பண்டைய காலத்தில் அரிசியை விட சிறுதானிய உணவுகளை மக்கள் அதிகம் உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.மனித நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய உணவுப்பொருளாக கேழ்வரகு, கம்பு இருந்திருக்கிறது.
கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு (Unsaturated Fat) அதிக அளவில் உள்ளது.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய கேழ்வரகை சாப்பிடுவதால் ஆரோக்கியமான எலும்புகளை பெறலாம், நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேழ்வரகு நல்ல பலனை தருகிறது.
இதை கொண்டு கூழ் மற்றும் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கேழ்வரகு கூழ்- தேவையானவை, கேழ்வரகு மாவு – 1 கப்,வேர்க்கடலை – 1 கைப்பிடி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.பாத்திரத்தில் 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.நன்கு கொதி வந்ததும் கேழ்வரகு கலவை, வேர்க்கடலை, உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறி விட்டு எடுத்தல் கேழ்வரகு கூழ் ரெடி.
கேழ்வரகு அல்வா- தேவையானவை
கேழ்வரகு மாவு – 100 கிராம்,வேர்க்கடலை – 100 கிராம்,ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
நாட்டு சர்க்கரை – 250 கிராம்,நெய் – 200 கிராம்,வெள்ளை பூசணி அல்லது கேரட் – 100 கிராம்,
பால் – 150 மி.லி.
செய்முறை
கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். ஆறியதும் தண்ணீர் சேர்த்து தோசைமாவுப் பதத்திற்கு கரைக்கவும்.கடாயில் பாலை ஊற்றி கொதிக்க வைத்து, துருவிய பூசணியை சேர்த்து வேக வைக்கவும்.பின் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும். சிறிது கெட்டியானதும், கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றி, நெய் விட்டு மெதுவாக கிளறவும்.
கடாயில் பக்கங்களில் ஒட்டாமல் பதம் வரும்வரை நெய் விட்டு கிளறவும்.மற்றொரு கடாயில் நெய் விட்டு முந்திரி, வேர்க்கடலை, தேங்காய்த்துருவல் வறுத்து, அல்வாவில் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கேழ்வரகு அல்வா ரெடி.