வாழ்கையில் வெற்றிக்கனியை எட்டுவதற்கான தடைகளில் ஒன்று தயக்கம். உதவி கேட்க தயக்கம், வேலை கேட்க தயக்கம், சுய தொழில் தொடங்க தயக்கம், நாம் ஓட்டுபோட்டு தேர்வு செய்த கவுன்சிலரிடம் சாலையை எப்போது சீரமைப்பீர்கள்? என்று கேட்கத் தயக்கம் என எல்லாமே தயக்க மயம்… இதுபோன்ற தயக்கங்கள் நம்மை பின் தள்ளிவிடுகின்றது. வாயில்லாப் பூச்சிகளுக்கு வாழ்கையில் வெற்றி கிடைப்பது மிகவும் சிரமம். இந்தப் பேருந்து கிண்டி செல்லுமா என்று கேட்பதற்கு கூட சிலர் தயங்குவார்கள்.
மகாத்மா காந்தி முதல் முறையாக வக்கீல் தொழிலை தொடங்கியபோது அவர் நீதிமன்றத்தில் தன்னுடைய வாதத்தை முன்நிலைப்படுத்த மிகவும் தயங்கினார். ஆனால் பின்னாளில் இந்தியாவே அவர் பேச்சைக் கேட்கும் வகையில் தன்னுடை தயக்கத்தை விடாமுயற்சியால் விரட்டியடித்து தனித்திறனை வளர்த்துக் கொண்டார்.
அவரது முயற்சியால் தான் நம் நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் கிடைத்தார். நாம் தயங்கத் தயங்க நமக்கான வாய்ப்பு அடுத்த நபருக்கு எளிதில் சென்றுவிடும் என்பதை நாம் மறக்கக் கூடாது. நாம் வாழ்க்கையை கற்றுக் கொள்ளப் பிறந்திருக்கிறோம் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டால் தயக்கம் தயங்காமல் நம்மைவிட்டுச் சென்றுவிடும் அப்புறம் என்ன வெற்றி தானே.