பூக்களை அழகுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
சாமந்திப்பூ :
சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு சூடாக்கி அதில் சாமந்திப் பூக்களைப் போட்டு, அடுப்பை அணைத்து, அப்படியே மூடி வைத்து விடவும். ஒரு இரவு முழுக்க அப்படியே வைத்திடுங்கள். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும். இந்தத் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
டீ டிகாஷன் :
சாமந்திப்பூ கலந்த டீ டிகாக்ஷனை குளிர வைத்து, அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு அடியில் உள்ள கருமை நீங்கும். கண்களின் வீக்கம் குறையும். இந்த டிகாக்ஷனை நீர்க்கச் செய்து, பஞ்சில் தொட்டு முகம் முழுக்கத் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் வெயிலினால் கருத்துப் போன சருமம் நிறம் மாறும்.
ரோஜாப்பூ :
பன்னீர் ரோஜாவின் இதழ்களுடன், வேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.
உதடுகளுக்கு :
ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் இயற்கையான நிறம் பெறுவதுடன், பளபளப்பாகவும் மாறும்.
மல்லிகைப்பூ
ஒரு கப் மல்லிகைப்பூவுடன் 4 லவங்கம் சேர்த்து அரைக்கவும். அதில் சுத்தமான சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டுக் முகம், நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை, சின்னச் சின்ன கட்டிகள் சரியாகி, சருமம் ஒரே சீரான நிறத்துக்குத் திரும்பும்.
மகிழம்பூ
கைப்பிடி அளவு மகிழம் பூவை ஊற வைத்து அரைக்கவும். இது வெயிலினால் உண்டாகும் சருமப் பிரச்னைகளைத் தவிர்க்கும். ஏற்கனவே வெயிலில் அலைந்ததால் உண்டான வேர்க்குரு, வேனல் கட்டிகள் போன்றவற்றையும் விரட்டும். தினமும் இதை உபயோகித்துக் குளிப்பதால் வியர்வை நாற்றமே இருக்காது.
மரிக்கொழுந்து
மரிக்கொழுந்து பூவின் சாறு 2 டீஸ்பூன், சந்தனத் தூள் 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வியர்வை கட்டுப்படும். சரும நிறம் கூடும்.
ஆவாரம் பூ
100 கிராம் ஆவாரம் பூவுடன், 50 கிராம் வெள்ளரி விதை சேர்த்து பால் விட்டு விழுதாக அரைத்து முகம், கழுத்து, கை, கால்களுக்கு பேக் மாதிரி போடலாம். இயற்கையான சன் ஸ்கிரீன் மாதிரிச் செயல்படும் இது.
செம்பருத்தி
ஒற்றைச் செம்பருத்திப் பூவுடன், 2 பாதாம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்து வெயில் படும் சருமப் பகுதிகளில் எல்லாம் தடவவும். அரை மணி நேரம் ஊறியதும், கழுவிவிடலாம். இப்படிச் செய்வதனால் கோடையினால் உண்டாகிற சரும வறட்சி நீங்கி, தோல் மென்மையாக மாறும்.
தாமரைப்பூ
தாமரை இதழ்களை சிறிது பால் விட்டு அரைத்து, தடவவும். சிறிது நேரம் கழித்து காய்ந்ததும் கழுவிடலாம். இது சருமத்துக்கு ஒருவித மென்மையைக் கொடுக்கும். வெயில் காலத்தில் வாரம் 2 முறையாவது இதைச் செய்து வந்தால், சருமத்தை ஒரே சீரான நிறத்துடனும், மென்மையுடனும் பராமரிக்கலாம்.
குங்குமப்பூ
ஒரு சிட்டிகை குங்குமப் பூவுடன் சிறிது அதிமதுரம் கலந்து, முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதைக் கை விரல்களால் நசுக்கி, அதன் சாரத்தை முகம், கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற விடவும். பிறகு மென்மையாக மசாஜ் செய்து விட்டுக் கழுவினால், சருமம் சிவப்பழகு பெறும். வெயிலில் அலைவதால் கருத்துப் போவதையும் தவிர்க்கும்.