வெந்தயம்
தாவர இயல் பெயர்: Trigonella foenum-graecum [ Family: Fabaceae (Pea family)]
இதன் மறு பெயர்கள்: மேத்தி, மேத்திகா
பொதுவான தகவல்கள் :
வெந்தயத்தில் புரதம், கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயோலின் உட்பட இன்னும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது.
மேற்கண்ட சத்துக்கள் இருப்பதால் கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும்.
இதில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரையை ரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும்.
வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக வெந்தயம் தேவை. அதிலுள்ள டையோஸ்ஜெனின் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.
இதுதவிர வெந்தயம் சீதக் கழிச்சல், உடல் எரிச்சல், தாகம், இளைப்பு நோய் போன்ற இவை அனைத்தையும் நீங்கும். அது மட்டும் அல்ல, வெந்தயம் கல்லீரல் நோய்களை நீக்கும்.
வெந்தயக் கீரை: சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரிடப்படுகிறது.
இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரே வெந்தயச் செடியைப் பிடுங்கி விட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது.
சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.
வெந்தயக் கீரை ஜீரண சக்தியை செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும்.
இதனால் உடல் சுத்தமாகும். அத்துடன் வெந்தயக் கீரையை உண்டால் குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும் போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும்.
இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும்.
அத்துடன் இடுப்பு வலியும் நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது.
இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.
சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.
வெந்தயத்தின் இதர மருத்துவப் பயன்கள்:
* வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சொறி, சிரங்கு வராமல் தடுக்கிறது.
* வெந்தயக் கீரையை தேனுடன் உண்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
* வெந்தயக் கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து உண்டு வந்தால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.
* மூலை நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு இந்தக் கீரை சிறந்த மருந்து. அத்துடன் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
* வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீத பேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.
* வெந்தயத்தை ஊற வைத்து அது முளை கட்டவும், அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீட்ரூட் துருவல், தக்காளிப் பழத்துண்டுகள், உப்பு, மிளகுப்பொடி, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும். சுவையான சத்துள்ள குளிர்ச்சியான சாலட்டும் கூட.
* வெந்தயம், ஓரிதழ் தாமரை, விடத்தலை வேர், சுக்கு, வால் மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர உடல் அரிப்பு நீங்கும்.
* முகம் பளபளப்பாக இருக்க வெந்தயத்தை அரைத்து முகத்தில் பேஸ்பேக் போடலாம். பிறகு 10 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி சில நாட்கள் செய்து வர முகம் பளிச்சிடும்.
* தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்து வாருங்கள். வாய்க்கு கசப்பாக இருப்பதெல்லாம் உடலுக்கு நன்மையைத் தான் செய்யும். அந்த வகையில் இந்த வெந்தயம் கசக்கத் தான் செய்யும். எனினும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டுமின்றி கொழுப்புச் சத்தையும் கட்டுப்படுத்தும். இது தவிர வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
* ஒரு துண்டு இஞ்சியுடன் சிறிது வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
* வெந்தயத்தில் விட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்த உதவும்.
* வெந்தயத்தை சிறிது வறுத்து சுக்குடன் வைத்துப் பொடியாக்கி, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
* தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊற வைத்து எடுத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குடல் சம்மந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
* ஊற வைத்த வெந்தயத்தை குழந்தையை பெற்ற தாய்மார்கள் உண்டு வர. பால் நன்றாக சுரக்கும். குழந்தைக்கும் நல்லது. தாய்க்கும் உடல் சத்தை அதிகரிக்கும்.
* வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் முடி கொட்டாது, சீக்கிரத்தில் நரை வராது. அத்துடன் முடியும் நன்றாக வளரும்.
* முளைக் கட்டிய வெந்தயத்தை தயிரில் கலந்து அருமையான ஆரோக்கியமான தயிர் பச்சடி செய்யலாம். இதனால் உடலை வெப்பம் தாக்காது. வெயில் காலத்தில் வேர்குறு வராது. (வெந்தயத்தை முளை கட்டி ஓரிரு முறை களைந்தால் அதன் கசப்பு கணிசமாகக் குறைந்து விடும்)
* தீக்காயத்திற்கு வெந்தயத்தை ஊறவைத்து விழுதாக அரைத்து பற்றுப் போட்டால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
* அவுரி இலையுடன் சிறிது வெந்தயம் மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் பூரான் கடி விஷம் முறியும்.
* தினசரி 15 கிராம் வெந்தயத்தை தவறாமல் உண்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும், ரத்தம் சுத்தமாகும்,ரத்தத்தில் உள்ள கொழுப்பும் குறையும். ஜீரண சக்தி அதிகரித்து உடல் எடையும் குறையும். வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து சீயக்காய் போல தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* வாயுத் தொல்லை உள்ளவர்கள் தினமும் காலையில் பல் விளக்கியதும் ஒரு தேக்கரண்டி வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடியைச் சாப்பிட்டால் வாயு வெளியேறிவிடும்.
* வெந்தயத்தையும், நெல்லி இலையையும் சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் சீதபேதி நிவர்த்தியாகும்.
* பச்சை வெங்காயத்துடன், ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும். ஆண்,பெண் இருபாலருக்கும் காம இச்சையை ஏற்படுத்தும். தாம்பத்தியத்திற்கு மிக நல்லது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!