றுவலி மற்றும் வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும். உடல் எடை அதிகரிக்க உதவும். புத்துணர்வு பெற உதவும்.

பீட்ரூட் சூப்

தேவையானவை: சிறிய பீட்ரூட் – 1, துவரம்பருப்பு வேகவைத்த நீர் – 1 கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 2, சோம்பு – 2 சிட்டிகை, கல்பாசி – சிறிதளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை: பீட்ரூட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் தனித்தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, சோம்பு, கல்பாசி தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பீட்ரூட்டை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும், துவரம்பருப்பு வேகவைத்த நீர் ஊற்றவும். அத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: ரத்த உற்பத்திக்கு உதவும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும். ரத்தச்சோகை வராமல் தடுக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொத்தமல்லித்தழை செரிமானத்துக்கு உதவும்.

சிவப்பரிசி பாயசம்

தேவையானவை: சிவப்பரிசி – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – 1 கப், நாட்டுச் சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி – 10, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை: சிவப்பரிசியை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் ரவை போல உடைக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சிவப்பரிசி ரவையைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். நன்றாக வெந்ததும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

பலன்கள்: கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, பித்தப்பைக் கற்கள், ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

சோயா உருண்டை மசாலா

தேவையானவை: சோயா உருண்டைகள் – 1 கப், பெரிய வெங்காயம் – 1, இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், தக்காளி – 1, சோம்பு – கால் டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை: சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். சூடு ஆறியதும் நீரை வடிகட்டிக் கையால் பிழிந்து, மீண்டும் நீர் ஊற்றிப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, தேவையான அளவில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி சோம்பு, பட்டைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, நறுக்கிய சோயா உருண்டைகள் போட்டுக் கிளறவும். மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும். தண்ணீர் வற்றியதும், நன்றாகக் கிளறி இறக்கவும்.

பலன்கள்: உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். பட்டை, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது.

தினை கேசரி

தேவையானவை: தினை – அரை கப், நாட்டுச் சர்க்கரை – அரை கப், தண்ணீர் – 2 கப், நெய் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உலர் திராட்சை, முந்திரி தலா – 10, கேசரி கலர் – 1 சிட்டிகை

செய்முறை: வாணலியில் நெய் விட்டுச் சூடாக்கி, உலர் திராட்சை, முந்திரியை வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் தினையை வறுக்கவும். பிறகு ஆறவிட்டு, மிக்ஸியில் ரவை போல் அரைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, தினை ரவையைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும் (இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும்). இறுகியதும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

பலன்கள்: தினை கொழுப்பைக் குறைத்து, உடல் எடை குறைக்க உதவுகிறது. தினையில் நிறைந்துள்ள புரதச்சத்து உடலை வலுவாக்கும். வாயுக் கோளாறைப் போக்கும். பசியை உண்டாக்கும். மற்ற தானியங்களைவிட தினையில் இரும்புச்சத்து அதிகம்.

நெல்லிக்காய் சாதம்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 2, வேகவைத்த சாதம் – 1 கப், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை: நெல்லிக்காயைத் துருவிக்கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பொன்னிறமானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய் சேர்த்துக் கிளறவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையைச் சாதத்தில் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: இதய நோய், மஞ்சள்காமாலை வராமல் தடுக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும். பார்வைத்திறன் மேம்படும். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். ரத்த உற்பத்திக்கு உதவும்.

முளைகட்டிய பயறு சாலட்

தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு – 1 கப், நறுக்கிய குடமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 1 (நறுக்கவும்), மாங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கறுப்பு உப்பு – 2 சிட்டிகை, ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்.

செய்முறை: நறுக்கிய பச்சை மிளகாய், குடமிளகாய், முளைகட்டிய பச்சைப் பயறு, கேரட் துருவல், மாங்காய்த் துருவல், கறுப்பு உப்பு, ஆலிவ் ஆயில் ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துக் கிளறவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: முளைகட்டிய பயறில் அதிக அளவு புரதம், வைட்டமின்கள் மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளன. இந்த சாலட் உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது. கேரட், ரத்த உற்பத்திக்கும் சருமப் பராமரிப்புக்கும் உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த குடமிளகாய், உடல் புத்துணர்வு பெற உதவுகிறது.

மாதுளை லஸ்ஸி

தேவையானவை: கெட்டித் தயிர் – 1 கப், மாதுளை முத்துகள் – 1 கப், நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் – கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), புதினா இலை – சிறிதளவு

செய்முறை: மிக்ஸியில் கெட்டித் தயிர், மாதுளை முத்துகள், நாட்டுச் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை டம்ளரில் ஊற்றி, மாதுளை முத்துகள், புதினா இலை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: மாதுளை, முடி உதிர்வதைத் தடுக்கும். சருமச் சுருக்கங்களைச் சரிசெய்யும். நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ரத்தவிருத்திக்கு உதவும். புதினா, புத்துணர்வு பெற உதவும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

புதினா ஜூஸ்

தேவையானவை: புதினா இலை – 30, வறுத்த சீரகத்தூள் – 2 சிட்டிகை, மிளகுத்தூள் – 1 சிட்டிகை, தண்ணீர் – 2 கப், தேன் – 3 டீஸ்பூன், கறுப்பு உப்பு – 1 சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: புதினா, தேன், சீரகத்தூள், மிளகுத்தூள், கறுப்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையில் மீதமுள்ள தண்ணீர் சேர்த்து, ஐஸ்கட்டிகள் போட்டுப் பருகவும்.

பலன்கள்: ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. மேலும், ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. வயிற்றுப்போக்கை சரிசெய்யும். வயிற்றைச் சுத்தம் செய்யும். செரிமான சக்தியை அதிகரிக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

செம்பருத்திப்பூ ஜூஸ்

தேவையானவை: செம்பருத்திப்பூ – 4, தண்ணீர் – 1 கப், நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் – 4.

செய்முறை: செம்பருத்தி இதழ்களை மட்டும் தனியாக ஆய்ந்து வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கவும். கொதித்தத் தண்ணீரில் செம்பருத்தி இதழ்களைப் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை 10 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு திறந்து பார்த்தால், எசென்ஸ் கலந்து நீர் சிவப்பாக இருக்கும். இந்த நீரை வடிகட்டி, இதனுடன் நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, ஐஸ்கட்டிகள் போட்டுப் பரிமாறவும்.

பலன்கள்: இதயநோய்கள் வராமல் தடுக்கும். ரத்தக்குழாய் அடைப்பு, வலிப்பு மற்றும் படபடப்பை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறைச் சரி செய்யும்.

Related posts

சூப்பர் டிப்ஸ் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி ரசம் ….

nathan

தெரிஞ்சிக்கங்க…எடையைக் குறைத்து அழகை உயர்த்தும் உன்னத வழிமுறைகள்!!!

nathan

கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள் விரிவாக அறிந்து கொள்ளலாம்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு சமையலில் செய்ய வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள் !

nathan

காளானை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொழுப்பை அடித்து விரட்டும் அதிசய சூப்…!

nathan

பாதாமை ப்ராஸஸ் செய்வது எப்படி???? ஆரோக்கியம் & நல்வாழ்வு!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்

nathan

வாரத்திற்கு நான்கு நாள் முந்திரி சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan