சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.
“பொதுவாக இவர்களின் மனநிலை, ‘சிசேரியன் பிரசவம்னா எந்த ரிஸ்க்கும் இல்லை’ என்பதாக இருக்கிறது. அது அறியாமைதான்’’ என்கிற மகப்பேறு மருத்துவர்..
எப்போது சிசேரியன் அவசியம்?
“பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 – 40 வாரங்களில் பிரசவமாகலாம். இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, விரைவாக குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் செய்வோம். பின்வரும் சூழல்கள் அதற்கு உதாரணங்கள்…
* முந்தைய பிரசவம் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில்…
* தாய்க்கு இதய நோய், நுரையீரல் பிரச்னை, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால்…
* கர்ப்பப்பை சுவரோடு நஞ்சு ஒட்டியிருப்பது, கர்ப்பப்பை வாயில் நஞ்சு இருக்கும்போது…
* பிரசவ நேரத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தால்…
* கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் பொசிஷன் மாறுபட்டு இருந்தால்…
* குழந்தையின் எடை நான்கு கிலோவுக்கு அதிகமாக இருந்தால்…
* கர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால்…
* தாய்க்கு HIV பாதிப்பு இருந்தால்…
* கர்ப்பப்பையில் ஏதாவது பெரிய கட்டி இருந்து அகற்றப்பட்டிருந்தால்…
* இரட்டைக் குழந்தைகள் எனில்…
* வலி வந்து கர்ப்ப வாய் திறக்காதபோது…
* கர்ப்பப்பையில் நீர்ச்சத்துக் குறையும்போது…
* 30 வயது தாண்டி முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்போது…
தாயின் வேண்டுகோளுக்கு இணங்க செய்யப்படும் சிசேரியன் (CDMR – Cesarean Delivery on Maternal Request)
ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில் குழந்தையை வெளியே எடுக்க விரும்புவது, பிறந்தநாள், திருமணநாள், பண்டிகை நாட்கள், ஃபேன்ஸி தினங்களில் குழந்தை பிறக்க விரும்புவது, ஆடி, சித்திரை மாதங்களில் குழந்தை பிறந்தால் ஆகாது என்ற மூடநம்பிக்கை, இவற்றுடன் பிரசவ வலிக்குப் பயந்து கர்ப்பிணியும் அவருடைய குடும்பத்தினரும் சிசேரியன் செய்ய மருத்துவர்களிடம் கோருவது… இந்தக் காரணங்களுக்காகக் கூட, சுகப்பிரசவத்துக்கான வாய்ப் பிருக்கும் சூழலிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
1970 – 2010 வரை 5% ஆக இருந்த சிசேரியன் பிரசவங்கள், 2010-க்குப் பிறகு 15% ஆக அதிகரித்தன. இப்போது அவை 30% ஆக அதிகரித்துவிட்டதாக உலக அளவிலான ஓர் ஆய்வு கூறுகிறது.
சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள்!
* சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
* தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி (placenta), தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.
* சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.
* சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது (Necrotising enterocolitis), தொற்றுநோய்கள் என பிறந்த முதல் மூன்று நாட்களில் பல பிரச்னைகள் ஏற்படலாம்.
* நிறைமாதமான 37 – 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இதற்காகவும் சிசேரியன் பிரசவங்கள் தவிர்ப்போம், சுகப்பிரசவத்துக்கு தயாராவோம்” என்கிறார் டாக்டர் நித்யா தேவி.
சிசேரியன் பிரசவம் தவிர்க்கலாம்!
* இடுப்பு எலும்புப் பகுதிக்கு பயிற்சி கொடுப்பது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். குழந்தையின் தலை மற்றும் உடல் வெளியேறும் வகையில் பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து கொடுக்க, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகளும் உறுப்புகளும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மருத்துவர் ஆலோசனையுடன் யோகா, கால்களை மடக்கி நீட்டுவது போன்ற எளிய உடற்பயிற்சிகள் இதற்கு கைகொடுக்கும்.
* கர்ப்பகாலத்தில் உறங்குவது, அமர்வது என ஒரே நிலையில் நிலைகொள்ளும் ஓய்வு தேவையில்லை. அன்றாட வேலைகளை, குனிந்து, நிமிர்ந்து செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யலாம்.
* துரித உணவு மற்றும் அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொண்டு மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.