23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
f4ab
மருத்துவ குறிப்பு

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மூன்று முடிச்சு போடுவது ஏன்?என்று தெரியுமா?

இந்துக்களின் திருமணம் பல சடங்குகளைக் கொண்டது. ஒவ்வொரு சடங்குக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. இந்து மதத்தில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு வாழ்க்கைமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
பிரம்மச்சாரிகளுக்கும், வானபிரஸ்தர்களுக்கும், சந்நியாசிகளுக்கும்கூட அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைத் தரும் கிருஹஸ்தம் என்னும் இல்லறத்தில் ஈடுபட்டவர்களே மிகவும் சிறப்புக்கு உரியவர்கள் என்றும், இல்லற தர்மத்தில் இருப்பவர்களே இந்த சமூகத்தின் முதுகெலும்பைப் போன்றவர்கள் என்றும் கௌதம மகரிஷி கூறி இருக்கிறார்.

மூன்று முடிச்சு ;
சிறப்பான இல்லற வாழ்க்கையின் தொடக்கம் ஓர் ஆணும் பெண்ணும் இணையும் திருமணம் என்ற பந்தத்தில்தான் தொடங்குகிறது.
இந்தத் திருமண வாழ்க்கை பயனுற அமையவேண்டுமானால், திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் கணவன் – மனைவி இருவர் மனதிலும் அன்பும் அறமும் பொருந்தி இருக்கவேண்டும்.
சிறப்பு மிக்க கணவன் – மனைவி என்னும் பந்தத்தை ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படுத்தும் திருமணத்தில் உள்ள சடங்குகளையும் அவற்றின் அர்த்தத்தையும் பார்ப்போம்.

பெண் பார்க்கும் படலம்:
திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது, பிள்ளையின் மனம் முதலில் பெண்ணிடம் லயிக்கவேண்டும். விருப்பம் ஏற்படவேண்டும். இதுதான் முதல் படி. இந்த நிலையில் பிள்ளைக்கு பெண்ணையோ, பெண்ணுக்கு பிள்ளையையோ பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது. பிள்ளை வீட்டார்தான் முதலில் பெண் வீட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்து பெண் கேட்கவேண்டும். அனைத்து பொருத்தங்களும் முடிந்த பிறகு முகூர்த்தத்துக்கு நாள் குறிக்கப்படும்.

நிச்சயதார்த்தம்:
இல்லற வாழ்க்கையின் தொடக்கத்துக்கு ஒரு முன்னுரை போல் அமைந்திருப்பது நிச்சயதார்த்தம் என்னும் சடங்கு. நிச்சயதார்த்தத்தின்போது சில மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. அந்த மந்திரங்கள் அவர்களுடைய மணவாழ்க்கையை வளம் பெறச் செய்ய தேவர்களை அழைக்கும் மந்திரங்கள் ஆகும்.
‘வருண பகவானே! எனக்கு மனைவியாக வரப்போகிறவள் என் உடன் பிறந்தவர்களுக்கு கெடுதல் நினைக்காதவளாக இருக்கட்டும்’
அடுத்ததாக இந்திரனைப் பார்த்து, ‘இந்திர தேவனே! எனக்கு மனைவியாக வர இருப்பவள் தன்னுடைய பிள்ளைகளைப் போற்றி வளர்ப்பவளாக இருக்கட்டும்’
தொடர்ந்து சூரியபகவானைப் பார்த்து, “இவள் அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்றவளாகத் திகழட்டும்’

பிறகு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்து, “பெண்ணே! நீ அழகிய கனிவு நிரம்பிய கண்களை உடையவளாகவும், கணவனாகிய எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மை அளிப்பவளாகவும், நல்ல மனம் உள்ளவளாகவும், தேஜஸ் நிரம்பப் பெற்றவளாகவும் திகழ்வாயாக. தீர்க்காயுள் உள்ள பிள்ளைகளைப் பெறுபவளாகவும், தெய்வ பக்தி நிரம்பப் பெற்றவளாகவும், அனைவருக்கும் நன்மையை செய்பவளாகவும் இருப்பாயாக” என்ற பொருளுடைய மந்திரத்தைச் சொல்கிறான்.
இந்த மந்திரங்களைப் போலவே மற்ற அனைத்து திருமண மந்திரங்களும் அர்த்தம் உள்ளதாகத் திகழ்கின்றன.

திருமணம்
காசி யாத்திரை:
வாழ்க்கையில் பிற்காலத்தில் எப்போதாவது விரக்தி ஏற்பட்டு வீட்டை விட்டு சென்றுவிடலாம் என்ற எண்ணம் ஏற்படும்போது, அந்த எண்ணத்தை மாற்றுவதற்கான தூண்டுகோலாக அமைந்திருப்பதுதான் காசி யாத்திரை விஷயம். எதற்கெடுத்தாலும் நான் சந்நியாசியாகப் போய்விடுவேன் என்று சொல்லும் சஞ்சல மனம் ஆண்களுக்கே இயல்பானது. அப்படி மனம் சஞ்சலம் அடையாமல் இருப்பதற்காகத்தான், “வேண்டாம் இந்த துறவற மனோபாவம். இல்லறமே நல்லறம். அந்த நல்லறத்தில் நீ ஈடுபடுவதற்காக, நான் இதுவரை செல்லமாக வளர்த்த என் பெண்ணையே உனக்குத் தருகிறேன்” என்று சொல்லும் நிகழ்ச்சிதான் காசி யாத்திரை. பிற்காலத்தில் கணவனுக்கு எப்போதேனும் மனச் சஞ்சலம் ஏற்படும்போது, இந்த காசி யாத்திரை வைபவத்தை நினைத்துப் பார்த்து மனம் மாறவேண்டும் என்பதற்காகவே காசியாத்திரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கூறைப் புடைவை:
காசி யாத்திரை நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்ணுக்கு மணமகன் வீட்டு சார்பில் கூறைப் புடைவை கொடுக்கப்படும். கொடுக்கும்போது ஒரு மந்திரத்தை மணமகன் சொல்லவேண்டும். அந்த மந்திரத்தின் பொருள், “என்னுடைய வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவளே! இந்தப் புடைவை உன் மேனியைச் சுற்றி உன்னைப் பாதுகாப்பாகவும், உன் அழகைப் பராமரிக்கவும் பயன்படுவதைப் போலவே, தர்ம தேவதைகள் உன்னைச் சூழ்ந்திருந்து, உன் பண்பு, அழகு ஆகியவற்றையும் பாதுகாக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்பதாகும்.

பெண்ணின் இடுப்பில் தர்ப்பையால் கட்டுதல்:
கூறைப்புடைவை அணிந்து வந்த பெண்ணின் இடுப்பில் தர்ப்பையில் செய்த கயிற்றைக் கட்டுவார்கள். ‘நல்ல மனம், குழந்தைகள், சுமங்கலியாக நீண்ட நாள் வாழும் தன்மை, ஆரோக்கியமான நல்ல உடல், இவற்றை வேண்டிப் பெற்றுக்கொண்டவளாகவும், கணவனை நல்லொழுக்கத்துடன் பின்பற்றும் விரதத்தை மேற்கொள்பவளாகவும், இவள் தூய்மையை உணர்த்தும் நெருப்பின் முன் நிற்கிறாள். இவளைத் தர்ப்பையாகிய கயிற்றால், விவாகம் என்னும் புனிதமான காரியத்துக்காகக் கட்டுகிறேன்’ என்பதே இதன் பொருள்.
தேவதைகளை வேண்டும் தேவதா சம்பந்தம் உள்ள மந்திரம் இதை அடுத்துச் சொல்லப்படுகிறது. மணப்பெண்ணை, சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். அதன் பின்னரே அவள் மணமகனுக்கு உரியவளாகிறாள்.
இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது, ‘தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவளை எப்படி மனைவியாக ஏற்கலாம்?’ என்று கேட்கத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. ஒரு பெண்ணை சிறுவயதில் எத்தனையோ பேர் ஆசையாகத் தூக்கியிருப்பார்கள். இதனாலெல்லாம் அந்தப் பெண்ணுக்குக் களங்கம் ஏற்பட்டு விடுகிறதா என்ன?
ஒரு பெண்ணின் சரீரத்தில் ரோமம் உண்டாகும்போது சோமன் என்ற தேவன் அவளைப் பாதுகாக்கிறான். ‘ரஜஸ்’ ஏற்படும்போது (ருதுவாகுதல்) கந்தர்வன் அவளைப் பாதுகாக்கிறான். சோமதேவன் கன்னிப்பெண்ணுக்கு உடல் பலம் அளிப்பவன்; கந்தர்வன் அவளுக்கு அங்க அழகுகளை கொடுப்பவன்; அக்னி அவளுக்கு யௌவனத்தின் பிரகாசத்தைக் கொடுப்பவன். இவற்றைப் பெற்று, இந்த இயற்கை சக்திகளின் ஆசி உடலில் மேன்மையை அளித்த பிறகுதான அவள் கணவனை அடைய முழுத்தகுதி பெறுகிறாள். அவ்வாறு அந்தப் பெண்ணைக் காத்து அருள்பாலித்த தேவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த மந்திரங்கள் சொல்லப்படுகின்றன.

கன்னிகாதானம்:
தானங்களிலேயே மிகவும் உத்தமமான தானமாகப் போற்றப்படுவது கன்னிகாதானம். தான் அருமை பெருமையாக வளர்த்த பெண்ணை, தகுந்த வரனுக்கு தானமாகத் தருவதே கன்னிகாதானம். கன்னிகாதானம் செய்பவரின் 21 தலைமுறைகள் நற்கதி அடைவார்கள் என்பது சாஸ்திரம். கன்னிகாதானத்தின்போது பெண்ணின் தந்தை ஒரு மந்திரம் சொல்வார். அந்த மந்திரத்தின் பொருள்: “பொன்நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ள என் கன்னிகையை திருமாலின் சொரூபியான திருநிறைச்செல்வா! உனக்குத் தானமாக அளிக்கிறேன். ஏற்றுக்கொள்.. என் மூதாதையர்களும், வருங்கால சந்ததிகளும் பிரும்மலோகத்தில் நித்யானந்த பதவியைப் பெறவே இந்த உத்தமமான மகாதானத்தைச் செய்திருக்கிறேன். இந்த தானத்தால் என் பித்ருக்கள் கடைத்தேறுகிறார்கள். இந்த மங்களயோகத்திற்கு இவ்வுலகைக் காக்கும் பஞ்சபூதங்களும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்) சாட்சிகள். எல்லா தேவதைகளும் சாட்சிகள். என் பெண்ணே! நீ என் எதிரில் என்றும் காட்சியளிப்பாயாக! உன் இரு பக்கங்களிலும் பரமேசுவரியே காட்சி தருகிறாள். நீ தேவி அருள் பெற்ற உத்தமி. நீ எனக்கு எல்லாப் பக்கங்களிலும் பெருமை அளிப்பாயாக. உன்னை இந்த நல்ல மணமகனுக்குத் தானம் அளிப்பதால், நான் நற்கதி அடைவேன். மோட்ச சாம்ராஜ்யத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலி நான்!”

திருமண மாங்கல்யம்
மாங்கல்யதாரணம்:
அடுத்து மாங்கல்யதாரணம் நிகழ்கிறது. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் காட்டும் அடையாளம் அது!
‘மாங்கல்யம் தந்துநாநே’ – என்ற மந்திரம் சொல்லி மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுகிறான். அந்த மந்திரத்தின் பொருள்: “இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!’
அப்போது போடப்படும் ‘மூன்று முடிச்சு’கள் அர்த்தபுஷ்டியானவை. கணவன் ஒரு முடிச்சு போட, கணவர் வீட்டார் சார்பில் கணவனின் தங்கை மற்ற முடிச்சுகளைப் போடுகிறாள். ஏன்? கணவன் மட்டுமல்லாது, கணவனின் வீட்டாரும் அவளை மகிழ்ச்சிகரமாக தம் குடும்பத்தோடு இணைந்து பந்தத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்த மூன்று முடிச்சுகளில் பல தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம். அதுமட்டுமின்றி, உலகியல்படி, தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் அவள் மதிக்கவும் – திரிசுரணசுத்தியாக மனம் – வாக்கு – உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் காக்கவும் – முக்காலமும் உணர்ந்து இல்லறதர்மத்தைப் பேணவும் – இந்த மூன்று முடிச்சுகள் அடையாளமாகத் திகழ்கின்றன.

சப்தபதி:
இதைத் தொடர்ந்து சப்தபதி என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்து சட்டங்கள் கூட இந்த சப்தபதிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த ‘சப்தபதி’ முடிந்தால்தான் முழுமையாகத் திருமணம் நிறைவேறியதாக அது ஏற்றுக்கொள்கிறது.
மணமகளின் கால்கட்டை விரலைப் பற்றி, மணமகன் தன் வலது கட்டைவிரலைக் கொண்டு, அவளை ஏழு அடிகள் எடுத்து வைக்கச் செய்கிறான். இந்த ஏழு அடிகளையும் யோக பூமியாகப் பாவித்து அவற்றின் மூலம், அவளுடைய உயிரைத் தன் உயிரோடு சேர்த்து, ஓருயிராக இணைத்துக் கொள்கிறான். அப்போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள்:
“ஏழு அடிகளைத் தாண்டிய நீ எனக்கு வாழ்க்கையில் தோழியாக வேண்டும். இதன்மூலம் நான் உன் நட்பை அடைகிறேன். நண்பர்களாகிய நாம் ஒருவிதமாகச் சங்கற்பம் செய்து கொள்வோம். நல்ல அன்புள்ளவர்களாகவும், ஒருவரை ஒருவர் விரும்பி நேசிக்கிறவர்களாகவும், உணவையும் – பலத்தையும் சேர்ந்து அனுபவிப்பவர்களாகவும், பரஸ்பரம் நல்ல ருசி உள்ளவர்களாகவும் வாழ்வோம். நமக்குள் எல்லா விதத்திலும் கருத்து ஒற்றுமை நிலவட்டும். இல்லற தர்மத்தை இணைந்து கடைப்பிடிப்போம். விரதங்களை சேர்ந்து அனுபவிப்போம். நான் ஸாமாவாக இருக்கிறேன்; நீ ருக்காக இருக்கிறாய். நான் மேலுலகமாக இருக்கிறேன்; நீ பூமியாக இருக்கிறாய். நான் சுக்கிலமாக இருக்கிறேன்; நீ சுக்கிலத்தை தரிப்பவளாக இருக்கிறாய். இவ்விதம் ஒற்றுமையாக வாழ்ந்து குழந்தைகளையும் – பிறசெல்வங்களையும் அடைவதற்காகவும், இன்சொல் உள்ளவளே நீ வருவாயாக!” என்று இந்த நிகழ்ச்சியில் மணமகன் மணமகளை அழைக்கிறான். இந்த மந்திரத்திற்கு ‘ஸகா’ என்று பெயர். மனோதத்துவ அடிப்படையில் ஒருவரையொருவர் சார்ந்தும் இணைந்தும் வாழத் தயார் செய்து கொள்கிறார்கள் இந்த அர்த்தமுள்ள சடங்கில்!

திருமண சடங்கு
அம்மி மிதிப்பது:
அடுத்த சடங்கு அம்மி மிதிப்பது. மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். “இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்” என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.

பொரியிடுதல்:
இன்னொரு முக்கியமான சடங்கு பொரியிடுதல் (லாஜ ஹோமம்). மணப்பெண்ணின் சகோதரன் பொரியைச் சகோதரியிடம் கொடுத்து அக்னியில் இடச் செய்கிறாள். கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், புத்திசாலிகளான – ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறவும், ஒளிமயமான சூரியதேவனுக்குப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதில் பிள்ளை வீட்டாரின் சகோதரர்களையும் ஈடுபடுத்துவது, இரு குடும்பங்களும் இணைவதை உணர்த்துகிறது.

தாலி, சடங்குஅருந்ததி தரிசனம்:
அதன்பின் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? சப்தரிஷிகளின் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வானில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் சப்த ரிஷி மண்டலம் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இந்த நட்சத்திரத் தொகுப்பில் வசிஷ்டர் நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி.

நிறைவாக, மணமக்களுக்குப் பெரியவர்கள் அட்சதை போட்டு ஆசி கூறுகிறார்கள். ஆசீர்வாதம் செய்ய வருபவர்களுக்கு பன்னீரும் – சந்தனமும் தருகிறார்கள், ஏன் தெரியுமா? இந்த மணமக்களைப் பற்றி சிலர் பல்வேறு காரணமாக பகை கொண்டிருந்தாலும், அந்த வினாடியில் கசப்பு மாறி, குளுமையாகவும் – இனிமையாகவும் ஆசி வழங்கத்தான் பன்னீர், சந்தனம், கற்கண்டு விநியோகம்.f4ab

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்காக நடக்கும் வகுப்புக்களினால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சின்ன வயதில் பெண் குழந்தைகள் பருவமடையும் பிரச்சினை

nathan

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்திற்கு

nathan

கொரானா வைரஸிமிடருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்! கட்டாயம் இதை படியுங்கள்…

nathan

அணு சக்தி பேரழிவால் மக்களுக்கு ஏற்படும் அதிர்ச்சிகரமான பாதிப்புகள் – ஆய்வு தகவல்கள்!!!

nathan

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து

nathan

வயிற்று புண்களுக்கு மருந்தாகும் உருளைக் கிழங்கு

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? அப்ப கண்டிப்பா இத படிங்க…

nathan

மாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி. எது தவறு?

nathan