23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p86a 11300
ஆரோக்கிய உணவு

ரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்?

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு’ என்பது பழமொழி. நல்ல பொருள்களை வியாபாரியிடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தாமல் நோய்களை வரவழைத்துவிட்டு அதன்பிறகு வைத்தியனிடம் போய் நோய்க்காக பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்பதே அதன் பொருள். அந்த வரிசையில் அந்தக்காலத்தில் வாணியன் என்று சொல்லப்படுபவர்கள் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் விற்கும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தரமானவையாக இருந்ததோடு ஆரோக்கியம் காக்கக்கூடியவையாக இருந்தன. சுத்தமான செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்துவதன்மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் எந்த ஒரு நோயும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும். ஊட்டச்சத்துள்ள எண்ணெய்களைப் பயன்படுத்தியதால்தான், நம் முன்னோர் நோய் நொடி எதுவும் அண்டாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்.

செக்கு எண்ணெய்

நம் வாழ்வில், எண்ணெயின் பங்கு இன்றியமையாததாகி விட்டது. நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் பெரும்பாலும் எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. மொறுமொறு வடை, முறுகலான தோசை, போண்டா, பஜ்ஜி என நாவுக்கு ருசி தரும் உணவுகள் அனைத்துமே எண்ணெயில் தயாரிக்கப்படுபவையே. இதைக்கண்ணுற்ற நம்மில் பலர்… இதை எந்த எண்ணெயில் செய்தார்களோ, எத்தனை நாள் ஆனதோ என்று கருத்துச் சொல்லிகள் விளம்பினாலும் நாம் நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் எண்ணெய்கள் மட்டும் ஆரோக்கியமானதா? என்று கேட்டால் அதுவும் கேள்விக்குறியே.

அன்றாடச் சமையலில் நாம் பயன்படுத்தும் ரீஃபைண்ட் ஆயில்களில் எந்தவொரு உயிர்ச்சத்துகளும் இல்லை. அதற்குக் காரணம் எண்ணெய் தயாரிக்கப்படும் முறையே. ஆம், கம்பெனிகளில் எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய்களில், எண்ணெயை மட்டும் பிரித்து எடுப்பதில்லை. அதில் உள்ள உயிர்ச்சத்துகளையும் சேர்த்தே பிரித்து எடுத்து விடுகிறார்கள். அதிகமான வெப்பத்தில் எந்திரங்கள் எண்ணெயை பிரித்தெடுப்பதால் அது முழுமையான ரசாயனத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இதைப் பயன்படுத்துவதால் நமக்கு ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன், புற்றுநோய் போன்றவை வர வாய்ப்புள்ளது. ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் எனப்படுவது இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை, அதன் கொழகொழப்புத் தன்மையை, தேவையான கொழுப்புச்சத்தை நீக்குவதே. ஆகவே, இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு செக்கில் ஆட்டப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவதே.

செக்கு எண்ணெய்

செக்குகள் பெரும்பாலும் மரம் மற்றும் கல்லால் செய்யப்படக்கூடியவை. முற்காலங்களைப்போல மாடுகளைக்கொண்டு இயக்கப்பட்ட செக்குகள் இப்போது மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன. குறைந்த திறன் கொண்ட மோட்டார்களே போதுமானது. இவை அதிகமான வெப்பத்தை வெளியிடுவதில்லை. இதன்மூலம் ஆட்டப்படும் எண்ணெயில் உயிர்ச்சத்துக்கள் அப்படியே இருக்கும். செக்குகளில் அரைத்துப் பெறப்படும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. மேலும் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் ஆகிய சத்துகள் உள்ளன.

செக்கு

இந்தத் தாதுப்பொருட்கள் நம் கை, கால் மூட்டுகளுக்குச் சென்று எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடியவை. எலும்பு தேய்மானத்தைத் தடுக்கக்கூடியவை. செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நல்ல நிறமாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். மேலும் கொழகொழப்பாகவும் காணப்படும். இதனால் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைக் கொடுக்கக் கூடியது.

செக்கு மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தினால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

தேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

விளக்கெண்ணெய் குடலை சுத்தப்படுத்தும்.

செக்கு

நல்லெண்ணெய் முதுமையைத் தாமதப்படுத்தும். மூலம், மாதவிலக்கு போன்ற பிரச்னைகளைப் போக்கக்கூடியது. உடலுக்கு உறுதியைத் தரக்கூடியது. பல்வேறு நற்குணங்களைக் கொண்டிருப்பதாலே எள் எண்ணெய் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது `குயின் ஆஃப் ஆயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் எள் ஆட்டப்படும் போது கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து ஆட்டப்படும். இது செக்கை அதிக வெப்பமாக்க விடாது, மேலும் இனிப்புச் சுவையையும் கொடுக்கும்.

செக்கு எண்ணெய் வாங்கும்போது நாம் சில விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். செக்குகளில் இரும்புச் செக்கும் உண்டு. இரும்புச் செக்கும் வெப்பமடையும் தன்மை கொண்டது. பெரும்பாலும் மரச்செக்குகளில் தயாரிக்கும் எண்ணெயை வாங்குவது நலம்.

தேங்காய் கொப்பரைகள் கெட்டுப் போகாமல் இருக்க சிலர் சல்ஃபரை பயன்படுத்துவதும் உண்டு. இதையும் விசாரித்து வாங்குதல் நலம். “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பது திருமூலரின் பாடல். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன்மூலம் நாம் உயிரை வளர்க்க முடியும். நாம் உண்ணும் உணவே நம் உடலின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. நாம் பயன்படுத்தும் எண்ணெய்களே நம் உணவின் தரத்தைத் தீர்மானிக்கின்றன. நல்ல தரமான எண்ணெயைப் பயன்படுத்துவோம்! நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்!

p86a 11300 1

Related posts

சுவையான சாதம் கஞ்சி சூப்

nathan

இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம்!….

sangika

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

nathan

ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

nathan

ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க முருங்கைக்காயில் இவ்வளவு நன்மைகளா?..

nathan

தெரிஞ்சிக்கங்க…பலா பழத்தை இப்படியெல்லாம் சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து?

nathan

உங்களுக்கு தெரியுமா முயல் கறி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்

nathan

மீண்டும் சூடேற்றக்கூடாத விஷமாக மாறக்கூடிய உணவுகள்!!!

nathan