தக்காளி சாதம் செய்யும் போது இந்த முறையில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சூப்பரான தக்காளி தேங்காய் பால் சாதம்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
நன்கு பழுத்த தக்காளி பழம் – 4
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – காரத்திற்கேற்ப
பச்சை பட்டாணி – 1/2 கப்
தேங்காய் பால் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் ( விருப்பபட்டால்)
உப்பு தேவையான அளவு.
புதினா இலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு.
தாளிக்க :
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 5
பிரிஞ்சி இலை – 3
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு சிறிதளவு.
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
* 1 கப் அரிசிக்கு 2 கப் நீர் என்ற அளவில் சேர்த்து செய்ய வேண்டும்.
* ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் இரண்டையும் விட்டு நன்றாக காய்த்தும் தாளிக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி நன்றாக வதங்கியதும் பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கி வைத்ததில் பாதி அளவு புதினா, கொத்தமல்லி தழை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக தக்காளி பழம் குழையும் வரை வதக்கவும்.
* அனைத்தும் சேர்ந்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் 1 கப் தேங்காய் பால் சேர்த்து மீதி அளவிற்கு நீரை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
* இந்த நேரத்தில் அரிசியை கழுவி நீர் விட்டு ஊற வைக்கவும்.
* நீர் நன்றாக கொதி வந்ததும் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு நிதானமாக கலந்து விட்டு மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
* அரிசி பாதி வெந்து ஊற்றி இருக்கும் நீர் எல்லாம் சிறிது வற்றியதும் மீண்டும் ஒரு முறை நிதானமாக கலந்து விட்டு மேலே முன்பே நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, மீதமுள்ள புதினா, கொத்தமல்லி தழை தூவி மறுபடியும் மூடி போட்டு அடுப்பை முழுவதும் குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
* 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து சாதம் உடையாமல் மெதுவாக கலந்து பரிமாறவும்.
* சூப்பரான தக்காளி தேங்காய்பால் சாதம் ரெடி.
* இந்த சுவையான தக்காளி தேங்காய்பால் சாதத்தை தயிர் பச்சடி (அ) சைவ, அசைவ குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
குறிப்பு:- அடுப்பை அணைத்ததும் உடனே சாதத்தை கலந்தால் உடைந்து போய் விடும்.