தமிழ் ராக்கர்ஸ் தொடங்கி ஏகப்பட்ட டொரண்ட் தளங்கள் இப்போது பிரபலம். ஒரு படமோ, பாடல்களோ ரிலீஸ் ஆகிவிட்டது என்றாலே “எந்த சைட்ல” என்றுதான் கேட்கிறார்கள். இதிலிருக்க கூடிய சட்ட சிக்கல்கள், எதிக்ஸ் பற்றியெல்லாம் பேசியே ஆக வேண்டும். ஆனால், அதையெல்லாம் விட டெக்னிக்கலாக ஒரு விஷயம் இதில் இருக்கிறது. அது என்ன “டொரண்ட்”? அது எப்படி செயல்படுகிறது? யார் கண்டுபிடித்தது? உங்களுக்குத் தெரியுமா?
டொரண்ட்டின் ஆரம்பம் 2001ஆம் ஆண்டு. பிராம் கோஹன் (Bram cohen) என்னும் பைத்தான் லேங்குவேஜ் புரோகிராமர் ஒருவர் தனது நண்பர்களுக்கு இடையே டவுன்லோடு / ஷேர் செய்ய இந்த அப்ளிகேஷனை உருவாக்கினார். டோரண்ட் என்பது, ஒரு ஃபைலை பலர் பலருக்கு ஷேர் செய்யும் ஒரு அப்ளிகேஷன். கொஞ்சம் எளிமையாக பார்க்கலாம்.
ஒரு திருமணம் நடக்கிறது. அதற்காகும் செலவை சமாளிக்க பெண் வீட்டாருக்கு 5 லட்சம் தேவை. அதை ஒருவரே கடன் தருவது கொஞ்சம் சிரமம். அதையே இப்படி யோசியுங்கள். திருமணத்துக்கு வரும் நண்பர்கள் /உறவினர்கள் என எல்லோரும் கொஞ்சம் தாராளமாக மொய் வைக்கிறார்கள். கடைசியில் தேவையான பணம் சேர்ந்துவிடலாம் இல்லையா? இதைத்தான் டொரண்ட் செய்கிறது.
ஒரு ஃபைல்.. 1 ஜிபி அளவிலானது என வைத்துக் கொள்வோம். அதை குட்டி குட்டியாக பிரிக்கிறது. உதாரணத்துக்கு கபாலி படத்தையே எடுத்துக் கொள்வோம். கபாலி படத்தின் ஹெச்.டி வெர்ஷன் 2 ஜிபி. இதை 200 குட்டி குட்டி பாகங்களாக டொரண்ட் பிரித்து வைத்துக்கொள்ளும். நீங்கள் கபாலியை டெளன்லோடு செய்தால், அது ஒரு சர்வரிடம் இருந்து டெளன்லோடு செய்யாது. பல சிஸ்டம்களில் இருந்து ஒரே நேரத்தில் டெளன்லோடு செய்யும். உங்கள் சிஸ்டமில் அந்த குட்டி குட்டி பாகங்களை ஒன்றிணைத்து கபாலி பட ஃபைலாக மாற்றிவிடும். சரி.. பல சர்வர் என்றால்? யார் யார்?
நீங்களும் மற்ற டொரண்ட் யூஸர்களுமே ஒரு சர்வர்தான். டொரண்ட்டில் seed and leech என்றொரு கான்செப்ட் இருக்கிறது. யாரிடம் ஃபைல் இருக்கிறதோ அவர் seeder. யார் ஃபைல் டெளன்லோடு செய்கிறாரோ leecher. டொரண்ட் தளங்களில் ஒரு ஃபைலை டெளன்லோடு செய்ததும் நம்மை சீட் செய்ய சொல்வார்கள். அதற்கு காரணம், இன்னும் பலர் அந்த ஃபைலை வேகமாக தரவிறக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆக, யார் யார் சிஸ்டமில் கபாலி இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் சீட் செய்தால், புதிதாக டெளன்லோடு செய்கிறவர்களுக்கு வேகமாக வேலை முடியும்.
டொரண்ட்
பழைய டெளன்லோடு முறைப்படி, ஒரு ஃபைல் என்பது ஒரு ஃபைல் தான். ஒரு சர்வரில் இருந்து தரவிறக்குவோம். அதனால் வேகம் இருக்காது. பாதியில் நம் சிஸ்டம் ஆஃப் ஆனாலோ, இணையம் துண்டிக்கப்பட்டாலோ மீண்டும் ஆரம்பத்தில் இருந்து டெளன்லோடு செய்ய வேண்டும். டொரண்ட்டில் அது பல பாகங்களாக இருப்பதால், பாதியில் நின்றாலும் மீண்டும் விட்ட இடத்தில் இருந்தே தொடங்கும்.
டொரண்ட்டில் பல நன்மைகள் இருந்தாலும் சில சிக்கல்களும் உண்டு. ஒரே ஒரு சர்வரில் இருந்து டெளன்லோடு செய்தால் அதில் வைரஸ் இருக்கிறதா என்பதை ஓரிடத்தில் ஃபில்டர் செய்துவிடலாம். பல சிஸ்டமில் இருந்து டெளன்லோடு செய்தால், அதை கட்டுப்படுத்த முடியாது. அதனால், யார் தரவிறக்குகிறார்களோ, அவர்கள் வைரஸுக்கு சரியான பாதுகாப்பை வைத்திருக்க வேண்டும். போலவே காப்பிரைட்ஸ். டொரண்ட்டில் ஷேர் ஆகும் 90% பைல்கள் காப்புரிமை பிரச்னை கொண்டவைதான். கபாலியை கலைப்புலி தாணு அவரது தளத்தில் டெளன்லோடு செய்ய கொடுத்தால் அது லீகல். அதையே யார் யாரோ, டொரண்ட் மூலம் சீட் செய்தால் அது இல்லீகல்.
டிஜிட்டல் உலகில் தினமும் பல ஜிபிக்களை எல்லோருமே ஷேர் செய்கிறார்கள். அந்த அடிப்படையில், ஒரு டெக்னாலஜியாக டொரண்ட் செம அப்ளிகேஷன். ஆனால், அதை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதில் இருக்கிறது விஷயம்.