ஆரோக்கியமான உடலைக் கொண்டவர்களின் தினசரி செயல்களுள் ஒன்றாக மலம் கழிப்பது இருக்கும். தினமும் மலம் கழித்தால் தான் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் சிலருக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பார்கள். அதற்காக இவர்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இல்லை என்று அர்த்தம் இல்லை. இருப்பினும் ஒருவர் வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக மலத்தைக் கழித்தால் தான், அவர்களது உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
சிலர் கழிவறைக்கு சென்றால் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இதற்கு ஒன்று அவர்கள் அங்கு தங்களது மொபைலை நோண்டிக் கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் மலம் கழிப்பதில் பிரச்சனையை சந்திக்கலாம். பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆரோக்கியமான உடலைக் கொண்ட ஒருவர் 10-15 நிமிடத்திற்கு மேல் கழிவறையில் இருக்கமாட்டார்கள் என்று கூறுகிறார்கள். நம் உடலில் கழிவுகள் அதிகம் தேங்கியிருந்தால், அதை அவசரமாக வெளியேற்ற வேண்டிய உணர்வு நமக்கு எழும். ஆனால் அப்படி ஒரு உணர்வு எழாமல் இருந்து, கழிவை சிரமப்பட்டு சிலர் வெளியேற்றுவார்கள். சிலருக்கு அன்றாடம் கழிவை வெளியேற்றாவிட்டால், அன்றைய தினமே சரியாக போகாது. ஆனால் இப்படி ஒருவர் சிரமப்பட்டு, மணிக்கணக்கில் கழிவறையில் அன்றாடம் அமர்ந்தால், அதனால் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
மூல நோய் ஒருவர் தினமும் மலம் கழிக்கும் போது, மிகவும் சிரமப்பட்டு மலத்தை வெளியேற்றினால், அதனால் மூல நோய் வருவதற்கான அபாயம் அதிகரிக்கும். மூல நோய் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். மூல நோய் என்பது மலப்புழை அல்லது மலக்குடலின் கீழ் பகுதியில் உள்ள நரம்புகள் வீங்குவதால் ஏற்படுவதாகும். புள்ளிவிவரங்களின் படி சுமார் 50% மக்கள் இந்த மூல நோயால் கஷ்டப்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த மூல நோயை பைல்ஸ் என்றும் அழைப்பர்.
மூல நோய் வகைகள் மூல நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை உள் மூலம் மற்றும் வெளி மூலம் ஆகும். உள் மூலம் என்பது மலக்குடலின் உட்பகுதியில் உள்ள வீக்கத்தைக் குறிக்கும். வெளி மூலம் என்பது மலப்புழையின் வெளிப்புற பகுதியில் சருமத்திற்கு அடியில் ஏற்படும் வீக்கத்தைக் குறிக்கும். ஒருவருக்கு மூல நோய் இருந்தால், அதனால் கடுமையான அரிப்பு, வலி மற்றும் சில சமயங்களில் உட்கார முடியாத நிலை கூட ஏற்படலாம்.
மூல நோய்க்கான அறிகுறிகள் மூல நோய் இருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை உணர்த்தும். அவையாவன: * மலப்புழையைச் சுற்றி வலி மற்றும் எரிச்சல் * மலப்புழையைச் சுற்றி அளவுக்கு அதிகமான அரிப்பு * மலப்புழைக்கு அருவே அரிப்பை உண்டாக்கும் வீக்கம் * மலக்கசிவு * குடலியக்கத்தின் போது வலி * மலம் வெளியேற்றும் போது கடுமையான இரத்தக்கசிவு
மூல நோயின் தீவிரம் மூல நோய் மிகவும் வலிமிக்கது. இது தானாக சரியாகாது. சரியான மருந்துகளின் உதவியுடன் தான் இப்பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். ஒருவருக்கு மூல நோய் இருந்தால், அவர்களுக்கு இரத்த சோகைக்கான அறிகுறிகளான வெளிரிய சருமம் மற்றும் அதிக இரத்த இழப்பால் உடல் பலவீனம் போன்ற நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் இது மூல நோயின் மிகவும் தீவிரமான நிலையில் போது தான் உண்டாக்கும் என்பதால் அச்சம் கொள்ள வேண்டாம்.
கோடைக்காலத்தில் தீவிரமாகும் குறிப்பாக மூல நோயானது கோடைக்காலத்தில் தீவிரமாக இருக்கும். ஏனெனில் உடல் வெப்பம் அதிகரிக்கும் போது, உடலில் நீர்ச்சத்து குறைந்து, அதன் விளைவாக மலம் இறுக்கமடைந்து, அதை எளிதாக வெளியேற்ற முடியாமல் போகும். இதனால் மிகவும் சிரமப்பட்டு மலத்தை வெளியேற்ற வேண்டியிருக்கும். எனவே இப்பிரச்சனையின் தீவிரத்தை தணிப்பதற்கு உடல் சூட்டைக் குறைக்கும் பானங்களை அதிகம் பருக வேண்டும். கோடையில் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முயல வேண்டும்.
மூல நோயை எது உண்டாக்குகிறது? ஒருவருக்கு மூல நோய் வருவதற்கான சரியான காரணம் இது தான் என்று நிபுணர்களால் சரியாக கூற முடியவில்லை. இருப்பினும் மூல நோய் வருவதற்கான காரணிகளைப் பட்டியலிட்டுள்ளனர். அவையாவன: * மணிக்கணக்கில் கழிவறையில் அமர்ந்திருப்பது * ஒவ்வொரு முறையும் குடலியக்கத்தின் போதும் சிரமத்தை சந்திப்பது * நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுவது * குடும்பத்தில் யாருக்கேனும் மூல நோய் இருப்பது
இதர காரணிகள் மூல நோய் மரபுவழியாகவும் வரலாம். உங்கள் பெற்றோருக்கு மூல நோய் இருந்தால், உங்களுக்கும் மூல நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. இப்போது இதர காரணிகளைக் காண்போம். அவையாவன: * கடுமையான எடையைத் தூக்குவது * உடல் பருமன் * உடலில் உள்ள அதிகப்படியான அழுத்தம் * நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது * அடிக்கடி மற்றும் தினமும் உடலுறவில் ஈடுபடுவது * வயிற்றுப்போக்கு * கர்ப்பம்
மூல நோயை எப்படி தடுக்கலாம்? மூல நோய் வராமல் இருக்க வேண்டுமானால், முதலில் 10-15 நிமிடத்திற்கும் மேலாக கழிவறையில் அமர்ந்திருக்க வேண்டாம் மற்றும் சிரமப்பட்டு கழிவை வெளியேற்றவும் வேண்டாம். உங்கள் குடும்படுத்தில் ஏற்கனவே யாருக்கேனும் மூல நோய் இருப்பின், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது , * தினமும் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் மலம் இறுக்கமடையாமல் இருக்கும். * தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். * நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கடினமான கான்க்ரீட் அல்லது டைல்ஸ் தரையில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். * அதிகளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் கைக்குத்தல் அரிசி, முழு கோதுமை, பேரிக்காய், ஓட்ஸ், கேரட் மற்றும் தவிடு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.