28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ld461124 1
மருத்துவ குறிப்பு

ஷாப்பிங் மேனியா : அடிக்கடி ஷாப்பிங் செய்வதும் உளவியல் சிக்கல்தான்!

நண்பரின் மகளுக்கு வயது இருபத்தாறு. நண்பரும் அவருடைய மனைவியும் அரசு ஊழியர்கள். கை நிறைய வருமானம். இருப்பதோ ஒரே மகள் என்பதால் ஏகத்துக்கும் செல்லம். சிறு வயது முதலே கேட்டதை எல்லாம் வாங்கித் தருவார்கள். பள்ளி செல்லும் நாட்களிலிருந்தே கணிசமாக பாக்கெட் மணியும் தருவார்கள்.கணவன் – மனைவி இருவருமே வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்ததால் குழந்தையை கவனிக்க நேரமே இல்லை. குழந்தையுடன் நேரம் செலவிட முடியவில்லையே என்ற குற்றவுணர்வில் எங்காவது வெளியில் செல்லும் போது, அடம்பிடிக்க வாய்ப்பே கொடுக்காமல் கேட்பதற்கு முன்பாகவே தேவையற்றவையை எல்லாம்கூட வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அந்தப் பெண் வளர வளர கையில் இருக்கும் காசுக்கு சாக்லெட்ஸ், பொம்மைகள், ஆடைகள் என வாங்கிக்குவிக்கத் தொடங்கினார்.

கல்லூரியில் படிக்கும் நாட்களில் விடுமுறையில் தோழிகளுடன் ஷாப்பிங் மாலுக்குச் செல்வார். கையில் கிடைத்ததை எல்லாம் வாங்குவார். தேவை இருக்கிறதோ இல்லையோ பொருட்களை வாங்கிக்கொண்டே இருப்பார். ஒரு செல்போனை வாங்கி ஆறே மாதங்களில் மீண்டும் புது போன் வாங்குவார்.மகளின் இப்படி வாங்கிக் குவிக்கும் வழக்கம் ஒருகட்டத்தில் பெற்றவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய வளர்ப்பில் ஏதோ தவறு நடந்துவிட்டதோ என்று கலங்கிப் போய் நின்றார்கள். ஆனால், யார் சொல்வதையும் கேட்கும் மனநிலையில் அந்தப் பெண் இல்லை. ‘இப்போ நாம் என்ன தவறு செய்துவிட்டோம்?’ என்பதுதான் அவரின் எண்ணமாக இருந்தது. கல்லூரி முடிந்து வேலைக்குச் சேர்ந்தார்.

‘சரி! சுயமாக சம்பாதித்தால் பணத்தின் அருமை தெரியும். செலவழிக்க மாட்டார்’ என எண்ணினர் பெற்றோர். ஆனால், நடந்ததே வேறு. அலுவலக கம்ப்யூட்டரின் ஷாப்பிங் சைட்டுகளுக்குச் சென்று ஆன்லைன் பர்சேஸ் செய்ய தொடங்கினார். ‘போன மாதம்தானே துணி எடுத்தாய். இந்த மாதமும் ஏன் எடுக்கிறாய்?’ என்று கேட்டால் ஒரே சண்டைதான். இப்போது மகளுக்கு வரன் தேடிவருகிறார்கள். போகும் இடத்திலாவது பெண் பொறுப்பாக நடக்க வேண்டுமே என்ற கவலை நண்பருக்கு.
அந்த பெண் ஏன் இப்படி பொருட்களாக வாங்கிக்கு விக்கிறார்?

இவர் மட்டும் இல்லை. இன்று நகரத்தில் வாழும் பல மத்திய தர வர்க்கத்தினர் கூட இப்படித்தான் இருக்கிறார்கள். என்னதான் பிரச்னை இது? மருத்துவ உலகம் இதை, ஒனியோமேனியா (Oniomania) என்கிறது. அதாவது, கம்பல்ஸிவ் பையிங் டிஸ்ஆர்டர் (சிபிடி) (Compulsive buying disorder-CBD) எனப்படும் உளச்சிக்கல்.நம்மில் பலருக்கும் ஷாப்பிங் செய்ய பிடிக்கும். சூப்பர் மார்க்கெட்டுக்கு பல சரக்கு வாங்குவதற்கு போய் சென்ட் பாட்டிலையும் சேர்த்து வாங்கிக்கொண்டு வருபவர்கள்தான் அனைவருமே. தேவையோ, இல்லையோ கையில் காசு இருந்து, பொருள் பிடித்துவிட்டால் வாங்காமல் இருக்க முடியாது என்பது மனித இயல்பு. ஆனால், எதற்கும் ஓர் அளவு உண்டு. அளவுக்கு அதிகமாக இப்படிப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனநிலை தீவிரம் அடைந்தால் அதுதான் ஒனியோமேனியா.

சிறு வயதில் கேட்டது எல்லாம் கிடைக்கும் வாய்ப்பு உள்ள குழந்தைகள் என்றால் பின்னாளில் இந்த ஷாப்பிங் மேனியாவுக்கு ஆட்பட வாய்ப்புகள் அதிகம். பிள்ளைகள் டீனேஜின் மத்திய வயதுகளில் (14-16) தங்கள் கையில் பணம் வரத் தொடங்கியதும் இதுபோன்று பொருட்களை வாங்கத் தொடங்குவர். படிப்பு முடித்து சம்பாதிக்கத் தொடங்கியபின் டெபிட் கார்டில் பணம் வந்தவுடன் ஆடம்பர செலவுகள் தொடங்கிவிடும்.

சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழ்பவர்கள், ஒதுக்கப்படுபவர்கள் தங்களது தனிமையைப் போக்க ஏதாவது வழி தேடுவது இயல்பு. புகை, மதுப்பழக்கம், போதைப் பழக்கம் ஆகியவற்றின் மூலம் தனிமையைப் போக்க நினைப்பார்கள் சிலர். தீய பழக்கங்கள் என சமூகம் கருதும் விஷயங்களுக்கு அஞ்சுபவர்கள், இது போன்ற சமூகத்தால் குற்றம்சாட்டப்படாத தவறான பழக்கங்களில் இறங்குகிறார்கள்.

வயதானவர்கள் மகன், மருமகள், பேரன் ஆகியோர் வேலைக்குச் சென்ற பிறகு தனிமையால் அவதிப்படுவார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் பற்றி யாராவது கற்றுக்கொடுத்தால், தொடர்ந்து ஷாப்பிங் செய்வதன் மூலம் தனிமையை விரட்ட நினைத்து அவர்களும் சி.பி.டி நோயாளிகளாக மாற வாய்ப்பு உள்ளது.

கையில் காசிருக்கும் வரை வாங்கிக் குவிப்பது. காசு தீர்ந்தால் கிரெடிட் கார்டில் வாங்குவது. லோன் போட்டு வாங்குவது என்று இறங்குவார்கள். இதனால், மாதத் தவணைகள் அதிகரித்து கடன் கட்ட இயலாமல் மூச்சுத் திணறுவார்கள். மேலைநாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை வரை சென்றுள்ளனர். நல்லவேளையாக இதுவரை இந்தியாவில் சிபிடியால் தற்கொலைகள் என்று நாம் கேள்விப்படுவதில்லை.

மன அழுத்தம், போதிய உடற்பயிற்சி இல்லாமை, தனிமை, விரக்தி, நேரத்துக்குத் தூங்காமல் இருப்பது, சுய இரக்கம் அதிகமாக இருப்பது, குற்றஉணர்வு, பால்ய கால கெட்ட நினைவுகள் எனப் பல காரணங்களால் ஒருவருக்கு ஷாப்பிங் மேனியா பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.சிலர், அலுவலக வேலையினால் மனஅழுத்தம் அதிகமாகி, அதனைப் போக்க பொருட்களை வாங்கி தற்காலிக சந்தோஷம் அடைவார்கள். அதாவது, வேலைப்பளுவால் ஏற்படும் மனஅழுத்தத்தை சமாளிக்க, சம்பளக் காசில் பொருள் வாங்கி சமாதானம் அடைய முயல்வார்கள்.

எப்படித் தப்பிக்கலாம்?

விடுமுறை நாட்களில் விண்டோ ஷாப்பிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு அவசியம் என்றால் தவிர ஷாப்பிங் செல்வது என்பதையே தவிர்த்திடுங்கள். விடுமுறைகளில் பீச், பூங்கா, நூலகம் போன்ற இடங்களுக்குச் செல்வது, கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, பேட்மிண்டன் போன்ற ஏதேனும் அவுட்டோர் விளையாட்டில் ஈடுபடுவது உடலுக்கும் பர்ஸுக்கும் நல்லது.
இணையதளங்களில் உலவும் போது தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். குறிப்பாக, ஷாப்பிங் சைட்டுகளில் புழங்குவதை முற்றிலுமாகத் தவிர்த்திடுங்கள்.

ஷாப்பிங் மேனியா பிரச்னை உங்களுக்கு உள்ளது என சந்தேகம் ஏற்பட்டால், முதலில் உங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்யுங்கள். பிறகு, உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பை மிக குறைந்த அளவில் வைத்துக்கொள்ளுங்கள். பர்ஸிலும் தேவைக்கு அதிகமாகப் பணம் வைத்துக் கொள்ள வேண்டாம்.

தேவையற்ற செலவுகளில் உங்களை இழுத்துவிடுபவர்களின் நட்பில் இருந்து விடுபடுங்கள். அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதை நிறுத்தினாலே பாதி செலவு குறைந்துவிடும்.இவ்வாறு அதீத செலவு செய்பவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால், இந்தப் பிரச்னையின் பின்விளைவுகளைப் பொறுமையாகச் சொல்லி புரியவைக்க முயற்சி செய்யுங்கள். அவசியம் எனில் ஒரு மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் செல்ல தயங்க வேண்டாம்.

யோகா, பிராணாயாமம், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, பாட்டு, நடனம் போன்ற மனதுக்குப் பிடித்த விஷயங்களை அவ்வப்போது செய்தல், மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக்கொள்ளுதல், அனைவரிடமும் கலகலப்பாகப் பழகுதல், மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் தனிமை உணர்வையும், ஷாப்பிங் மேனியாவையும் வெல்ல முடியும்.ld461124

Related posts

உங்களுக்கு தெரியுமா பட்டை தண்ணீரை குடிப்பதால் உடலினுள் என்னென்ன அற்புதங்கள் நிகழும்?

nathan

மார்பகம், கருப்பை புற்றுநோய் குறித்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்

nathan

சர்க்கரை நோய் என்ன அத்தனை கொடியதா?

nathan

ஆஸ்துமாவை முற்றிலும் குணமாக்க.. இந்த உணவுகளை எப்பொழுதும் சேர்த்து வாருங்கள்…!

nathan

குப்பை மேனி தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க..!!சூப்பர் டிப்ஸ்…

nathan

தாயாக சிறந்த பருவம்

nathan

இந்த அறிகுறிகளை சாதாரணமா எடுத்துக்கிட்டா உயிரே போயிடும்…

nathan

குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

ஆரோக்கியத்தை பாதிக்கும் ஊறுகாய்

nathan