பள்ளிக்காதல், பருவக்காதல், கல்லூரிக்காதல் என பலதரப்பட்ட காதல் இருந்தாலும் ஒரே அலுவலகத்தில் ஏற்படும் காதல் சற்று பிரச்சனையான ஒன்றுதான். வேலை பார்க்கும் இடத்திலே காதல் வசப்படுவது, வேலையில் இருக்கும் அவர்களது கவனத்தை குறைத்துவிடுகிறது. திறமையானவர்கள்கூட காதல் வசப்படும்போது, திறமையை பணியில் காட்டாமல் காதலில் காட்டிவிடுகிறார்கள்.
அதனால் தவறுகள் நிகழும்போது, அலுவலகத்தில் பிரச்சனைகள் தோன்றும். காதலனும், காதலியும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும்போது ஒருவர் மீதுதான் இன்னொருவர் கவனம் இருக்குமே தவிர, வேலையின் மீது முழு கவனமும் செல்லாது. ஒரு ஜோடி காதலிப்பது தெரிந்துவிட்டால், இருவரில் யார் இயல்பாக தவறு செய்தாலும், அதற்கு காதல் சாயம் பூசிவிடுவார்கள். அதனால் தவறு பெரிதாக்கப்பட்டு, வேலையையே இழக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.
மேலதிகாரியாக இருப்பவர் ஆண் என்றால், அவருக்கு கீழ் வேலை பார்க்கும் அனைத்து பெண்களையும் அவர் சமமாக பாவிக்கவேண்டும். அவர், அந்த பெண்களில் ஒருத்தி மீது காதல்வசப்பட்டுவிட்டால் அவளுக்கு சாதகமாக நடந்துகொள்ளத் தொடங்குவார். அவளுக்கு நிறைய சலுகைகளை வழங்குவார். அவள் செய்யும் தவறுகளையும் மறைத்துவிடுவார். சிலரோ தன் காதலி செய்யும் தவறை மறைக்க, வேறு யார் மீதாவது அந்த பழியை போட்டுவிடவும் செய்வார்கள்.
அவர்கள் இருவரும் அலுவலகத்தில் இருக்கும்போது தங்கள் பணி என்ன என்பதை மறந்து காதல் கொள்ளும்போது, அடுத்தவர்களுக்கு கேலிப்பொருளாகவும் அவர்கள் மாறிவிடுவார்கள். காதலர்கள் அலுவலகத்தில் எவ்வளவு கவனமாக இருந்து காதலை வளர்த்துக்கொண்டிருந்தாலும், விரைவாகவே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறார்கள். காதல் கொள்வது தவறில்லை, ஆனால் அவ்வாறு காதல் வயப்பட்டாலும், அந்த காதலை பொறுமையாக வெளிப்படுத்தி, அலுவலகத்தில் நாகரீகமாக நடந்துகொண்டு, அலுவலகப்பணிகளையும் சரியான முறையில் கையாண்டால் எவ்வித பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.