பொதுவாக உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை பெற, வறுத்து அல்லது பொரித்து சாப்பிடாமல், ஆவியில் வேக வைத்து சாப்பிடுவோம். ஆனால் சில உணவுப் பொருட்களை பச்சையாக, அதாவது வேக வைக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் தான் அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும்.
இக்காலத்தில் நோய்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஒவ்வொருவரும் உண்ணும் உணவுகளில் அதிக கவனம் காண்பிக்க வேண்டும். எந்த உணவுப் பொருளை எப்படி சாப்பிட்டால் நல்லது என்று ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
இங்கு அப்படி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சையாக சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
நட்ஸ் நட்ஸ்களில் உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய நல்ல கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. மேலும் நட்ஸ்களை சாப்பிட்டால், அவை இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைத்துவிடும். அதுமட்டுமின்றி, நட்ஸ் இரத்தம் உறைவதைத் தடுத்து, தமனிகளில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வழிவகுக்கும்.
ப்ராக்கோலி காலிஃப்ளவர் போன்று இருக்கும் ப்ராக்கோலியை பச்சையாக சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மைரோசைனேஸ் என்னும் நொதி, கல்லீரலில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை வெளியேற்றிவிடும். மேலும் ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டால், அந்த நொதிகள் செயலிழக்கப்படும். எனவே ப்ராக்கோலியை அவ்வப்போது பச்சையாக சாப்பிடுங்கள்.
பூண்டு பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள அல்லிசின் என்னும் கலவை டி.என்.ஏ-வைப் பாதுகாக்கும். ஒரு நிமிடம் பூண்டை வேக வைத்தாலும், அதில் உள்ள அல்லிசின் செயலிழக்கப்பட்டுவிடும். எனவே தினமும் ஒரு பூண்டை பச்சையாக சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
தேங்காய் தினமும் சிறிது தேங்காய் துண்டை பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்களை கரைத்து குறைத்து, மூளை மற்றும் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
விதைகள் விதைகளான ஆளி விதை, பூசணி விதை போன்றவற்றில் புரோட்டீன், ஜிங்க் வளமாக நிறைந்துள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கும். முக்கியமாக இந்த விதைகள் பச்சையாக இருக்கும் போது தான் இச்சத்துக்கள் வளமையாக இருக்கும். எனவே இந்த விதைகளை சாலட்டுகளில் தூவி சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
பச்சை இலைக் காய்கறிகள் பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் சி மற்றும் ஈ, நார்ச்சத்து, நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவற்றைப் பெறலாம்.
முளைக்கட்டிய பயிர்கள் முளைக்கட்டிய பயிர்களில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் குளோரோபில் போன்றவற்றை அதிகம் உள்ளது. இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, உடலுக்கு பாதுகாப்பை வழங்கும்.
புளிக்கும் உணவுகள் புளிக்கும் உணவுப் பொருட்களில் புரோபயோடிக்ஸ், செரிமான நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கும். உதாரணமாக, புளிக்க வைத்த தயிர், வீட்டில் செய்யும் ஊறுகாய் போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது.