பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம். பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.
பொதுவாக எல்லா வகை புற்றுநோய்களிலுமே, வயது அதிகமாக அதிகமாகத்தான் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். அந்த வகையில் மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.
பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்றுக்கு இலக்காகலாம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
அதிவிரைவில் பூப்படைவது, புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், மரபியல் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாக 10 முதல் 15 சதவிகித மார்பகப் புற்றுநோய் மரபியல் காரணமாக வருகிறது.
மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.
மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.
மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.
சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.