ஆர்கானிக் முதல் ‘நீண்ட நாள் கெட்டு போகாது’ என்று விளம்பரப்படுத்தும் உணவுகள் வரை நாம் தேர்வுசெய்ய ஏராளமான உணவுப் பொருட்கள் இருக்கின்றன. இதில் எது நல்லது, எதைச் சாப்பிடுவது என்ற கேள்விக்கு பதில் அளிப்பது சற்று
குழப்பமானதுதான்.உணவு விஷயத்தில் `பழையன’ என்று எதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பழைய உணவு முறைகள் புதியவர்களுக்கும் ஏற்றவைதான்! அதைப் புரிந்துகொண்டால் நன்மைகள் ஏராளம். நம் வாழ்க்கை முறையில் தினசரி நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்று பார்ப்போம். உணவு விஷயத்தில் எது சரி, எது தவறு என்று தெரிந்துகொள்வோம்.
‘சர்க்கரை’ உணவுகள்!
நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகளில் `ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’ (High fructose corn syrup) எனும் ரசாயன இனிப்பு சேர்க்கப்படுகிறது. சர்க்கரை என்ற பெயருக்கு பதிலாக சிரப், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ், கேன் ஜூஸ், ஸ்வீட்னர் எனப் பல வகைப் பெயர்கள் உள்ளன. இவை அனைத்துமே உடல்நலத்துக்கு எதிரானவை. இவற்றைத் தவிர்ப்பது அல்லது குறைவாக சாப்பிடுவது நல்லது.
கெமிஸ்ட்ரி வார்த்தைகளா. வேண்டவே வேண்டாம்!
Cellulose, Ammonium Sulfate, Ethoxylated diglycerides. இதுபோன்ற வாயில் நுழையாத பெயர்களை அச்சிட்டு விற்கும் உணவுப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்ப்பதே சரி. ரசாயன வார்த்தைகளை வைத்துச் சமையல் செய்ய முடியுமா? உப்பு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் போன்ற நமக்குத் தெரிந்த பொருட்களை வைத்துத்தான் சமையல்செய்ய முடியும்.
ஐந்துக்கும் மேற்பட்ட இன்கிரிடியன்ட்ஸ்!
பேக் செய்யப்பட்ட நொறுக்குத்தீனி லேபிளில், ஐந்துக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் இருந்தால், அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு தவிர்த்துவிடலாம். கடையில் நம் கண் முன்னே பொரித்துத் தரும் உருளைக்கிழங்கு சிப்ஸில், காரம் மற்றும் உப்புப் போட்டுக் கொடுப்பார்கள். அதே உருளை சிப்ஸைத்தான் கலர் கலர் பாக்கெட்களில் காற்றடைத்து விற்கிறார்கள். பாக்கெட் செய்யப்பட்டால் மட்டும் ஏன் இத்தனை சுவையூட்டிகள், இன்கிரிடியன்ட்ஸ்? செயற்கை சுவையூட்டி, பதப்படுத்திகள் உடலுக்கு நல்லதல்ல!
அதிகம் விளம்பரப்படுத்தப்படும் உணவுகள்.
பதப்படுத்தப்படும் உணவுகளுக்கு அதிகமாக விளம்பரம் தரப்படுகிறது. அடிக்கடி விளம்பரப்படுத்தப்படும் உணவுகளைத் தள்ளிவைக்கலாம். தயிரை வெளியில் வைத்தால், இரண்டு நாளில் புளித்துவிடும்; இது இயற்கை. புளிக்காத தயிர், கெடாத பால் என விளம்பரம் செய்யப்படும் உணவுகள் நமக்கு வேண்டாம்.
கெட்டுப்போகிற உணவு. நல்ல உணவு!
கெட்டுப் போகிற உணவுகளே நல்ல உணவுகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்கள் போன்ற உணவுகள் சில நாட்களில் கெட்டுவிடும். ரெடிமேட் ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ், உருளை ஸ்மைலிஸ் போன்ற உணவுகள் பல நாட்கள் ஆனாலும் கெட்டுப்போவதில்லை. இது நம் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியது.
மனிதர்களால் செய்யக்கூடிய உணவுகள்
வீட்டில், கடைகளில் மனிதர்களால் தயாரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடலாம். தொழிற்சாலையில் தயாராகிவரும் உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது. இயந்திரங்கள் தயாரித்துக் கொடுக்கும் உணவுகளைவிட, மனிதர்களால் தயாரிக்கக்கூடிய உணவுகளே மேலானவை.
எதிலிருந்து கிடைக்கிறது என்பது முக்கியம்
பால், முட்டை, பழங்கள், காய்கறி, விதைகள் போன்றவை நல்லவை. `இந்தச் செடியிலிருந்து தயாரிக்கப்பட்டது’, `இந்த விலங்கின் கொழுப்பால் பதப்படுத்தப்பட்டது’ போன்ற பெருமை பொங்கும் வாசகங்களைக் கூறி விற்கப்படும் உணவு பொருட்கள் நல்லவை அல்ல.
சைவம் அதிகம். அசைவம் குறைவு!
விதை, பூ, தண்டு, காய், கனி, கீரை போன்றவற்றை அதிக அளவிலும், முட்டை, இறைச்சி போன்றவற்றை அளவாகவும் சாப்பிட வேண்டும். தட்டில் 70 சதவிகிதம் சைவ உணவுகளுக்கும் 30 சதவிகிதம் அசைவ உணவுகளுக்கும் இடம் கொடுங்கள்.
பல வண்ண உணவுகள்!
தட்டில் பச்சை, மஞ்சள், வெள்ளை, சிவப்பு, போன்ற வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறி, கீரைகள், சிவப்பரிசி போன்ற உணவுகள் இருக்க வேண்டும். இதுவே எல்லா சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவாக இருக்கும்.
ஆரோக்கியமான குடிநீர்!
காய்கறிகள், கீரைகள் போன்றவை தண்ணீரில் வேக வைக்கும்போது, அந்தத் தண்ணீரை சூப்பாக மிளகு, உப்பு சேர்த்து அருந்தலாம்.
எந்த மண்ணில் விளைந்தது?
நம் ஊரில் விளையும் உணவுகளுக்கு முதலிடம் தரலாம். செயற்கையாகத் தயாரிக்கப்படும் மாம்பழ ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்றவை ஆர்கானிக் கிடையாது. மரச்செக்கு எண்ணெய் ஆர்கானிக்; இயந்திரத்தால் தயாரிக்கப்படும் ரீஃபைண்டு எண்ணெய் ஆர்கானிக் அல்ல.
பாட்டியம்மா கண்டுபிடிக்காத உணவு. உணவல்ல!
வீட்டில் உள்ள பெரியவர்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களால் டப்பாக்களில் அடைத்துவைத்திருக்கும் உணவுகளை, ‘உணவு’ எனக் கண்டுபிடிக்க முடிந்தால், அவற்றை நீங்கள் தாராளமாகச் சாப்பிடலாம். மார்கரைன், புரோபயாட்டிக் டிரிங்க், விப் க்ரீம் போன்ற டப்பா உணவுகளைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள். ஆகவே, இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
பெரியதைவிட சிறியது நல்லது!
பெரிய மீன்களைவிட சின்ன மீன்கள் நல்லவை. அளவில் பெரிதாக இருக்கக்கூடிய மீன்களைவிட சிறிய அளவில் இருக்கும் நெத்திலி, மத்தி, சிறிய இறால், காரைப்பொடி மீன்கள் நல்லவை. வஞ்சிரம் போன்ற பெரிய மீன்களைச் சாப்பிட வேண்டுமெனில், சிறிய வஞ்சிரமாக வாங்கிச் சாப்பிடலாம்.
புரோபயாட்டிக் உணவுகள்
தயிர், மோர், யோகர்ட் போன்ற நல்ல பாக்டீரியா இருக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். வைட்டமின் பி12 சத்துக்கள் இவற்றில் இருக்கும்.
இயற்கைச் சுவையூட்டிகள்
இனிப்புச் சுவைக்கு சாக்லேட், கேண்டி, கேக், குக்கீஸ்தான் சாப்பிட வேண்டுமா? இனிப்பான மா, பலா, தேன், கரும்பு போன்றவற்றைச் சாப்பிடலாமே!
வெள்ளை வெளேர்.
பழுப்பு நிற அரிசி, சிவப்பு நிற அரிசி, கறுப்பு நிற அரிசி சாப்பிடலாம். பளிச் வெள்ளையாக இருக்கும் இட்லி, தோசை வேண்டாம், ஏனெனில் தீட்டப்பட்ட அரிசியில் (Polished Rice) சத்துக்கள் இல்லை. பிரெட்டாக இருந்தாலும் பிரௌவுன் பிரெட்டாக இருக்கட்டும்.
வயிறு நிரம்ப வேண்டாம்!
’80 சதவிகிதம் சாப்பிட்டால் போதும்’ என ஜப்பானியர்கள்; ’75 சதவிகிதம் சாப்பிட்டால் போதும்’ என இந்தியர்கள்; ’70 சதவிகிதம் சாப்பிட்டால் போதும்’ என சீனர்கள் என ஒவ்வொருவரும் சில வரைமுறைகள் வைத்திருக்கிறார்கள். யாருமே வயிறு நிறையச் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. சாப்பிட்டு முடித்தவுடன், `எனக்கு வயிறு நிறைந்துவிட்டதா. பசி நீங்கிவிட்டதா?’ என உங்களுக்குள்ளேயே கேள்வி கேளுங்கள். இதற்குப் பதில் ‘இல்லை’ என்றிருக்க வேண்டும்.
எப்போது சாப்பிடலாம்?
பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பொழுதுபோகவில்லை என்று சாப்பிடக் கூடாது. பொழுதுபோக்கச் செய்யவேண்டியது, புத்தகம் வாசிப்பது, விளையாடுவது.
உணவைக் குடி. திரவ உணவுகளைக் கடி!
உணவை மெதுவாக ரசித்து, ருசித்து, அரைத்துச் சாப்பிட வேண்டும். அதாவது, உணவைக் கூழாக்கி விழுங்க வேண்டும். கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை மடமடவென்று குடிக்காமல் உமிழ்நீரோடு கலந்து வாயில் வைத்து ‘சிப்’ செய்து குடிக்க வேண்டும்.
சிறிய பிளேட். சிறிய கிளாஸ்!
பெரிய தட்டில் சாப்பிட்டால், 30 சதவிகிதம் அதிகமாகச் சாப்பிடுவோம். சிறிய தட்டில் சாப்பிட்டால், 22 சதவிகிதம் குறைவாகச் சாப்பிடுவோம். 12 இன்ச் தட்டைவிட 10 இன்ச் தட்டுதான் மேலானது.
அரசன், இளவரசன், பிச்சைக்காரன்
ஒரு நாளைத் தொடங்கும்போது நன்றாகச் சாப்பிட்டால், முழு நாளுக்கான எனர்ஜி கிடைக்கும். இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு, உடல் எடை அதிகரிக்கும். காலையில் அரசனைப்போலவும் மதியம் இளவரசன்போலவும், இரவு பிச்சைக்காரன்போலச் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னது அதற்காகத்தான்!
சாப்பிடுவதற்குத் தனி இடம்
உணவை தரையில் அமர்ந்து சாப்பிடுவது நம் ஊர் முறை. முடியாதவர்கள், டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடலாம். உணவைச் சாப்பிடும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். படுக்கை அறையில் எல்லாம் உணவைச் சாப்பிடக் கூடாது.
உண்டி சுருக்குதல் பெண்டிருக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே அழகு! ஆரோக்கியம்!