மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்
தேவையான பொருட்கள் :
மட்டன் கீமா – 300 கிராம்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பிரட் துண்டு – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முட்டை – 2
பிரட் தூள் – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* மட்டன் கீமாவை நீரில் நன்கு கழுவி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
* பிரட் துண்டை நீரில் ஒருமுறை முக்கி எடுத்து, பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் மட்டன் கீமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கீமாவை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பிரட் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக அனைத்து ஒன்று சேர நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, பின் தட்டையாக தட்டி அதன் நடுவே சிறிது மட்டன் கீமாவை வைத்து மூடி, முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப் ரெடி!!!