25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
poovarsampooedited 25 1508921925
மருத்துவ குறிப்பு

காரணம் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!! பூவரச இலைக் கொழுக்கட்டை ஏன் சாப்பிடனும்?

மண்ணில் உள்ள மரங்கள் எல்லாம், ஏதோ ஒரு வகையில் மனிதர்களுக்கு நன்மைகள் புரியவே நாம் வாழுமிடங்களில் வளர்கின்றன. ஆயினும் சுயநல மனிதர்கள், மரங்களின் வணிக பலன்களை மட்டும் அனுபவிக்க ஆசை கொண்டு, அவற்றை வெட்டி பொருள் ஈட்டியபின், மரங்களை வளர்க்காமல் விட்டுவிட்டார்கள். அப்படி ஒரு மரம்தான், பூவரசம் மரம்.

விளைவாக இனி வருங்காலம், பூவரசம் மரத்தை, அதன் அழகிய மலர்களை, அருங்காட்சியகத்தில் மட்டுமே, காணும் நிலையில் இன்று அழிவின் விளிம்பில் இருக்கிறது, பழந்தமிழ் இலக்கியங்கள் குடசம் என்று அழைக்கும் அழகிய வெளிர் மஞ்சள் நிறத்தில் அடர் சிவப்பு நிற சூல்களைக் கொண்ட மலரே, தற்காலத்தில் பூவரசம் பூ என்று அழைக்கப்படுகிறது. மரங்களின் அரசனாக இலக்கியங்கள் போற்றும் பூவரசன் மரம், இன்று இராஜ்ஜியம் இழந்து, தானும் அழியும் நிலையில் இருப்பதுதான், இயற்கை ஆர்வலர்களின் பெரும் வேதனையாக இருக்கிறது.

சித்தர்கள், நூறாண்டு கடந்த சில மரங்கள், மனிதர்க்கு உடல் பிணி போக்கும் மாமருந்தாக, காயகற்பமாக செயல்படும் என்பர், அந்த வரிசையில் ஒரு சிறந்த மரமாக, பூவரசம் மரம் திகழ்கிறது. மனிதரின் சரும, உடல் பாதிப்புகள் நீக்கி, நீண்ட காலம் நல்ல உடல் வளத்தோடு வாழ வழி செய்யும், இந்த பூவரசன்.

இந்து திருமண சடங்குகளில் அரசாணிக்கால் எனும் நிகழ்வில், பூவரச மரத்தின் போத்தையும், ஓதியன் மரப் போத்தையும் ஆண் பெண்ணாகக் கருதி, மஞ்சள், குங்குமம் இட்டு, அவற்றை திருமணம் முடிந்தபின் மணமக்கள் நட்டு வளர்க்க வேண்டும் என்று சம்பிரதாயமாக்கினார்கள் முன்னோர், அவை வளர, அவர்கள் வாழ்வும் வளமாகும் என்றதன் காரணம், மனிதருக்கு நலன்கள் பல புரியும் இத்தகைய மரங்களை, அவை அழியாமல் காத்து வரவே, முன்னோர்கள் அவ்வாறு சடங்குகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்கினர்.

பூவரச மரத்தின் இலைகள் மிக்க மருத்துவ பலன்கள் கொண்டவை, கிராமங்களில் அக்காலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் சுவைக்க விரும்பும் இனிப்பு கொழுக்கட்டை தயாரிப்பில், இந்த பூவரச இலைகளே, பெரும்பங்கு வகிக்கும் என்பதை நாம் அறிவோமா!

சிறுவர்களின் விடுமுறைக்கால கொண்டாட்டங்களில், ஒரு துணிச்சல்மிக்க சிறுவன் மரத்தில் ஏறி பூவரச இலைகளை பறித்து, கால் சட்டை பையில் வைத்துக்கொள்வான், அவனிடம் பிற சிறுவர்கள் எனக்கு ஒரு இலை கொடுடா என்று கெஞ்சி இலைகளைப் பெறுவர், அந்த இலைகளை சிறுவர்கள் நேர்த்தியாக சுருட்டி, அதனை இலேசாக வாய்ப்பகுதியில் கீறிவிட்டு, கலை நுணுக்கத்துடன் ஊதி, “பீ..பீ” என்று நாதஸ்வரத்துக்கு நிகரான ஒரு இசையை அளிப்பார்களே, அது அந்த காலம்!

பூவரச இலைகளை அதிக அளவில் வைத்துள்ள சிறுவன், சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு அதிபர் போல, அன்று மற்ற சிறுவர்கள் மத்தியில் ஒரு வி.ஐ.பி. அந்தஸ்தில் வளம் வருவான், அது போன்ற பசுமையான இளமைக்காலங்கள், இன்று நம் சிறுவர்களுக்கு இல்லை. சிறுவர்கள் கூடி இணைந்து விளையாடியதால், உடலும் மனமும் செழுமையானது. இன்று தனித்து இருந்து, தனித்து விளையாடி, இவற்றின் தொடர்ச்சியாக வீடுகளில் மட்டுமல்ல, சமூகத்திலும் தனித்தனி தீவுகளாக வாழ்கிறார்கள், இக்கால பெரும்பான்மை சிறுவர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? வீடு எவ்வழியோ, அவ்வழியே, மக்களும்!

பூவரச இலை கொழுக்கட்டை! வீடுகளில் விநாயகர் சதுர்த்தி நாளில், சிறுவர்கள் யாவரும், பூவரச மரத்தைச்சுற்றியே இருப்பர். காரணம், அன்று கொழுக்கட்டை செய்ய, பூவரச இலைகள் தேவை, நல்ல பெரிய இலைகளில் வேகவைக்கும் கொழுக்கட்டை, பெரிதாக இருக்கும் என்பதால், சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு, மரங்களில் ஏறி, பெரிய பூவரச இலைகளை பறிப்பர். ஒவ்வொருவனின் கையிலும், கால் சட்டை பையிலும் நூற்றுக்கணக்கான இலைகள் இருக்கும். சமயத்தில், மற்றவர்களுக்கும் கொடுக்கவே, இத்தனை இலைகள், சும்மா இல்லை, கொடுத்தால், கூடுதலாக ஒரு கொழுக்கட்டை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதே, அதற்குத்தான்.

எப்படி செய்வார்கள் இந்த பூவரசு கொழுக்கட்டையை? வழக்கமாக கொழுக்கட்டை செய்யும் முறைதான், அரிசி மாவை சுடுநீர் ஊற்றி கிளறி, அதில் ஏற்கெனவே செய்து வைத்திருக்கும் வேகவைத்த கடலைப் பருப்பு, வெல்லம் சேர்த்த பூரணம், எள், வெல்லம் கலந்த பூரணம் மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்த காரமான கலவை, இவற்றை, பூவரச இலையின் மேல் வைத்து தட்டையாக்கிய மாவில் வைத்து, இரண்டாக உள்ள இலையை, நடுவில் மடிக்க, பூரணம், மாவின் உள்ளே மூடப்பட்டு, ஓரங்கள் இடைவெளியின்றி கைகளால், மூடப்படும்.

பூவரச இலைகளில் உள்ள இந்த கொழுக்கட்டைகளை, கால் அளவு நீர் நிரம்பிய பாத்திரத்தில் அல்லது இட்லி பானைகளில் மூடி வைத்து எடுக்க, சுவையான இனிப்பு கொழுக்கட்டை ரெடி! இந்த தருணத்துக்காகவே காத்திருக்கும் சிறுவர்கள், சிறுமிகள் எல்லாம், அடுத்து பூஜையறை அல்லது சாமி படங்களின் முன் நிற்பர், படைத்த பின்தானே, குழந்தைகளுக்கு சாப்பிடக் கிடைக்கும், சீக்கிரம் படைத்தால் தானே, நாம் கொழுக்கட்டையை சுவைக்க முடியும் என்ற ஆவலில் பரபரப்பர். அந்த நேரம் வரும், வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளை நீண்ட நேரம் காக்க வைக்காமல், விரைவில் படையலை முடித்து, குழந்தைகளை, சாப்பிடலாம் என்று கைகளில் கொடுப்பதுதான் தாமதம், வேக வேகமாக ஆவலுடன் குழந்தைகள் எல்லாம், இளஞ்சூட்டில் உள்ள பூவரச இலைகளை மெதுவாகப் பிரித்து, அதனுள் இருக்கும் அந்த அற்புத சுவைமிக்க இனிப்பு பூரண கொழுக்கட்டைகளை, வெகு ஆர்வமாக சுவைக்கத் தொடங்குவர்.

பூவரசம் கொழுக்கட்டை ஏன் நல்லது? பூவரச இலைகளில் இருந்தாலும், கொழுக்கட்டைகள் நிறம் மாறாமல், நல்ல மணத்துடன் இருக்கும், பூவரச இலைகளில் உள்ள குளோரோஃபில், லியூப்னன், அல்கேன்ஸ் போன்ற தாதுக்கள், உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் இயல்புடையவ. மேலும் இதில் உள்ள மற்ற வேதித்தாதுக்கள் யாவும், தாய்மார்களுக்கு கருப்பை சார்ந்த பாதிப்புகளை, உடலில் இருந்து களையும் வல்லமை மிக்கவை, இந்த சத்துக்களே, பெண்களின் கருப்பை காக்கும் மேலை மருந்துகளில் உள்ளன.

பூவரசின் பலன்கள் மூட்டு வலி : பூவரச இலைகளை நன்கு அரைத்து, அதை ஒரு சட்டியில் இட்டு வாட்டி, பின் ஒரு பருத்தி துணியில் கட்டி, உடலில் அடிபட்ட இரத்தக் கட்டுக்கள், வீக்கங்கள், மூட்டுவலி போன்ற பாதிப்புகளுக்கு அவ்விடங்களில் ஒத்தடம் கொடுத்து வர, பாதிப்புகள் யாவும் நீங்கிவிடும்.

தேமல் : பூவரசங்காய் சாற்றை, தேமல் உள்ள இடத்தில் தடவி வர, உடலில், முகத்தில் உள்ள தேமல்கள் யாவும் மறையும்.

சேற்றுப் புண் : சேற்றுப்புண் நீங்க, பூவரசங்காயை மஞ்சள் சேர்த்து அரைத்து அவ்விடங்களில் தடவி வர, புண்கள் விரைவில் ஆறும்.

புழு வெட்டு, எனும் கொத்தாக முடி உதிர்தல் பாதிப்பு நீங்க.. பூவரசங்காய் சாற்றுடன் இந்துப்பு சேர்த்து அரைத்து, புழுவெட்டு எனும் முடி கொத்தாக உதிரும் பாதிப்புகள் உள்ள இடங்களில் தடவி வர, தலை, மீசை, தாடி போன்ற இடங்களில் உள்ள புழு வெட்டு பாதிப்புகள் நீங்கி, விரைவில் அவ்விடங்களில் முடி முளைக்கும். பூவரசங்காய் வைரஸ் கிருமிகளை கொல்லும் ஆற்றல் மிக்கது, உடலுக்கு சிறந்த வியாதி எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு, பாதிப்புகளை உடலில் இருந்து விரட்டும்.

வீட்டில் பூச்சிகள் அண்டாதிருக்க : அக்காலங்களில் எங்கும் கூரை வீடுகளே மிகுந்திருக்கும், வெகு சிலரே ஓடுகள் வேய்ந்து வீடுகள் கட்டியிருப்பர், சூரிய வெளிச்சத்துக்காக வீடுகள் முற்றம் எனும் மேல்புறம் மூடாத திறந்தவெளி கொண்டே காணப்படும், வீடுகளின் தரைகள் மண்ணைக் கொண்டே பூசி இருக்கும். எனவே, பூச்சிகள் வண்டுகள் வீடுகளில் நுழைவதைத் தடுக்கும் வகையில், வீடுகளின் வாசலில், திண்ணைகளில், முற்றங்களில், மாக்கோலம் இட்டு, பூவரசு இலையில் பசுஞ்சாணத்தை வைத்து, அதில் சிறந்த கிருமிநாசினியான மஞ்சள் நிற பூவரச மலரை, செருகி வைத்திருப்பர்.

புயல் வந்தாலும்.. தேக்கு போன்ற பலமான மரங்கள், புயல் காற்றில் சாய்ந்து விட்டால், மீண்டும் அவை வளராது, ஆயினும் பூவரச மரம், புயல் காற்றில் சாய்வதில்லை, அதிசயமாக சாய்ந்தாலும், நிமிர்த்தி வைத்தாலும், மீண்டும் செழித்து வளரும் தன்மையுள்ளது. எனவேதான், பூவரச மரத்தை மரங்களின் அரசன் என அழைத்தார்கள்

பிராண வாயு : பூவரச மரத்தை வளர்க்க அந்த மரத்தின் சிறு கிளை போதும், நட்டபின் தானே, வளரும் இயல்புடையது. வீடுகளைச் சுற்றி, பூவரச மரத்தை வளர்த்து வர, இம்மரங்களின் பிராண வாயு வெளிப்பாட்டின் அதிகரிப்பால், சுற்றுச்சூழல் மேம்படும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் நலமுடன் வாழ, சுவாசிக்க நல்ல காற்று கிடைக்கும்!

poovarsampooedited 25 1508921925

Related posts

அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள்!!

nathan

தெரிந்துகொள்வோமா? கர்ப்ப காலம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில வியக்கத்தக்க உண்மைகள்!

nathan

சுப்பர் டிப்ஸ்! நீரிழிவை விரட்டியடித்து உங்க ஆயுளை அதிகரிக்க இந்த ஒரே ஒரு பொருளை சாப்பிடுங்க போதும்…!

nathan

கொளுத்தும் கோடையில் வியர்குரு பிரச்சனையை வேரோடு விரட்ட சில எளிய வழிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள்

nathan

கணவரின் இந்த செயல்கள் மனைவியின் மனநிலையை பாதிக்கும்

nathan

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ளும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆலிவ் ஆயிலில் அத்திப்பழத்தை 40 நாட்கள் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்!

nathan

உடல் எடை அதிகரிப்பினால் ஆண்மை குறைவு ஏற்படுமா?கட்டாயம் இதை படியுங்கள்

nathan