சித்தர்கள் இரண்டு குமரிகளை வெகுவாகப் போற்றுவர், முதல் குமரி அவர்கள் வணங்கும் பெண் தெய்வ அம்சமான வாலைக்குமரி, அடுத்த குமரி, மூலிகைகளின் குமரி என அவர்கள் போற்றும் சோற்றுக் கற்றாழை. சித்த மூலிகைகளில் தனி சிறப்பிடம், காயகற்ப மூலிகை என்று போற்றப்படும் சோற்றுக் கற்றாழைக்கு உண்டு. கிராமங்களில், 35 அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சர்வ சாதாரணமாக வயல் வெளிகளில், தோட்டங்களில் காணப்பட்ட சோற்றுக் கற்றாழையை, இப்போது நாம் கிராமங்களில் கூட காண்பது அரிதாகி விட்டது.
அவற்றின் அற்புத மருத்துவ ஆற்றல் கண்டு, அக்காலத்திலேயே, அவற்றை எல்லா இடங்களிலிருந்தும், கொண்டு சென்றுவிட்டனர்.
இன்றைக்கு பெண்களின் அழகு சார்ந்த பொருட்கள் தயாரிப்பு உலகளவில் கொடிகட்டி பறக்கிறது என்றால், அதற்கு மூல காரணம் நமது சோற்றுக் கற்றாழைதான். நம் தேசத்தில் எங்கும் கிடைத்த அவற்றின் பயன்பாட்டை அரிதாக்கி, நமக்கு அவற்றின் அத்தியாவசியத்தை செயற்கை வழிகளில் அவர்கள் தரும் முகப்பூச்சு கிரீம்கள் மூலம் திணித்து, நம்மை பயன்படுத்த வைத்து, ஆதாயமடைகின்றனர். முன்னோர்கள் சோற்றுக் கற்றாழையின் ஆற்றலை பூரணமாக உணர்ந்து, அவற்றை காய கற்பமாகப் பயன்படுத்தி, வியாதிகள் அணுகா உடல் வலிவைப் பெற்றனர்.
இப்படிதான் சோற்றுக் கற்றாழையின் நலன் தரும் பயன்களை உணர்ந்த மேலைநாட்டினர், மூலப்பொருளாக நமது சோற்றுக் கற்றாழையை வைத்து அழகுசாதனப் பொருட்கள் மட்டும் செய்யவில்லை. உடலுக்கு பல அற்புதங்கள் செய்யும் அவற்றின் தன்மைகளைக் கண்டு, அவற்றின் சத்திலிருந்து, உடலுக்கு இளமைத்தன்மை தருவதிலிருந்து, கொடிய வியாதியாக கருதப்படும், புற்று வியாதி வரை இவற்றை மருந்தாக்குகின்றனர். இதைத்தான், நம் சித்தர்கள் அன்றே சொல்லியிருந்தாலும், இன்று போல அன்று எல்லோரும் அறியாத நிலை இருந்ததால், பெரும்பாலானோர் அறிய முடியவில்லை. இன்னும் நமக்கு சோற்றுக் கற்றாழையின் முழுப் பலன்கள் தெரியவில்லை. தெரிந்திருந்தால் உடலின் பல்வேறு வியாதிகளுக்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் இயற்கை நிவாரணி சோற்றுக் கற்றாழையை விட்டுவிட்டு, பக்க விளைவுகள் மூலம் உடலுக்கு துன்பம் தரும் மேலை மருத்துவத்தை நாடுவோமா? சோற்றுக் கற்றாழை மனிதனுக்கு தரும் பலன்களை பார்ப்போம்.
உண்ணும் முறை சோற்றுக் கற்றாழை மடல்களின் தோலை நீக்கி, அதன் சதைப் பகுதியை சேகரித்து ஆறேழு முறை அலசிவர, அதன், வீச்சம் நீங்கும். அதனை காலநிலைக்கேற்ப, கோடைக்காலமெனில் வெறுமனே நெல்லிக்காயளவு சாப்பிடலாம், குளிர்காலங்கள் எனில், அத்துடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடனும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர, உடலில் இரத்தத்தில் கலந்திருந்த நச்சுக்கள் வெளியேறும், உடல் உள் உறுப்புகளின் சூடு குறையும், உடலின் சோர்வு விலகும்.
முகத்தில் உள்ள நச்சுப் பருக்கள் மற்றும் உடல் காயங்கள் ஆறி மறையும், மலச்சிக்கல் நீங்கும், உடலின் அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து உடல் வளமாகும். உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்கும், செரிமானக் கோளாறுகள் காரணமாக ஏற்படும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் விலகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, உடலில் புதிய இரத்த செல்களை அதிகரித்து உடல் முதுமையைத் தடுத்து, இளமையை காக்கும் இயல்புடையது. இந்த முறைகளில் வீடுகளில் சாப்பிடுவதை தற்போது, நகரங்களில் சோற்றுக் கற்றாழை ஜூஸ் என விற்கின்றனர், ஆயினும், சோற்றுக் கற்றாழையை அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே, சிறப்பான முறையாகும்.
கற்றாழையுடன் இதர மூலிகைகள் சேர்த்தல் ; விளக்கெண்ணையுடன் சோற்றுக்கற்றாழையை காய்ச்சி, சிறிதளவு இருவேளை சாப்பிட்டு வர, வயிற்றுப் புண், வயிறு வீக்கம் மற்றும் சில பெரியவர்களுக்கு உள்ள நெடு நாள் மலச்சிக்கல் நீங்கும், உடலின் சூடு குறைந்து, உடல் வனப்புடன் திகழும். உணவில் புளி, காரம் நீக்கி இதையே தினமும் சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி மட்டுப்படும்.
வறட்டு இருமல் நீங்க அலசி எடுக்கப்பட்ட சோற்றுக் கற்றாழையுடன் பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம்,நெய்யுடன் சேர்த்து உண்டுவர, நாள்பட்ட வறட்டு இருமல் தீர்ந்துவிடும். சோற்றுக் கற்றாழை சதைகளை நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் பெண்கள் சாப்பிட்டு வர, மாத விலக்கு இன்னல்கள் தீரும்.
சோற்றுக் கற்றாழை பேதி மருந்து நன்கு அலசி சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை சதைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் கடுக்காய்ப் பொடி சிறிதளவு இட, சோற்றுக் கற்றாழை சதையிலிருந்து நீர் தனியே விலகும், அதை சேகரித்து அத்துடன் ஏழெட்டு துளிகள் எலுமிச்சை சாறு இட்டு, தினமும் காலைவேளையில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன்மூலம், உடலில் அதிகமுள்ள வாயு [வாதம்], பித்தம் [சூடு], மற்றும் நீர் [கபம்] நீங்கி, உடல் புத்துணர்வு பெறுவதை உணரலாம். இதை மூன்று நாட்கள் சாப்பிடனும்.
தலைமுடி காக்க சோற்றுக்கற்றாழை கோடைக்காலங்களில், சோற்றுக்கற்றாழை சதைகளை அரை லிட்டர் அளவு நல்லெண்ணெயில் இட்டு, வெயிலில் சூரியன் படும்படி இடவேண்டும், ஒரு மண் சட்டியில் இவற்றை இட்டு, வெயிலில் வைத்து சட்டியின் வாயை ஒரு மெல்லிய துணியால் கட்டிவிடுதல். குறைந்தபட்சம் முப்பது தினங்கள் வைத்து எடுத்தபின், எண்ணையை தலைக்கு தேய்க்க மற்றும் தேய்த்து குளித்துவர, பயன்படுத்தலாம். மேலும், சோற்றுக்கற்றாழையுடன் படிகாரத்தை சேர்த்து, அதில் பிரிந்த நீரில் தேங்காய் எண்ணையை கலந்து சுண்டக்காய்ச்சி எடுத்த எண்ணையை தினமும் தலையில் தேய்த்துவர, உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, முடி உதிர்தல், பேன் மற்றும் பொடுகுத் தொல்லைகள் நீங்கி, முடிகள் நன்கு வளர்ந்து கூந்தல், பொலிவுடன் திகழும். மேலும், இரவில் நல்ல உறக்கமும் வரும்.
தோல் வியாதிகளின் பாதிப்புகள் நீங்க சோற்றுக் கற்றாழை, மஞ்சள் இவற்றை நன்கு அம்மியில் இட்டு அரைத்து, வெயில் பட்டு கறுத்துப்போன, உடலின் கைகால் மூட்டுகள், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தடவி சிறிதுநேரம் கழித்து, நன்கு தேய்த்து குளித்துவர, தோல் நோய்கள் விலகி, வெயிலில் பட்ட கருமைகள் நீங்கி, உடல் வனப்பாகும்.
கண் வியாதிகள் நீங்க சோற்றுக்கற்றாழை சதைகளில் படிகாரத்தை இட்டு, பிரிந்த நீரை சேகரித்து, கண்களில் இட, கண்கள் அரிப்பு, கண் சிவப்பு மற்றும் கண் வியாதிகள் யாவும் மறையும்.
முகத்தை பொலிவாக்க சோற்றுக்கற்றாழை மாஸ்க் சோற்றுக்கற்றாழை சதையை பதமாக்கி, அதை முகத்தில், கரும்புள்ளி அல்லது பருக்கள் மீது தடவி சற்றுநேரம் கழித்து முகத்தை கழுவிவர, அவையெல்லாம் நீங்கி, முகச்சுருக்கத்தை போக்கி, முகத்தை பொலிவாக்கும். மேலும் எல்லாவகை சருமத்திற்கும் இந்த “இயற்கை மாஸ்க்” பலன் தரும். ஆண்கள் ஷேவிங் செய்யும்போது, “ஆப்டர் ஷேவ் லோசனாக” பயன்படுத்தலாம். தீக்காயங்கள் மீது இட்டுவர, அவை ஆறும். வீக்கங்களில் தடவிவர, அடிபட்ட வீக்கங்கள் நீக்கும். சோற்றுக்கற்றாழை சதையை இரவு படுக்குமுன், பாதங்களில் தடவிவர, காலில் ஏற்படும் பித்த வெடிப்பு மற்றும் கால் எரிச்சல் நீங்கும்
தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக்கற்றாழை வேர்களை சுத்தம் செய்து, ஆவியில் வேகவைத்து, பின் வெயிலில் உலர்த்தி, பொடியாக்கி, பாலில் பனங்கற்கண்டு சேர்த்து, இரவில் சாப்பிட்டுவர, உடல் வளமாகி, தாம்பத்தியம் மேம்படும்.