தூக்கம் என்பது வரம்.`நிம்மதியான நித்திரை கொண்டவன் பாக்கியசாலி’ என்பார்கள். லட்சக்கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது இயற்கையான தூக்கம். முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் மட்டும்தான் தூக்கம் வராமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, `இன்சோம்னியா’ எனப்படும் தூக்கமின்மை பிரச்னையால் இளைஞர்கள்கூட அவதிப்படுகிறார்கள்.
தூக்கமின்மை பிரச்னைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உறங்கச் செல்வதற்கு முன்னர் தொழில்நுட்பக் கருவிகளை உபயோகிப்பது, பதற்றம், நடந்ததைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது,எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பொறுப்புகள் அதிகமாகும்போது ஏற்படும் மன உளைச்சல், பணிச்சுமை போன்ற மனரீதியான பிரச்னைகளே இதற்குக் காரணங்கள். ஆனால், ஒருவருக்கு சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், அவர் மனஅழுத்தத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில்கொள்ளவும். ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரங்கள் ஆழ்ந்து தூங்கவேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியம். அதுவும் இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவது, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.
தூக்கம்
சரி… இப்போதைய பரபரப்பான வாழ்வியல் முறையில் தூக்க மாத்திரைகளை உட்கொள்ளாமல், இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்குவதற்கு வழி இருக்கிறதா? இருக்கிறது. `4 – 7 – 8′ என்ற மூச்சுப்பயிற்சி நுட்பத்தை சில மேற்கத்திய நாடுகளில் பரிந்துரைக்கிறார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவர் ஆண்ட்ரூ வீய்ல் (Andrew Weil) என்னும் விஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் எளிமையான வழி.
4 – 7 – 8 மூச்சுப்பயிற்சி நுட்பம்:
* இந்தப் பயிற்சியை செய்வதற்கு முன்னர் வாய் வழியாக உங்கள் மூச்சை `வுஷ் வுஷ்ஷ்…’ என்னும் சத்தத்தை எழுப்பி வெளியேற்ற வேண்டும்.
* முதலாவதாக , வாயைத் திறக்காமல் மூக்கின் வழியாக 1, 2, 3 ,4 என (நான்கு எண்கள்-4) மனதில் எண்ணியபடியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
* இரண்டாவதாக 1, 2 ,3 ,4, 5 ,6 ,7 என (ஏழு எண்கள்-7) மனதில் எண்ணியபடியே மூச்சை அடக்க வேண்டும்.
* இறுதியாக ஒன்று முதல் எட்டு வரை (எட்டு எண்கள்-8) மனதில் எண்ணியபடியே மூச்சை வெளியேற்ற வேண்டும். மூச்சை வெளியேற்றும்போது, மூச்சை உள்ளிழுக்கும் நேரத்தைவிட இரண்டு மடங்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தூக்கம்
பலன்கள்…
மூச்சை உள்ளிழுப்பதற்கும் வெளியேற்றுவதற்கும் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதைவிட அதன் 4 -7 -8 என்னும் எண்ணிக்கையே முக்கியமாகும். மன உளைச்சல் அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலங்கள் வழக்கத்தைவிட அதிகமாகத் தூண்டப்படும். இதனால் உணர்வுகள் சமநிலை அடையாமல் தூக்கமின்மை உண்டாகும். இந்தப் பயிற்சியை செய்வதால், நுரையீரலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைக்கும். இதனால் நரம்பு மண்டலம் தளர்வடைவதோடு, மனமும் அமைதி பெறும்.
இது தூக்கத்துக்கான வழி மட்டுமல்ல; பதற்றம் அடையும்போதும் , மன உளைச்சலின் போதும் அமைதியடைய நாம் செய்யக்கூடிய ஓர் எளிமையான வழிதான். இந்தப் பயிற்சியை நாள் ஒன்றுக்கு இரு முறை என இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து செய்யுங்கள். 60 நொடிகளில் தூக்கம் நம்மைத் தொற்றிக்கொள்ளும்.
இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், உங்களால் உங்கள் உடலுடன் எளிதாகத் தொடர்புகொள்ளவும், தொடர்பில் இருக்கவும் முடியும். இந்தப் பயிற்சி, அன்றாட வாழ்வில் எழும் எண்ண ஓட்டங்களைக் குறைத்து, நம்மைத் தளர்வாக வைத்திருக்க உதவும். இது நம் நாட்டின் பாரம்பர்யமான பயிற்சியான பிராணாயாமத்தில் இருந்து எடுக்கப்பட்டு, எளிமையாக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை டாக்டர் ஆண்ட்ரூ வீல்ஸே கூறியிருக்கிறார். பிறகென்ன… `4-7-8′ பயிற்சியை இன்றே ஆரம்பித்துவிடலாம்!