அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இது தான் உதாரணம். ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள நல்ல உணவுகளும் கூட, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது எதிர்வினை விளைவுகளை அளிக்க ஆரம்பித்துவிடுகிறது.
நாம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைக்கும் நட்ஸ், கீரை, இறைச்சி தொடங்கி தண்ணீர் வரை நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகள் அளவிற்கு அதிகமாக உடலில் சேரும் போது தீயத் தாக்கங்களை தான் ஏற்படுத்துகின்றன.
நட்ஸ்!
அன்றாட ஆரோக்கியத்திற்கு அவசியமான புரதம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு நட்ஸ். இதில், பிரேசில் நட்ஸ்-ல் செலினியம் எனும் சத்தும் இருக்கிறது. ஓர் நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நட்ஸ் போதுமானது. 6 – 8 நட்ஸ் உட்கொள்வது உடலில் செலினியம் அளவு அதிகரிக்க காரணியாக ஆகிறது. அதிகப்படியான செலினியம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க செய்கிறது. இதனால், முடி உதிர்தல், நகங்கள் வலுவிழந்து போவது, ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம்.
கீரை!
அனைத்து வகை கீரை உணவுகளும் உடலுக்கு அற்புத ஆரோக்கிய நன்மைகள் தரவல்லவை. ஆனால், அதிகப்படியாக கீரை உட்கொள்வது சிறுநீரக கற்கள் உண்டாக காரணியாக திகழ்கிறது.
சிவப்பு இறைச்சி!
சிவப்பு இறைச்சி உணவுகள் உட்கொள்வதால் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால், அதிகமாக இந்த வகை இறைச்சி உணவுகள் உட்கொள்வதால் உடலில் அளவுக்கு அதிகமாக இரும்பு சத்து கூடும் போது, தலைச்சுற்றல், சோர்வு, தலைவலி, வாந்தி, குமட்டல், மற்றும் மூச்சு திணறல் போன்றவை ஏற்படலாம்.
ப்ரௌவுன் ரைஸ்!
வெள்ளை அரிசியை விட ப்ரௌவுன் ரைஸ் தான் சிறந்தது. இதில் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. உணவு ஆரோக்கிய நிபுணர்களும் கலிபோர்னியா, இந்தியா, பாகிஸ்த்தான் போன்ற நாடுகளில் விளைவிக்கப்படும் ப்ரௌவுன் ரைஸ் பயன்படுத்த கூறி அறிவுரைக்கின்றனர். ஆனால், ப்ரௌவுன் ரைஸ்-ஐ வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
தண்ணீர்!
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால், சிறுநீரகம் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய முடியாமல் போகும். இதனால், இரத்தத்தின் சோடியம் அளவு குறைய வாய்ப்புகள் அதிகம்.
பழரசம்!
நம்மில் பலர் பழரசம் அருந்துவது ஆரோக்கியமான விஷயம் என கருதி வருகிறோம். ஆனால், பழங்களை ஜூஸாக குடிப்பதை விட, கடித்து உண்பது தான் சிறந்தது. பழரசமாக அருந்தும் போது, இரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர வாய்ப்புகள் அதிகம்.
நார்ச்சத்து உணவுகள்!
நார்ச்சத்து உணவுகள் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. ஆனால், அதிகப்படியான அளவில் நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வது உடலில் மலமிளக்க கோளாறுகள், நீர் வறட்சி, தசைப்பிடிப்பு ஏற்பட காரணியாகிறது.