ஆத்திரத்தில் கோபப்பட்டு வார்த்தைகளை உதிர்த்து உறவில் விரிசல் ஏற்படுவதை விட, கால தாமதம் செய்து பின்னர் பேசுவதுதான் புத்திசாலித்தனம்.
பெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறு
கோபம் உணர்ச்சிகளை தூண்டி விட்டு வார்த்தைகளில் வன்மத்தை புகுத்திவிடும். ஒருவர் மீது கடும் கோபம் ஏற்படும்போது அவரை பார்த்து நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிட வேண்டும் என்று மனம் துடிக்கும். ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி திட்டிவிட தோன்றும். அந்த அளவுக்கு கோபத்துக்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும் கோபத்தை கட்டுப்படுத்துவதுதான் தனி மனிதனுக்கு அழகு. அதற்காக கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது, உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லக்கூடாது என்றில்லை. கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தான் தவறு.
கோபத்தை கட்டுப்படுத்தி சில நிமிடங்கள் யோசித்து பாருங்கள். உங்கள் கோபத்தின் தன்மையை பரிசீலித்து பாருங்கள். நிச்சயம் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படும். உச்சக்கட்ட கோபத்தில் இருந்தபோது வெளிப்பட்ட உங்கள் ஆதங்கம் படிப்படியாக குறைந்து போயிருக்கும். பின்பு கோபத்தை வெளிக்காட்டும் விதமும் மாறுபடும். எதற்காக கோபப்படும் விதத்தில் நடந்து கொண்டார் என்பதை பரிசீலனை செய்யும் மனப்பக்குவம் ஏற்படும்.
அவரை சந்திக்கும்போது உணர்ச்சியும், ஆத்திரமும் கொந்தளிக்காது. கோபத்தை கைவிட்டுவிட்டு எப்போதும்போல இயல்பாக பேச முயற்சிப்பீர்கள். அவரிடம் கோபமாக இருந்தபோது பேச நினைத்த விஷயங்களை புன்னகைத்தபடியே பேசிவிடுவீர்கள். அவரே தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவும் செய்யலாம்.
தணியாத கோபமாக இருந்தாலும் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்களே தோன்றும். இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை பொறுமையாக எடுத்துரைக்கும் சூழல் நிலவும். தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகும். ஆத்திரத்தில் கோபப்பட்டு வார்த்தைகளை உதிர்த்து உறவில் விரிசல் ஏற்படுவதை விட, கால தாமதம் செய்து பின்னர் பேசுவதுதான் புத்திசாலித்தனம்.