காலையில் எழுந்தது முதல் கணவர் முகத்தில் ஒரே பரபரப்பு. இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் . நேற்று இரவு வெகு நேரம் கண்விழித்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். எதோ ஒரு செமினார் மற்றும் மீட்டிங்கிற்கான ஒரு டாக்குமெண்டஷன் தயார் செய்து வைத்திருந்தார். குழந்தையை பள்ளியில் சென்று விடுவதற்கு கூட நேரமில்லை. சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு பறந்து விட்டார்.
அலுவலகம் அமைதியாக இருந்து. ஆனால் மூளை அமையற்று இருந்தது. தான் செய்த டாக்குமெண்டேஷனை மறுபடியும் சோதித்து பார்த்து விட்டு லேப்டாப்பை மூடும்போது, இனம் புரியாத ஒரு வலி உடலெங்கும் பரவியதை அவரால் உணர முடிந்தது. ஏ சி அறையிலும் வியர்க்க தொடங்கியது.
இது போன்ற ஒரு சூழ்நிலையை பலரும் கேள்வி பட்டிருப்போம். அல்லது கடந்து வந்திருப்போம். இது ஒரு சாதாரண விஷயம் தான். இந்த சூழ்நிலையை தான் மருத்துவ மொழியில் பய தாக்குதல் (Panic Attack ) என்று கூறுகின்றனர். எந்த நேரத்திலும் இவை வெளிப்படலாம் ; எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமல் ஏற்படலாம்; எந்த இடத்திலும் ஏற்படலாம்.
பயங்கள் ஏதாவது முக்கியமான மீட்டிங்க் அல்லது முதன் முறையாக தரும் ப்ரசன்டேஷன் அல்லது ஏதாவது இன்டர்வ்யூ இது போன்ற காரணங்களுக்கு வருவது சகஜம்தான். ஆனால் அடிக்கடி இது ஏற்பட்டால் அல்லது தொட்டதெற்கெல்லாம் ஏற்பட்டால் அதனை ஆரம்பத்திலேயே கவனித்து குறைகளை நீக்குவது மிக அவசியம்.
இந்த மாதிரியான பயங்களால் பல நலல் வாய்ப்புகளை கை நழுவி விட்டவர்கள் ஏராளம். இதனால் இதனை முளையிலேயே கிள்ளிவிடுதல் அவசியம்.
இதில் இருந்து எப்படி மீண்டு அந்த நாளின் அடுத்த வேலைகளை தொடர்வது ? இதனை பற்றியது தான் இந்த பதிவு.
உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்:
உங்கள் பணியிடத்திலேயே சற்று அமைதியாக உட்காருங்கள். உங்கள் உடலை அமைதி படுத்துங்கள். தலை மற்றும் தோள்பட்டைகளை தளர்த்தி உங்கள் கையை வயிறு அல்லது மார்பில் வைத்துக் கொள்ளுங்கள். மூக்கு வழியாக ஆழ்ந்து மூச்சை எடுத்து வாய் வழியாக வெளியிடுங்கள். மூச்சு காற்றை வெளியிடும்போது வயிற்று பகுதி தசைகள் இருக்கமாவதை உங்களால் உணர முடியம் . இதனை செய்வதன் மூலம் உங்கள் உடல் நிதானமாகிறது. பயத்தில் இருந்து விடுதலை பெற்று ஒரு வித அமைதி கிடைக்கிறது.
தனிமை:
உங்கள் இருக்கையில் உட்காரும் போது அமைதியாக உணரமுடியவில்லையா? எழுந்து பாத்ரூம் அல்லது வேறு ஒரு தனிமையான இடத்திற்கு செல்லுங்கள். குளிர்ந்த தண்ணீரை முகத்தில் தெளித்து நன்றாக கழுவுங்கள். சில நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். அல்லது “நான் நன்றாக இருக்கிறேன்” என்று உங்களுக்குள் அல்லது சத்தமாக கூறி கொண்டே இருங்கள்.
நடை பயிற்சி:
அலை மோதும் எண்ணங்களுக்கு இடையில் ஒரு சிறிய நடை பயிற்சி நல்ல தீர்வை கொடுக்கும். எண்ணங்களை அமைதி படுத்தும். உங்கள் உடல் மற்றும் மனதை கட்டுப்படுத்தும் எதாவது ஒரு பயிற்சியை செய்ய முயற்சியுங்கள். நடப்பது, எதாவது ஒரு இதமான பாடல் கேட்பது போன்றவற்றை முயற்சிக்கலாம்.
நண்பரை அணுகுங்கள்:
உங்கள் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர் அல்லது மேலாளர் அல்லது உங்களுக்கு நெருக்கமானவரிடம் உங்கள் பிரசச்னையை பற்றி மனம் விட்டு பேசுங்கள். நீங்கள் உணர்வதை அவர்களுக்கு வெளிப்படுத்துங்கள். அவர்களால் உங்கள் சூழ்நிலையை உணர்ந்து வழி காட்ட முடியும். அல்லது உங்கள் துணைவருக்கு போன் செய்து சிறிது நேரம் பேசுங்கள்.
இப்படி எதுவுமே செய்ய முடியவில்லையா? உங்கள் போனை எடுத்து அதில் இருக்கும் போட்டோக்களை சற்று நேரம் பாருங்கள். அவை உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை ஞாபகப்படுத்தும். மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.
முடிந்தால் வேலையை தொடருங்கள் :
முடிந்த அளவு அலுவலகத்தில் இருக்க முயற்சியுங்கள். முடியாத பட்சத்தில் விடுப்பு கேட்டு வீட்டிற்கு செல்லுங்கள் . இதனை அடிக்கடி பயன்படுத்துவது, உங்களை நீங்களே குறைவாக மதிப்பிடுவதற்கு சமம். ஆகையால் முடிந்த அளவு உங்கள் பயத்தில் இருந்து வெளிவந்து அன்றைய பணியை முழுதாக முடிக்க பழகுங்கள். இல்லையேல் உங்கள் மனம் மற்றும் மூளை ஒரு பாதுகாப்பான எல்லைக்குள் மட்டும் ஈடுபட முயற்சிக்கும். இத்தகைய சவாலான சூழ்நிலையை கடந்து வரும் ஆற்றலை வளர்த்து கொள்வது என்றுமே நல்லது.
மன நல ஆரோக்கிய அமைப்பு:
உங்கள் அனுபவத்தை பற்றி அலுவலக மனிதவளதுறை நிர்வாகிகளிடம் பேசுங்கள். நிர்வாகமும் தொழிலாளர்களின் மன நலத்தின் மேல் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆகவே அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எல்லா தொழிலாளர்களும் தங்கள் அனுபவத்தை கூற தயங்கலாம். ஆகவே நிர்வாகம் அதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கி அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இதனால் தொழிலாளர்களும் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவர் .
உங்களை நம்புங்கள்:
இது போன்ற ஒரு மன தாக்குதல் ஏற்படும்போது தன்னம்பிக்கையை இழக்க கூடாது. இது உங்களால் வேண்டுமென்றே உண்டானது அல்ல என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும். இது மனதில் ஏற்படும் ஒரு வித பயம் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தன்னுடைய உணர்ச்சிகளை குறித்தும் , பயத்தின் வெளிப்பாடுகள் குறித்தும் தயங்காமல் ஏற்றுக் கொண்டு அதில் இருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும்.