கோடை காலத்தில் ஏற்படும் நீர் கடுப்பு, சிறுநீர் பிரச்சனைகளுக்கு தர்பூசணி பழம் மிகவும் நல்லது. இந்த பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி
தர்பூசணி பழம் சாப்பிட சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் அதுவே கொடை வள்ளல். கோடைக் காலத்தில் இதன் விளைச்சல் பன்மடங்காக இருக்கும். அந்தந்த சீசனில் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோடையில் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு. இது கொடி வகையை சார்ந்தது. அதனால் நீர்ச்சத்தும், விட்டமின்களும் அதிக அளவில் உண்டு.
இதில் பழம் மாத்திரம் அல்ல, இப்பழத்தின் தோல், விதை, காய் என அனைத்தும் பயன் தரக் கூடியவை. பழத்தை மட்டும் சாப்பிட்டு அதன் அடிபாகத்தை வீசி விடுகிறோம். பழங்களை கத்தியால் கீறி எடுத்துக் கொண்டு வெள்ளைப் பாகத்தை தயிர் பச்சடியாகவோ, பருப்பு போட்டு கூட்டாகவும் சமையல் செய்து சாப்பிடலாம்.
பழத்தை ஜூஸாக செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் சிறிது மிளகு-சீரகப் பொடி தூவியும் அருந்தினால் உடனேயே பசி எடுக்கும். கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு குளிர் பானங்கள் கொடுப்பதற்கு பதிலாக இப்பழ ஜூஸை வடிகட்டாமல் கொடுக்க, வெயிலில் இழந்த சத்தை மீட்டுக் கொடுக்கும்.
தர்பூசணி பழத்தின் சதை பகுதி முழுவதும் நீர் நிறைந்து காணப்படும். இந்த சதை பகுதியில் கருப்ப நிற கொட்டைகள் அதிகமாக காணப்படும். இது கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலில் உண்டால் தாகத்தையும் கலைப்பையும் தணிக்க கூடிய அற்புதமான பழம். இதை இயற்கை கடவுள் நமக்கு கோடைகாலத்தில் அளித்த அமுதம் என்றே கூறலாம்.
இது குளிர்ச்சி, இனிப்பு சுவையும் கொண்ட பழம். இதில் வைட்டமின் பி1, சுண்ணம்புசத்து மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. இது வெள்ளரிப்பழ இனத்தை சேர்ந்தது. இப்பழத்தை கோசாப்பழம் என்றும் கூறுவர். இப்பழத்தில் அதிகமான சத்தும் கிடையாது, தீமையும் கிடையாது. கோடைகாலத்தில் உண்ண உகந்த ஒரு பழம் அவ்வளவுதான்.
சிறுநீர் வராமல் சிரமப்படுபவர்கள் இப்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் வெளியேறும் சிக்கல் தீரும். நீர் கடுப்பையும், மூளைக்கு பலத்தையும் தரக்கூடிய பழம். கர்ப்பிணிப் பெண்கள் இப்பழத்தை உண்ணலாம். குழந்தை அழகாக பிறக்கும் என்கிறார்கள். சீதளம் மற்றும் குளிர்ச்சி தேகம் உடைவர்கள் சிறிதளவே உண்ணவேண்டும். இதை அதிகமாக சாப்பிட்டால் பித்தத்தை தரக்கூடியது.