நமக்கு அன்பளிப்பு தந்தவர்களின் அன்பையும், நேசத்தையும் தான் பார்க்க வேண்டுமே தவிர, அன்பளிப்பாக அளித்த பொருளின் மதிப்புக்கு ஏற்ப அன்பையும், நேசத்தையும் அளவிடக்கூடாது.
அன்பை அதிகரிக்கும் அன்பளிப்புகள்
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்களில் ஒன்று அன்பளிப்புகள் வழங்குவது. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவர்கள் மனம் கவரும் வகையில் பழங்கள், இனிப்புகள் மற்றும் பிற பொருட்களை அன்பளிப்பாக கொடுப்பது தமிழர்களின் வழக்கமாகும். இந்த அன்பளிப்புகள் வழங்கும் பழக்கம் காலகாலமாக இருந்துவருகிறது. தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்கப்படுவதே அன்பளிப்பாகும்.
ஒருவர் தான் வசிக்கும் இடத்தில் உள்ள சிறப்பான பொருட்களை வெளியூரில் உள்ள தனது உறவினர், நண்பர்களுக்கு கொடுக்கும் பழக்கமே அன்பளிப்பாக மாறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இந்த அன்பளிப்புகள் உணவு மற்றும் பாதுகாப்பு கருவிகளாக இருந்துள்ளது. பின்னர் காலப்போக்கில் நாகரிகம் வளர வளர அன்பளிப்பாக வழங்கும் பொருளின் தன்மையும் மாறிவிட்டது.
அன்பளிப்பாக வழங்கும் பொருள் சிறியதோ, பெரியதோ அல்லது பண மதிப்பு மிக்கதோ இல்லையோ எந்த நிபந்தனையும் இன்றி வழங்கப்பட வேண்டும், பெறப்பட வேண்டும். மேலும் நமக்கு அன்பளிப்பு தந்தவர்களின் அன்பையும், நேசத்தையும் தான் பார்க்க வேண்டுமே தவிர, அன்பளிப்பாக அளித்த பொருளின் மதிப்புக்கு ஏற்ப அன்பையும், நேசத்தையும் அளவிடக்கூடாது. விலை உயர்ந்த அன்பளிப்பு கொடுத்தவர்களிடம் அதிக அன்பையும், சாதாரண அன்பளிப்பு கொடுத்தவரிடம் குறைந்த அளவிலும் மதிப்பையும், மரியாதையும் செலுத்தக்கூடாது.
வண்ண வண்ண காகிதங்களில் அன்பளிப்பு பொருட்களை சுற்றி வழங்கும் பழக்கம் நாகரிக காலத்தில் விரும்பத்தகுந்ததாக உள்ளது. இப்போதும் திருமணம், பிறந்த நாள், புதுமனை புகுவிழா போன்ற விழாக்களில் பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், ரொக்கப்பணம் போன்றவை அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
நாம் அன்பளிப்பாக வழங்கும் பொருள் நினைவுச்சின்னமாக, நமது அன்பை நினைவுபடுத்தும் விதமாக அமைய வேண்டும். எனவே பரிசளிக்கும் போது மரக்கன்றுகள், கல்வி உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், வேலைப்பாடுகள் அமைந்த பொருட்கள் போன்றவற்றை பரிசாக வழங்கலாம்.
அன்பளிப்புகள் வழங்குபவர்களுக்கு பிரதிபலனாக (அன்பளிப்பு பெறுபவர்) பதில் அன்பளிப்பு கொடுப்பதும் நல்ல பழக்கமாகும். அன்பளிப்புகளுக்கு பதில் அன்பளிப்பு கொடுக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றாலும் அன்பளிப்பு வழங்கியவரை மதிக்கும் வகையில் நன்றியை புன்னகையுடன் தெரிவிப்பது நமது கடமையாகும்.