மலச்சிக்கல்தான் பல பிரச்னைகளுக்குக் காரணம்’ என்பது மருத்துவப் பொன்மொழி. நம்முடைய உடம்பானது, சாப்பிட்ட உணவுகளிலிருந்து சத்துகளைப் பிரித்துக்கொண்டு, கழிவை அனுப்புகிறது. ஒருநாளைக்கு இரு வேளைக் கழிவுகளை கட்டாயம் வெளியேற்ற வேண்டும். `ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் மலம் கழிப்பேன்’ என்பதும், `காபி அல்லது டீ குடித்தால்தான் மலம் வருகிறது’ என்பதும், `வரும், ஆனால் எப்போது வரும் என்பது தெரியாது’ என்பதும் மலச்சிக்கல்தான்.
காலைக் கடன் கழிப்பதில் பெண்களிடம் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. காலையில் எழுந்ததுமே சமையல், பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்துவது, வேலைக்குக் கிளம்பும் கணவருக்குத் தேவையானது எனப் பம்பரமாகச் சுழன்றுகொண்டே இருக்கிறார்கள். இதனால், எல்லா வேலைகளையும் முடித்த பிறகு போகலாம் என அடக்கிக்கொள்வார்கள். இங்குதான் பெண்களைப் பிடிக்கிறது சனி. கழிவுகள் சரியாக வெளியேறாத உடம்பின் குடல் பாகத்தில், வெப்பமும் வாயுவும் அதிகமாக உருவாக ஆரம்பிக்கும். இந்த வெப்பமும் வாயுவும் குடலிலிருந்து மெள்ள மெள்ள உடலின் மற்றப் பகுதிகளுக்குப் பயணமாகி, எங்கெல்லாம் எலும்புகள் இணைக்கும் மூட்டுகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் தேங்க ஆரம்பிக்கும்.
எலும்புகள் இணைக்கும் மூட்டுகளில் `சைனோவியல் மெம்பரேன்’ எனப்படும் ஜவ்வும், ‘சைனோவியல் ஃபிலூய்டு’ எனப்படும் திரவமும் இருக்கும். இந்த இரண்டும்தான் எலும்பு மூட்டுகள் வலியில்லாமல் சுழல, வேலை பார்க்க உதவுபவை. மலச்சிக்கலால் அதிகமாக உருவான வெப்பம், இந்த எலும்பு மூட்டுகளில் இருக்கும் ஜவ்வின் ஈரப்பதத்தை மெள்ள மெள்ள குறைத்து, ஜவ்வைத் தேய்மானம் அடையச் செய்யும். உடம்பில் அதிகமாக உற்பத்தியான வாயுவும், இந்த மூட்டுகளில்தான் தேங்க ஆரம்பிக்கும். விளைவு, மூட்டுப் பகுதிகளை நீங்கள் அசைக்கும்போதெல்லாம் தேய ஆரம்பித்த ஜவ்வை, இரண்டு பக்கமும் எலும்புகள் உரச ஆரம்பிக்கும்; அதனால், `கடக் முடக்’ எனச் சத்தம் வர ஆரம்பிக்கும். தவிர, மூட்டுகளில் வாயுவும் தேங்கி நிற்பதால், வலியும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.
மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் ஒரு வாரத்தில் நிகழ்கிற விஷயம் கிடையாது. ஆறு மாதத்தில் ஆரம்பித்து, ஒரு வருடம்கூட எடுத்துக்கொண்டு மெள்ள மெள்ள பெண்களைத் தாக்கும். இதனுடன் பெண்களுக்கே உரிய சரிவிகித உணவில்லாமை, கால்சியம் குறைபாடுகளும் சேரும்போது, அது உங்களை மெள்ள மெள்ள `ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ்’ பிரச்னைக்குள் தள்ளிவிடும். இத்தனை பிரச்னைகளின் ஆரம்பம், நாளொன்றுக்கு இரு வேளையும் கழிவுகளை வெளியேற்றாததுதான்.
வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
* இரவுகளில் இரண்டு இட்லி அல்லது, இரண்டு சப்பாத்தி, அதனுடன் ஒரு வாழைப்பழம் அல்லது, ஒரு கொய்யா அல்லது, ஒரு பெரிய துண்டு பப்பாளி என அளவாகச் சாப்பிடுங்கள். காலையில் எழுந்ததும் பல் தேய்த்து, ஒரு சொம்புத் தண்ணீர் குடித்தவுடன் கழிவுகள் வெளியேறுகிறபடி உடம்பைப் பழக்குங்கள். கழிவுகள் வெளியேறாத நாளில் ஒரு வேளை உணவைச் சாப்பிடாதீர்கள். உங்கள் உடலின் வெளிப்பகுதியைப் போலவே குடல் பகுதிகளையும் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொண்டால், மூட்டுகளில் சத்தம் வராது, வலியும் வராது.