கோபம் உடலையும், மனதையும் வருத்தும் கொடிய நோய்க்கு இணையானது. அளவுக்கு அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும்போது எதிராளிக்கு நிச்சயம் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
பெண்களே கோபத்தால் ஏற்படும் பிரச்சனைகள்
கோபம் உடலையும், மனதையும் வருத்தும் கொடிய நோய்க்கு இணையானது. அளவுக்கு அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும்போது எதிராளிக்கு நிச்சயம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். சிறிது நேரம் கழித்து யோசித்து பார்த்தால், ‘அவசரப்பட்டு கோபத்தில் வார்த்தைகளை கொட்டிவிட்டோமே’ என்ற கவலை மனதை உலுக்கும்.
கோபம் வரும் போது சிலர் வெளிப்படையாக காட்டிவிடுவார்கள். ஒருசிலர் மனதுக்குள் போட்டு புதைத்து விடுவார்கள். இந்த இரண்டுமே சரியானது அல்ல. கோபத்தை வெளிப்படையாக கொட்டித்தீர்க்கும்போது சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். கோபத்தில் பேசியவர்கள் கூறிய வார்த்தைகளை மனதுக்குள்ளே அசைப்போட்டு பார்த்து குமுறுவதும் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும்.
அப்படியென்றால் கோபம் வந்தால் என்னதான் செய்வது?
எத்தகைய சூழ்நிலையிலும் கோபமே கொள்ளாதவாறு மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். ஒருவேளை, ஆத்திரமூட்டும் வகையில் பேசி கோபத்தை கிளறினால் கவனத்தை திசை திருப்பிவிட வேண்டும். அவர்கள் பேசிய எதையுமே பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கோபம் மன நலனை மட்டுமல்ல உடல் நலனையும் பாதிப்புக்குள்ளாக செய்துவிடும். கோபத்தால் ஏற்படும் ரத்த அழுத்தத்தின் தாக்கத்தால் இதய நோய் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடும். சட்டென்று கோபம் கொள்பவர்களுக்கும், பொறுமை இல்லாதவர்களுக்கும் அதன் பாதிப்பு அதிகமாககும்.
கோபம் கொள்ளச் செய்யும் வகையில் ஒருவரது நடத்தை அமைந்தால் அதை பெரிதுபடுத்தால், ‘அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்? யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் இல்லாதவர்’ என்று பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். கோபத்தின் உக்கிரம் அதிகமாக வெளிப்பட்டால் மூச்சை சீராக உள்ளிழுத்து சுவாசிப்பது மனதை இலகு வாக்கும்.
ஒருசிலருக்கு தண்ணீர் பருகுவதும் கோபதாபத்தை குறைக்க பலன் தரும். எந்தெந்த விஷயங்கள் உங்களை கோபப்படுத்துகின்றன, ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் யார்-யார்? அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றவர்கள் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள பழகி கொண்டாலே கோபம் வெளிப்படுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.
தொடர்ந்து அதிகம் கோபப்பட்டு வந்தால் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும். தியானம் மேற்கொள்வது கோபத்தை கட்டுப்படுத்த கைகொடுக்கும். ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதும் நலம் சேர்க்கும். கோபமூட்டும் வகையில் நடந்து கொள்பவர்களிடம் அவர்களுக்கு இணையாக நடந்து கொள்வது பலகீனமாகவே அமையும். சாதுரியமாக செயல்படுவது உங்களின் மதிப்பை உயர்த்தும்.