சரும பராமரிப்பு

ஸ்ட்ராபெர்ரி ‘ஸ்கின்’ணே….

சருமத்துக்கு இளமையைக் கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் பொலிவைத் தக்கவைத்துக்கொள்ளலாம். அதிலும் பழ வகைகளில் அதிக அளவு முகத்தைப் பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி. தன் சுவையால் நாக்கைச் சுண்டி இழுப்பதுபோல், அழகையும் இது அள்ளித்தருவது உண்மை என்கிறது அழகியல் ஆராய்ச்சி. ஸ்ட்ராபெர்ரியைப் பயன்படுத்தி, முகத்தைப் பளிச்செனக் காட்டும் டிப்ஸ்களைச் சொல்கிறார் இயற்கை அழகுக் கலை நிபுணர் ஹேமா லட்சுமண்.

சிவந்த நிறத்தில் ஜொலிக்க…

நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு மஸ்லின் துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும். இந்தச் சாறை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
p12
பருக்கள் நீங்க…

ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் கெட்டியான புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும். இந்தக் கூழை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும். இதில் உள்ள சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். சருமத்தில் உள்ள பெரிய துளைகளைச் சிறியதாக்கி, தொங்கிய சருமத்தை இறுக்கும்.

ச‌ருமத்தைப் பொலிவாக்க‌…

ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து, நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். இந்த ஜூஸை இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதனுடன் 100 மில்லி குளிர்ந்த பன்னீர் கலந்து முகத்தைக் கழுவவும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, ஒரு மெல்லிய துணியை உருண்டையாகச் சுற்றி, அதை ஜூஸில் தோய்த்து முகம் எங்கும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யவும். நன்றாக உலர்ந்ததும், கழுவவும். தினமும் இரவில் இதுபோல் செய்துவர, சருமம் பிரகாசமாக மிளிரும். இதைச் செய்யும்போது, க்ரீம் எதுவும் போட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஜூஸை ஃப்ரிட்ஜில் 15 நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இளமையைக் கூட்ட…

ஆறு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து நன்றாக மசிக்கவும். இதனுடன் மிதமான சுடுதண்ணீரை விட்டுக் கலந்து முகத்தில் பூசி, விரலால் வட்டமாக மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இப்படிச் செய்து வந்தால், என்றும் சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

சோர்வை நீக்கிப் பளிச்சென மாற்ற…

மூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் ‘மாஸ்க்’ போல போடவும். நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்செனவைத்திருக்கும்.

அழுக்கை நீக்கிச் சுத்தமாக்க…

ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி ஜூஸுடன் அதே அளவு கேரட் ஜூஸ் கலந்து முகத்தில் நன்றாகப் பூசி, துணியால் துடைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். சரும அழுக்கை நீக்கி, முக‌த்தில் துளியும் அழுக்கு சேராமல் பாதுகாக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய அருமையான ‘க்ளென்சிங்’ முறை இது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button