சில ஆண்டுகளுக்கு முன்வரை அச்சுறுத்திக்கொண்டிருந்த போலியோவுக்கு 2014-ல் முற்றிலும் முடிவுகட்டியிருக்கிறோம். ஆமாம், தொடர்ச்சியான விழிப்புஉணர்வுப் பிரசாரங்கள் மூலமாகவும் ஆண்டுக்கு இரண்டு முறை இலவச போலியோ சொட்டு மருந்து அளித்தல் மூலமாகவும் போலியோ இல்லாத தேசத்தை சாத்தியாமாக்கி இருக்கிறோம். இந்த சாதனையை மேலும் மேலும் தொடர்வோம்! ஊனமற்ற எதிர்காலத்தை நம் குழந்தைகளுக்கு உத்தரவாதப்படுத்துவோம்.
போலியோ என்றால் என்ன?
போலியோ என்பது தொண்டை மற்றும் குடல்பகுதியில் வசிக்கும் வைரஸ் கிருமி ஏற்படுத்தும் மோசமான தொற்றுநோய். பாதிக்கப்பட்டவரின் மலம், வாந்தி, சளி மூலம் இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாகப் பரவும். இதனால், பக்கவாதம், நிரந்தர உடல் உறுப்பு செயல் இழப்பு, மரணம்கூட ஏற்படக்கூடும்.
போலியோ தடுப்பு மருந்துகள்
போலியோவுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளன. இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் போலியோ பாதிப்பில் இருந்து முழுமையாகத் தப்பிக்க முடியும். செயல்திறன் நீக்கப்பட்ட போலியோ வைரஸ் வேக்சின் (Inactivated poliovirus vaccine – IPV) எனும் தடுப்பூசியும், ஓரல் போலியோ வைரஸ் வேக்சின் (Oral poliovirus vaccine – OPV) எனும் சொட்டுமருந்தும் புழக்கத்தில் உள்ளன.
கட்டாயம் அளிப்போம்!
பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுப்பது மிகவும் அவசியம்.
குழந்தை பிறந்தவுடன் ஒருமுறை மற்றும் ஒன்றரை, இரண்டரை, மூன்றரை, நான்கரை, மாதங்களில் தலா ஒருமுறை என போலியோ டிராப்ஸ் அளிப்பதை ‘பிரைமரி டோஸ்’ என்கிறோம். அடுத்ததாக ஒன்றரை மற்றும் ஐந்து வயதுகளில் ‘பூஸ்டர் டோஸ்’ என்கிற பிரத்யேக போலியோ சொட்டு மருந்து புகட்டலும் அளிக்கப்படுகிறது.
இது தவிர, குழந்தையின் ஐந்து வயது வரை அரசு அளிக்கும் போலியோ சொட்டு மருந்து முகாமையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்த குழந்தை களுக்கும் மீண்டும் கொடுக்கலாம்.
உடல்நலம் குறைவாக இருக்கிறது என்பதற்காக போலியோ சொட்டுமருந்து அளிக்காமல் இருக்க வேண்டாம்.
இந்த சொட்டு மருத்து முற்றிலும் பாதுகாப்பானது, உயர் தரத்திலானது.
மீண்டும் மீண்டும் சொட்டு மருந்து அளிப்பதன் மூலம் போலியோவுக்கான வாய்ப்பு மேலும் மேலும் தடுக்கப்படுகிறது.