ஸ்மார்ட்போன்கள், நமது ஞாபகச் சின்னங்கள் அனைத்தையும் சுமந்து கொண்டு மூளையைத் தூண்டும் வகையில் இருப்பதால் அவை நம்மைவிட்டு அகலாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது.
நாம் ஏன் செல்போனை பிரிய முடியாமல் தவிக்கிறோம்?
* நாம் ஏன் எப்போதும் ஸ்மார்ட்போனை சுமந்து கொண்டு சுற்றுகிறோம்?
* செல்போனை கீழே வைத்துவிட மனம் வருவதில்லையே ஏன்?
* செல்போனுடன் பிரிக்க முடியாத பந்தம் ஏற்பட காரணம் என்ன?
* தொழில்நுட்ப சாதனங்கள் நமது வாழ்க்கை முறையிலும், உறவுமுறைகளிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?
இவை போன்ற கேள்விகளுக்கு விடை தேடி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவின் சுவாரஸ்ய சங்கதிகள் இங்கே…
ஏன் ஈர்ப்பு:
நவீன யுகத்தின் அடையாளமாக மாறிப்போய்விட்டன ஸ்மார்ட்போன்கள். “நீ என்ன மாடல் போன் வைத்திருக்கிறாய்?” என்று விசாரிப்பதும், போனை கையில் வாங்கி அதிலுள்ள வசதிகளை ஆராய்ந்து பார்ப்பதும் நண்பர்கள், உறவினர்களின் புதிய பழக்கமாகிவிட்டது. இந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்களிடம் நமக்கு ஏன் ஈர்ப்பு ஏற்பட்டது?…
“ஸ்மார்ட்போன்கள், நமது ஞாபகச் சின்னங்கள் அனைத்தையும் சுமந்து கொண்டு மூளையைத் தூண்டும் வகையில் இருப்பதால் அவை நம்மைவிட்டு அகலாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது. நிஜத்தில் அது மத்திய நரம்பு மண்டலத்தின் முக்கிய நரம்புபோல நமது உணர்வுகளைத் தூண்டுகின்றன. ஆம், எங்கும் எடுத்துச் சொல்லக் கூடிய ‘டோபமைன் பம்ப்கள்’தான் செல்போன்கள்” என்கிறார் ஆய்வாளர் டேவிட் கிரீன்பீல்டு. இவர் அமெரிக்காவில் ‘இன்டர்நெட் மற்றும் டெக்னாலஜி அடிமை விடுவிப்பு மையம்’ தொடங்கியவர் என்ற சிறப்புக்குரியவர். பல்கலைக்கழகம் ஒன்றிலும் பேராசிரியராக பணி புரிகிறார்.
டோபமைன் என்பது மகிழ்ச்சியான உணர்வுகளைக் கடத்தும் நரம்பு கடத்தியாகும். மனித மூளையில் நீண்ட காலத்திற்கு முன்பே அமையப் பெற்ற தனிச்சிறப்பான நரம்புக் கூறுகளில் இதுவும் ஒன்று. உண்மையில் செல்போன்களும் அந்த நரம்புகள் செய்வது போன்ற மகிழ்ச்சி- கிளர்ச்சியை தூண்டுகிறது என் கிறார்கள் ஆய்வாளர்கள்.
“ஸ்மார்ட்போன்கள் இன்டர்நெட் பயன்பாட்டை எளிமையாக்கின. இன்டர்நெட் பயன்பாடு சமூகத்தில் புதிய வழக்கங்கள் தோன்ற காரணமாகின. நிஜத்தில் பல தடைகளை உடைத்துவிட்ட இன்டர்நெட், பல விஷயங்களில் திருப்தி ஏற்பட காரணமாக அமைந்துவிட்டது. இப்போது அது அடிமைத்தனம் உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. அதற்கேற்ற வகையில் இணையதளங்களில் ஈர்க்கும் விதமான பொறிகள் நிறைய உள்ளன. உதாரணமாக பரிசு அறிவிப்புகள், சலுகைகளை கூறலாம்.
நேரில் சென்று பொருட்களை தேர்வு செய்யும்போது கிடைக்காத சலுகைகள், இருந்த இடத்திலேயே கிடைத்துவிடுவது அவர்களது விருப்பங்களை வெகுவாக பூர்த்தி செய்துவிடுகிறது. இது அவர்களை ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களாக மாற்றிவிடுகிறது. நாளடைவில் ஏதும் சலுகைகள் அறிவிக்காவிட்டாலும் கூட, நாம் அதில் நுழைவதை தடை செய்ய முடிவதில்லை. ஏனெனில் நமது மனம் அதற்குப் பழக்கப்பட்டு விடுகிறது. இதுவே நாம் செல்போனை நோண்டிக் கொண்டே இருப்பதற்கான மூலகாரணம். எல்லாவற்றையும் உள்ளடக்கிய இன்டர்நெட் இருப்பதால்தான், “செல்போன்கள் இன்று மற்ற எல்லாவற்றைவிடவும் மனிதர்களுடன் அதிகம் ஒட்டிக் கொண்ட தொழில்நுட்ப சாதனமாக மாறி உள்ளது” என்கிறார் ஆய்வாளர் டேவிட்.
மேலும் “செல்போன் மற்றும் இன்டர்நெட் அடிமைத்தனத்துக்கு முக்கியக் காரணம் விழிப்புணர்வு இன்மை மற்றும் சரிவர பயன்படுத்தத் தெரியாமை” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஸ்மார்ட்போன்களை மிகுதியாகவும், தவறாகவும் பயன்படுத்துவதாலும் ஏற்படும் பழக்க வழக்க மாற்றங்கள், உறவுமுறை- சமூக சிக்கல்கள் பற்றி எம்.ஐ.டி. பேராசிரியர் ஷெர்ரி டர்கில் கூறு கிறார்…
“நாம் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட தொழில்நுட்பத்திடம் நிறைய எதிர்பார்க்கப் பழகிவிட்டோம். பேச்சை உள்வாங்கும் மனநிலை, ஒத்துழைப்பு கொடுக்கும் தன்மை குறைந்து வாக்குவாத பண்புகள் அதிகரித்துள்ளன. கட்டுக்கடங்காமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பண்பும் அதிகரித்துள்ளது. இதனால் உறவு விரிசல்கள் ஏற்படுகின்றன.
கவனச்சிதறல் – கருத்து மோதல்கள் உயர்ந்துள்ளது. நமது கவன ஆற்றல் சராசரியாக 10 வினாடிகளுக்குமேல் நீடிக்காத நிலைக்கு சுருங்கி உள்ளது. இது நிஜத்தில் தங்கமீன்களின் கவன ஆற்றலைவிட குறைவாகும். இதுபோன்ற தன்மையால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் மாறுகிறது. தெளிவான நோக்கம் இல்லாத மனிதர்கள் பெருகி வருகிறார்கள்.
நாம் மற்றவர்களை கவனிப்பதை தவிர்த்துவிட்டோம். நேருக்கு நேர் சந்தித்து உறவாடும் வழக்கம் மாறிவிட்டது. நம்மை நாமே கவனிப்பதும் குறைந்துவிட்டது. தனிமையை உணரத் தொடங்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். மற்றவர்களுடன் நேரடி தொடர்புக்கு மாறுவதே கவலைகளை கடந்து வாழ்வதற்கான சிறந்த வழி.
தொழில்நுட்ப வசதியால் வங்கிச்சேவை, ஷாப்பிங் தேவை உள்ளிட்ட எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே செய்துவிடுகிறோம். தொழில்நுட்பங்கள் நமக்கு துணையாய் ரோபோக்களையும், மாயத் துணைகளையுமே தந்துள்ளன. நாம் தொழில்நுட்பத்தை உதவியாய்க் கொள்ளலாம். உறவாகவும், துணையாகவும் கொள்ள முடியாது. தொழில்நுட்பங்கள் தொடர்பு கொள்வதற்காக இருக்கலாம். நம்மை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது” என்கிறார் அவர்.
“இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவது ராணுவ ரகசியமோ, ராக்கெட் ரகசியமோ அல்ல. ஸ்மார்ட்போன் திரையை சிறிது நேரம் ஒதுக்கி வைத்தாலே போதும். நேரம் குடிக்கும் அப்ளிகேசன்களை அழித்து விடுவது நல்லது. மற்றவர்களை நேருக்கு நேர் சந்தித்து பேசும் வாய்ப்பை உருவாக்கி வளம் பெறுவோம்” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.