அலைபாயும் கூந்தல், பளபளப்பான தேகம், மாசுமருவற்ற சருமம், முத்தான பற்கள், காந்தக் கண்கள், செழிப்பான கன்னம், பவழ இதழ்கள், சொக்க வைக்கும் வனப்பு.. இப்படித்தோற்றம் அளிக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?
ஆரோக்கியம்
உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதன் அழகு வெளிப்படுகிறது. ஆகவே வாய்க்குள் போகும் உணவிற்கு ருசியை விட அதன் பயனிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதிக இனிப்பு மசாலா வகைகளையும் ஐஸ்க்ரீம் (Ice Cream) போன்றவைகளையும் எண்ணையில் பொறித்தவைகளையும் நீக்குதல் நல்லது.
இயற்கை தரும் க்ளென்சர்ஸ்
பால் நல்ல க்ளென்சர் என்பதால் தான் கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்துப் பேரழகியாய் இருந்திருக்கிறார் போலும்! குளிர்ந்தபாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. மேக்கப் போடு முன்பு எப்போதும் முகத்தை க்ளென்சிங் இப்படிச் செய்யவேண்டும்.
தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத் தடவிக் கொள்ளலாம்.
வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் தொட்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம்.
பளிச் முகத்துக்கு
பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!
முகப் பொலிவுக்கு
வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகு கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.
மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம் ஜாதிக்காய் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்.. மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்!
கருவளையம் மறைய
கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்… அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.
சருமம் கருமை மாற
முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து மிக்ஸியிலிட்டு சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.
கழுத்தைப் பராமரிக்க
நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும்…. ஒரு ஸ்பூன் வெங்காயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய டபுள் சின் நாளடைவில் சூப்பர் சின் ஆகி விடும்!
முகத்தில் புதுப்பொலிவுக்கு
தர்பூசணி (Watermelon) பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசி வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும்.
பப்பாளிப்பழமும் (Papaya) அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது!
சிவந்த இதழ்களுக்கு
சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்!
நகங்கள் பொலிவு பெற
பாதாம் எண்ணை (Almond Oil) சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும். பேரிச்சம்பழம் (Dates) கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும்.